ஆயிரம் இருந்தாலும் ஒன்டே’ல கில்லி தான், உ.கோ சான்ஸ் தாராளமா கொடுக்கலாம் – ஷ்ரேயாஸ் படைத்த வரலாற்று சாதனை இதோ

- Advertisement -

நியூசிலாந்து மண்ணில் பங்கேற்ற 3 போட்டிகள் டி20 தொடரில் ஹர்திக் பாண்டியா தலைமையில் வென்ற இளம் இந்திய அணி அடுத்ததாக ஷிகர் தவான் தலைமையில் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்று வருகிறது. 2023 உலக கோப்பைக்கு தயாராகும் வகையில் நடைபெறும் இத்தொடரின் முதல் போட்டி நவம்பர் 25ஆம் தேதியன்று ஆக்லாந்து நகரில் நடைபெற்றது. அதில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 306/7 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக கேப்டன் ஷிகர் தவான் 72, சுப்மன் கில் 50 மற்றும் ஷ்ரேயஸ் ஐயர் 80 என முக்கிய வீரர்கள் தேவையான ரன்களை குவித்தனர்.

அதை தொடர்ந்து 307 ரன்களை துரத்திய நியூசிலாந்துக்கு ஃபின் ஆலன் 22, டேவோன் கான்வே 24, டார்ல் மிட்சேல் 11 என முக்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டானார்கள். இருப்பினும் 4வது விக்கெட்டுக்கு 221 ரன்கள் மெகா பார்ட்னர்ஷிப் அமைத்த டாம் லாதம் சதமடித்து 145* ரன்களும் கேப்டன் கேன் வில்லியம்சன் 94* ரன்களும் குவித்து 47.1 ஓவரிலேயே 309/3 ரன்களை எடுக்க வைத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்தனர். அதனால் 1 – 0* (3) என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே இத்தொடரில் முன்னிலை பெற்றுள்ள நியூசிலாந்து டி20 தொடரில் சந்தித்த தோல்விக்கு இந்தியாவுக்கு தக்க பதிலடி கொடுத்துள்ளது.

- Advertisement -

ஒன்டே கில்லி:
முன்னதாக இப்போட்டியில் 124 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து நல்ல தொடக்கம் கொடுத்த தவான் – கில் ஜோடி அவுட்டான பின் ரிசப் பண்ட் 15, சூரியகுமார் யாதவ் 4 என முக்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றினர். அதனால் 160/4 என திடீரென்று தடுமாறிய இந்தியாவை சஞ்சு சாம்சனுடன் இணைந்து 5 விக்கெட்டுக்கு 94 ரன்கள் முக்கிய பார்ட்னர்ஷிப் அமைத்த ஷ்ரேயஸ் ஐயர் 4 பவுண்டரி 4 சிக்சருடன் 80 (76) ரன்களை குவித்து இந்தியா 300 ரன்கள் தொடுவதற்கு முக்கிய காரணமாக அமைந்தார். கடந்த 2017 முதல் இந்திய அணிக்காக விளையாடி வரும் இவர் டி20 மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் சுமாராக செயல்படுவதுடன் ஷார்ட் பிட்ச் பந்துகளில் வலையை சிக்கும் எலியை போல் அவுட்டாகி வருகிறார்.

அவரது பலவீனம் இந்த உலகிற்கே தெரிந்து விட்ட நிலையில் ரசிகர்களும் அவர் மீது அதிருப்தியான கண்ணோட்டத்தையே வைத்துள்ளார்கள். ஆனால் ஒருநாள் கிரிக்கெட்டில் சமீபத்திய தென் ஆப்பிரிக்க தொடர் உட்பட அறிமுகமானது முதலே சிறப்பான செயல்பாடுகளை வெளிப்படுத்தி வரும் இவர் வருங்கால நம்பிக்கை நட்சத்திரமாக தன்னை அடையாளப் படுத்தி வருகிறார். குறிப்பாக இப்போட்டி உட்பட கடைசி 8 இன்னிங்ஸில் முறையே 80, 28, 113*, 50, 40, 63, 54, 80 என பெரிய ரன்களை எடுத்துள்ள அவர் ஒருநாள் போட்டிகளில் கில்லியாக சொல்லி அடித்து வருகிறார் என்றே கூறலாம்.

- Advertisement -

மேலும் 2020 முதல் 9 அரை சதங்களை அடித்து தொடர்ச்சியாக சிறப்பாக செயல்பட்டு வரும் அவர் ஒருநாள் கிரிக்கெட்டில் விராட் கோலி (57.68), எம்எஸ் தோனி (50.58) ஆகியோருக்கு பின் அதிக பேட்டிங் சராசரியை (49.25) கொண்ட இந்திய வீரராக (குறைந்தது 1000 ரன்கள்) ஜொலித்து வருகிறார். அதை விட கடைசியாக கடந்த 2020ஆம் ஆண்டு நியூசிலாந்து மண்ணில் நடந்த 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் முறையே 103, 52, 62 என 3 போட்டிகளிலும் தொடர்ச்சியாக 50+ ரன்களைக் எடுத்திருந்த அவர் தற்போது 80 ரன்கள் குவித்துள்ளார்.

இதன் வாயிலாக ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் நியூசிலாந்து மண்ணில் தொடர்ச்சியாக 4 போட்டிகளில் 50+ ரன்களை குவித்த 2வது ஆசிய வீரர் மற்றும் முதல் இந்திய வீரர் என்ற வரலாற்றுச் சாதனையை அவர் படைத்துள்ளார். இதற்கு முன் கடந்த 1985 – 1989 ஆகிய காலகட்டங்களில் பாகிஸ்தான் முன்னாள் வீரர் மற்றும் தற்போதைய வாரிய தலைவர் ரமீஷ் ராஜா முறையே 75, 59, 51, 72 என 4 போட்டிகளில் தொடர்ச்சியாக 50+ ரன்களை குவித்து இந்த சாதனையை படைத்திருந்தார்.

அந்த வகையில் என்னதான் டி20 மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் தடுமாறினாலும் ஷார்ட் பிட்ச் பலவீனத்தைக் கொண்டிருந்தாலும் ஒருநாள் கிரிக்கெட்டில் சொந்த மண்ணிலும் வெளிநாட்டு மண்ணிலும் அசத்தும் ஸ்ரேயாஸ் ஐயர் 2023 உலகக் கோப்பையில் விளையாடுவதற்கு தகுதியான செயல்பாடுகளை வெளிப்படுத்தி வருகிறார் என்பதில் சந்தேமில்லை

Advertisement