IND vs BAN : அதிர்ஷ்டத்தை தவறவிட்ட ஸ்ரேயாஸ், இந்தியாவை தூக்குவாரா அஷ்வின்? 2வது நாள் உணவு இடைவெளி ஸ்கோர் இதோ

Shreyas Iyer Ashwin
- Advertisement -

வங்கதேசத்துக்கு எதிராக முதலில் நடைபெற்ற ஒருநாள் தொடரை இழந்த இந்தியா அடுத்ததாக 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் களமிறங்கியுள்ளது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் ஒரு அங்கமாக நடைபெறும் இத்தொடரை 2 – 0 என்ற கணக்கில் வென்றால் தான் 2023 ஜூன் மாதம் நடைபெறும் பைனலுக்கு தகுதி பெற முடியும் என்ற நிலைமையை சந்தித்துள்ள இந்தியா டிசம்பர் 14ஆம் தேதி வென்று துவங்கிய முதல் போட்டியில் டாஸ் வென்று பேட்டிங் செய்வதாக அறிவித்தது. சட்டோகிராம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் சுப்மன் கில் 20, கேப்டன் கேஎல் ராகுல் 22 என தொடக்க வீரர்கள் ஆரம்பத்திலேயே சொற்ப ரன்களில் நடையை கட்டிய நிலையில் விராட் கோலி 1 ரன்னில் அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்தார்.

அதனால் 48/3 என்ற தடுமாற்றமான தொடக்கத்தை பெற்ற இந்தியாவுக்கு 4வது விக்கெட்டுக்கு புஜாராவுடன் இணைந்து அதிரடியாக 64 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த ரிஷப் பண்ட் 6 பவுண்டரி 2 சிக்சருடன் 46 (45) ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்து ஸ்ரேயாஸ் ஐயர் தனது ஸ்டைலில் நங்கூரமாக நின்று புஜாராவுடன் இணைந்து வங்கதேச பவுலர்களை திறம்பட எதிர்கொண்டு 5வது விக்கெட்டுக்கு 149 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து இந்தியாவை மீட்டெடுத்தார். அதனால் இந்தியா நல்ல நிலையை எட்டிய போது அரைசதம் கடந்து சதத்தை நெருங்கிய புஜாரா 11 பவுண்டரியுடன் 90 (203) ரன்களில் கடைசி நேரத்தில் ஆட்டமிழந்தார்.

- Advertisement -

அதை தொடர்ந்து வந்த அக்சர் பட்டேல் முதல் நாளின் கடைசி பந்தில் 14 ரன்களில் ஆட்டமிழந்த நிலையில் இந்தியா 278/6 ரன்கள் எடுத்திருந்தது. களத்தில் அரைசதம் கடந்து பேட்டிங் செய்த ஸ்ரேயாஸ் ஐயர் 82* ரன்களுடன் இருந்த நிலையில் வங்கதேசம் சார்பில் அதிகபட்சமாக டைஜூல் இஸ்லாம் 3 விக்கெட் எடுத்தார். அந்த நிலைமையில் இன்று துவங்கிய 2வது நாள் ஆட்டத்தில் தொடர்ந்து பேட்டிங் செய்த ஸ்ரேயாஸ் ஐயர் சதமடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் எபோதத் ஹொசைனிடம் போல்ட்டாகி சென்றார். குறிப்பாக முதல் நாளன்றே அவரிடம் போல்டான ஸ்ரேயாஸ் ஐயர் பெய்ல்ஸ் கீழே விழாத மிகப்பெரிய அதிர்ஷ்டத்தால் 72 ரன்களில் தப்பினார்.

அதற்கு முன்பாக 67 ரன்கள் எடுத்திருந்த போது கொடுத்த அல்வா கேட்ச்சையும் அதே எபோதத் ஹொசைன் கோட்டை விட்டார். அதனால் 2 மிகப்பெரிய அதிர்ஷ்டம் கிடைத்தும் அதை பயன்படுத்த தவறிய ஸ்ரேயாஸ் ஐயர் கடைசி வரை அதே பவுலரிடம் 10 பவுண்டரியுடன் 86 (192) ரன்களில் ஆட்டமிழந்தார். இருப்பினும் இன்றைய போட்டி துவங்கியதும் களமிறங்கிய தமிழக வீரர் அஷ்வின் அடுத்து வந்த குல்தீப் யாதவுடன் ஜோடி சேர்ந்து இந்தியாவை மீட்டெடுக்க பேட்டிங் செய்து வருகிறார்.

- Advertisement -

பாராட்டும் வகையில் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களை வங்கதேச பவுலர்களை அட்டகாசமாக எதிர்கொள்ளும் இந்த ஜோடி 8வது விக்கெட்டுக்கு 55* ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்ததால் 2வது நாள் உணவு இடைவெளியில் இந்தியா 348/7 ரன்கள் எடுத்து அசத்தியுள்ளது. களத்தில் அஷ்வின் 40* (81) ரன்களுடனும் குல்தீப் யாதவ் 20* (76) ரன்களுடனும் இருக்கிறார்கள். இதில் ரவிச்சந்திரன் அஸ்வின் ஏற்கனவே டெஸ்ட் கிரிக்கெட்டில் 5 சதங்களை அடித்த அனுபவம் கொண்டவர் என்பதால் மேற்கொண்டு சிறப்பாக பேட்டிங் செய்து 400 ரன்களுக்கு மேல் எடுக்க வைத்து இந்தியாவை இப்போட்டியில் தூக்கி நிறுத்துவாரா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் ஏற்பட்டுள்ளது.

இதையும் படிங்க: ஐபிஎல் வரலாற்றில் கொல்கத்தா அணி படைத்துள்ள 5 அட்டகாசமான சாதனைகள் – லிஸ்ட் இதோ

ஏனெனில் முதல் நாளிலிருந்தே பவுலிங்க்கு சாதகமாக மாறியுள்ள இம்மைதானத்தில் நாட்கள் செல்ல செல்ல இன்னும் பேட்டிங் சவாலாக மாறிவிடும் என்பதால் முதல் இன்னிங்ஸில் இந்தியா முடிந்த அளவுக்கு அதிக ரன்கள் சேர்ப்பது வெற்றி வாய்ப்பை பிரகாசப்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement