IND vs RSA : தெ.ஆ டி20 தொடருக்கான இந்திய அணியில் கடைசி நேரத்தில் 3 மாற்றங்கள் – மாற்று வீரர்கள் இதோ

IND vs RSA Pant Chahal
- Advertisement -

வரும் அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 உலகக் கோப்பையை வெல்லும் லட்சிய பயணத்தில் புதிய கேப்டனாக பொறுப்பேற்ற ரோகித் சர்மா தலைமையில் கடந்த ஒரு வருடமாக பங்கேற்ற அத்தனை இருதரப்பு தொடர்களிலும் தோல்வியடையாமல் வெற்றி நடை போட்டு உலகின் நம்பர் ஒன் டி20 அணியாக முன்னேறிய இந்தியா சமீபத்திய ஆசிய கோப்பையில் தோற்று பின்னடைவை சந்தித்தது. இருப்பினும் யானைக்கும் அடி சறுக்கியதைப்போல் வீழ்ச்சியை சந்தித்த இந்தியா அதற்காக துவளாமல் அடுத்ததாக சொந்த மண்ணில் உலக டி20 சாம்பியன் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடந்த 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டியில் தோற்றாலும் அதற்கடுத்த போட்டிகளில் வென்று 2 – 1 என்ற கணக்கில் கோப்பையை முத்தமிட்டு தங்களை நம்பர் ஒன் அணி என்பதை நிரூபித்துள்ளது.

INDvsRSA

- Advertisement -

அதனால் மீண்டும் வெற்றிப் பாதையில் பயணிக்கத் துவங்கியுள்ள இந்தியா அடுத்ததாக தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக சொந்த மண்ணில் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் களமிறங்குகிறது. செப்டம்பர் 28ஆம் தேதியன்று திருவனந்தபுரத்தில் துவங்கும் அந்த தொடரில் பங்கேற்பதற்காக ஏற்கனவே தென் ஆப்பிரிக்க அணியினர் இந்தியா வந்து பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். அதேபோல் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியினரும் அங்கு பயணித்து வலைப்பயிற்சிகளை துவங்கியுள்ளனர்.

3 மாற்றங்கள்:
ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இத்தொடர் துவங்குவதற்கு இன்னும் ஒரு நாள் கூட இல்லாத நிலையில் இந்த தொடருக்காக ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள இந்திய அணியில் சில தவிர்க்க முடியாத காரணங்களால் கடைசி நேரத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. அதில் முதலாவதாக கடந்த பிப்ரவரியில் அறிமுகமாகி கிடைத்த வாய்ப்புகளில் அடுத்த தலைமுறை சுழல் பந்துவீச்சு ஆல்-ரவுண்டராக தன்னை நிரூபித்த இளம் வீரர் தீபக் ஹூடா முதுகு பிடிப்பு காயம் காரணமாக தென் ஆப்ரிக்க தொடரிலிருந்து விலகுவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

IND vs PAK Deepak Hooda INdia

ஆஸ்திரேலிய தொடரில் இடம் பிடித்திருந்த அவர் விளையாடாத போதிலும் வலைப்பயிற்சியில் கடைசி நேரத்தில் காயத்தை சந்தித்ததால் திருவனந்தபுரம் சென்றுள்ள இந்திய அணியுடன் பயணிக்கவில்லை என்று தெரிவிக்கும் செய்திகள் அதிலிருந்து குணமடைவதற்காக பெங்களூருவில் இருக்கும் தேசிய கிரிக்கெட் அகடமிக்கு சென்றுள்ளதாகவும் கூறகிறது. அவருக்கு பதில் மற்றொரு இளம் வீரரான ஷ்ரேயஸ் ஐயர் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.

- Advertisement -

பாண்டியாவுக்கு ஓய்வு:
அதுபோக ஐபிஎல் 2022 கோப்பையை வென்று கம்பேக் கொடுத்து சமீபத்திய போட்டிகளில் இந்தியாவின் வெற்றிக்கு கருப்பு குதிரையாக செயல்பட்டு வரும் நம்பிக்கை நட்சத்திர ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்டியாவுக்கு பணிச் சுமையை நிர்வகிக்கும் வகையில் இந்த தொடரில் ஓய்வளிக்கப்பட்டுள்ளது. அவருடன் ரன்களை வாரி வழங்கி கடுமையான விமர்சனங்களை சந்தித்துள்ள சீனியர் வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமாருக்கும் இத்தொடரில் ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. இதில் ஹர்திக் பாண்டியாவுக்கு பதிலாக மட்டும் இளம் சுழல் பந்து வீச்சு ஆல்-ரவுண்டர் சபாஸ் அஹமத் சேர்க்கப்பட்டுள்ளார். புவனேஷ்வர் குமாருக்கு எந்த மாற்று வீரரும் அறிவிக்கப்படவில்லை.

Shreyas Iyer

அதுபோக 30 வயதை கடந்து விட்டதால் மொத்தமாக கழற்றி விடப்பட்ட முகமது சமி ஆச்சரியப்படும் வகையில் ஒரு வருடம் கழித்து மீண்டும் ஆஸ்திரேலிய மற்றும் தென் ஆப்பிரிக்க தொடரில் சேர்க்கப்பட்டிருந்தார். ஆனால் கடைசி நேரத்தில் கரோனா பாதிப்பால் ஆஸ்திரேலிய தொடரிலிருந்து விலகிய அவர் இன்னும் அதிலிருந்து குணமடையாததால் இந்த தென் ஆப்பிரிக்கா டி20 தொடரிலும் விலகுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஏற்கனவே தீபக் சஹர் இடம் பிடித்திருப்பதால் அவருக்கான மாற்று வீரரும் அறிவிக்கப்படவில்லை. இதில் காயமடைந்த தீபக் ஹூடா டி20 உலகக் கோப்பைக்காக அறிவிக்கப்பட்டுள்ள இந்திய அணியில் இடம் பிடித்திருக்கும் நிலையில் அவருடைய காயத்தின் விவரங்களும் குணமடைய எவ்வளவு நாட்களாகும் என்ற விவரமும் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Sanju Samson

மொத்தத்தில் தென் ஆப்ரிக்க தொடரில் காயமடைந்த தீபக் ஹூடா, ஓய்வு அளிக்கப்பட்டுள்ள ஹர்டிக் பாண்டியா ஆகியோருக்கு பதிலாக சேர்க்கப்பட்டுள்ள ஷ்ரேயஸ் ஐயர் மற்றும் சபாஷ் அஹமத் ஆகியோர் விரைவில் திருவனந்தபுரம் பயணித்து இந்திய அணியினருடன் இணைந்து கொள்ள உள்ளனர். இருப்பினும் உள்ளூர் ஹீரோவான சஞ்சு சாம்சன் இப்போதும் மாற்று வீரராக கூட இத்தொடரில் சேர்க்கப்படவில்லை என்பது கேரள ரசிகர்களுக்கு மீண்டும் ஏமாற்றமாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement