
ஆசியக் கோப்பை 2025 கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியில் சுப்மன் கில் துணை கேப்டனாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவருக்காக ஜெய்ஸ்வால் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் கழற்றி விடப்பட்டது ரசிகர்களை கோபமடைய வைத்தது. குறிப்பாக 2024 ஐபிஎல் கோப்பையை கேப்டனாக வென்ற ஸ்ரேயாஸ் 2025 சீசனில் பஞ்சாப்பை 11 வருடங்கள் கழித்து ஃபைனல் அழைத்து சென்றார்.
மேலும் பேட்டிங்கில் 604 ரன்களை 175 ஸ்ட்ரைக் ரேட்டில் விளாசிய அவர் 2025 சாம்பியன்ஸ் ட்ராபியில் அதிக ரன்கள் குவித்தார். அதனால் இந்தியா 12 வருடங்கள் கழித்து கோப்பையை வெல்ல உதவிய அவர் டி20 கிரிக்கெட்டில் கம்பேக் கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. சொல்லப்போனால் ஐபிஎல் கோப்பையை வென்றதால் அவருக்கு துணை கேப்டன்ஷிப் பதவி கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
கடைசியில் 2025 ஆசியக் கோப்பை தொடருக்கான ரிசர்வ் வீரர்கள் பட்டியலில் கூட ஸ்ரேயாஸ் ஐயருக்கு இடம் கிடைக்கவில்லை. அதனாலேயே தற்போது ஏராளமான ரசிகர்கள் மற்றும் முன்னாள் வீரர்கள் தேர்வுக் குழுவை விமர்சித்து வருகிறார்கள். இந்நிலையில் கிடைத்த வாய்ப்புகளில் சிறப்பாக செயல்பட்ட தம்முடைய மகனுக்கு கேப்டன்ஷிப் பொறுப்பு வேண்டாம், குறைந்தபட்சம் ஆசிய கோப்பையில் பெஞ்சில் அமரும் வாய்ப்பையாவது கொடுத்திருக்கலாமே என்று ஸ்ரேயாஸ் ஐயரின் தந்தை சந்தோஷ் வேதனை தெரிவித்துள்ளார்.
இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “இதற்கு மேலும் ஸ்ரேயாஸ் இந்திய டி20 அணியில் விளையாடுவதற்காக என்ன செய்ய வேண்டும்? என்பது எனக்குத் தெரியவில்லை. ஐபிஎல் தொடரில் அவர் டெல்லி, கொல்கத்தா, பஞ்சாப் ஆகிய அணிகளில் ஒவ்வொரு வருடமும் அசத்தி வருகிறார். அதுவும் கொல்கத்தா கேப்டனாக 2024 ஐபிஎல் கோப்பையை வென்ற அவர் இந்த வருடம் பஞ்சாப்பை ஃபைனல் அழைத்துச் சென்றார்”
“அதற்காக அவரை கேப்டனாக நியமியுங்கள் என்று நான் சொல்லவில்லை. ஆனால் குறைந்தபட்சம் அவரை அணியில் தேர்ந்தெடுங்கள். ஒருவேளை நீங்கள் அவரை இந்திய அணியிலிருந்து கழற்றி விட்டால், அதற்காக அவர் ஏமாற்றத்தை தன்னுடைய முகத்தில் காட்ட மாட்டார். இது மட்டுமே என்னுடைய அதிர்ஷ்டம், வேறு எதுவும் சொல்ல முடியாது என்று தான் ஸ்ரேயாஸ் சொல்வார்”
இதையும் படிங்க: லாரா மாதிரி திறமையுடைய வைபவ்.. யார் பேச்சையும் கேட்காம அதை கத்துக்கிட்டா இன்னும் அசத்தலாம்.. ராயுடு பேட்டி
“அந்தளவுக்கு அவர் மிகவும் பொறுமையாகவும் அமைதியாகவும் இருப்பார். யாரையும் குறை சொல்ல விரும்பாத அவர் இயற்கையாக தனக்குள் ஏமாற்றத்தை சந்தித்திருப்பார்” என்று கூறினார். இதைத்தொடர்ந்து நிலைமைகள் மாறி 2026 டி20 உலகக் கோப்பையில் ஸ்ரேயாஸ் ஐயர் தேர்வாக வேண்டும் என்பதே ரசிகர்களின் விருப்பமாக இருக்கிறது.