இந்திய கிரிக்கெட் அணி தங்களது சொந்த மண்ணில் நியூசிலாந்துக்கு எதிராக 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடி வருகின்றது. வதோதராவில் துவங்கிய அந்தத் தொடரின் முதல் போட்டியில் நியூஸிலாந்தை 4 விக்கெட் வித்யாசத்தில் தோற்கடித்த இந்தியா 1 – 0* என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. இதைத் தொடர்ந்து 2வது போட்டி ஜனவரி 14ஆம் தேதி ராஜ்கோட் நகரில் நடைபெற உள்ளது.
அந்தப் போட்டியில் வெற்றி பெற்று ஆரம்பத்திலேயே தொடரைக் கைப்பற்ற இந்திய அணி தயாராகி வருகின்றது. மறுபுறம் கடந்த போட்டியில் நியூஸிலாந்து 49 ஓவர்கள் வரை போராடி தோற்றது. எனவே 2வது போட்டியில் தவறுகளை திருத்திக்கொண்டு வெற்றி பெற்று தொடரை சமன் செய்து இந்தியாவுக்கு பதிலடி கொடுக்க நியூஸிலாந்து தயாராகியுள்ளது.
ஸ்ரேயாஸ் ஐயருக்கு வாய்ப்பு:
இந்நிலையில் அந்தப் போட்டியில் இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரம் ஸ்ரேயாஸ் ஐயர் புதிய சாதனை ஒன்றை படைக்க வாய்ப்புள்ளது. அதாவது கடந்த 2017 முதல் இந்தியாவுக்காக விளையாடி வரும் அவர் ஒருநாள் போட்டிகளில் 68 இன்னிங்ஸில் 2966 ரன்களை 47.84 சராசரியில் குவித்துள்ளார். குறிப்பாக 2023 உலகக் கோப்பையில் அபாரமாக விளையாடிய அவர் 500க்கும் மேற்பட்ட ரன்கள் குவித்து இந்தியா ஃபைனல் செல்ல முக்கிய பங்காற்றினார்.
அதே போல் 2025 சாம்பியன்ஸ் ட்ராபியில் அதிக ரன்கள் குவித்த அவர் 12 வருடங்கள் இந்தியா கோப்பையை வெல்ல கருப்பு குதிரையாக செயல்பட்டார். இருப்பினும் கடந்த ஆஸ்திரேலியா தொடரில் காயமடைந்த ஸ்ரேயாஸ் ஐயர் மீண்டும் குணமடைந்து இத்தொடரில் விளையாட தொடங்கியுள்ளார். அந்த வாய்ப்பில் முதல் போட்டியில் அதிரடியாக விளையாடிய அவர் 49 (47) ரன்கள் குவித்து இந்தியாவின் வெற்றியில் பங்காற்றினார்.
ரிச்சர்ட்ஸ்க்கு சமமாக வாய்ப்பு:
அதே வேகத்தில் 2வது போட்டியில் 34 ரன்கள் அடிக்கும் பட்சத்தில் ஒருநாள் கிரிக்கெட்டில் வேகமாக 3000 ரன்கள் குவிக்க இந்திய வீரர் என்ற புதிய சாதனையை ஸ்ரேயாஸ் ஐயர் படைப்பார். இதற்கு முன் ஷிகர் தவான் 72 இன்னிங்ஸில் 3000 ரன்கள் அடித்ததே இதுவரை சாதனையாக இருந்து வருகின்றது. அதற்கடுத்தபடியாக நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி 75 இன்னிங்ஸில் 3000 ரன்கள் அடித்து 2வது இடத்தில் இருக்கிறார்.
இதையும் படிங்க: இந்த வயசுலயும் விராட் கோலி இப்படி அடிச்சு நொறுக்க இதுவே காரணம் – ரவிச்சந்திரன் அஷ்வின் கருத்து
தற்போது அவர்கள் இருவரையும் முந்தி ஸ்ரேயாஸ் ஐயர் சாதனை படைப்பதற்கு வாய்ப்புள்ளது. அது மட்டுமின்றி உலகளவில் ஒருநாள் கிரிக்கெட்டில் 4வது வேகமாக 3000 ரன்கள் அடித்த வீரர் என்ற வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் விவ் ரிச்சர்ட்ஸ் சாதனையையும் ஸ்ரேயாஸ் ஐயர் சமன் செய்ய வாய்ப்புள்ளது. இதற்கு முன் ரிச்சர்ட்ஸ் அவர்களும் 69 இன்னிங்ஸில் 3000 ரன்கள் அடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.



