சயீத் முஷ்டாக் அலி கோப்பை 2024 உள்ளூர் டி20 கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. அதில் இந்தூரில் இன்று நடைபெற்ற குரூப் பி பிரிவின் ஒரு லீக் போட்டியில் பரோடா மற்றும் கர்நாடகா அணிகள் மோதின. அதில் டாஸ் வென்ற கர்நாடகா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதை அடுத்து களம் இறங்கிய அந்த அணி 20 ஓவரில் 169-8 ரன்கள் குவித்தது.
அதிகபட்சமாக அபினவ் மனோகர் 56 (34), ரவிச்சந்திரன் 38 ரன்கள் எடுத்தார்கள். பரோடா அணிக்கு அதிகபட்சமாக கேப்டன் க்ருனால் பாண்டியா, அடிட் சேத் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள். பின்னர் 170 ரன்களை துரத்திய பரோடா அணிக்கு அபிமன்யு சிங் 6 ரன்களில் அவுட்டானார். இருப்பினும் மற்றொரு துவக்க சஸ்வத் ராவத் அதிரடியாக விளையாடினார்.
கோபால் ஹாட்ரிக்:
தொடர்ந்து அசத்தலாக பேட்டிங் செய்த அவரை 7 பவுண்டரி 2 சிக்ஸருடன் 63 (37) ரன்கள் எடுத்த போது சுழல் பந்து வீச்சாளர் ஸ்ரேயாஸ் கோபால் 10வது ஓவரின் முதல் பந்தில் அவுட்டாக்கினார். அடுத்து வந்த நட்சத்திர வீரர் ஹர்திக் பாண்டியாவை கோல்டன் டக் அவுட்டாக்கிய அவர் அதற்கடுத்ததாக வந்த கேப்டன் க்ருனால் பாண்டியாவையும் கோல்டன் டக் அவுட்டாக்கினார்.
அந்த வகையில் 10.1, 10.2, 10.3 ஆகிய 3 பந்துகளில் அடுத்தடுத்த 3 விக்கெட்டுகள் எடுத்த ஸ்ரேயாஸ் கோபால் நடப்பு சயீத் முஷ்டாக் அலி கோப்பையில் ஹாட்ரிக் விக்கெட்டுகளை பதிவு செய்த முதல் பவுலராக சாதனை படைத்தார். தொடர்ந்து நடைபெற்ற போட்டியில் 3வது இடத்தில் விளையாடிய பானு பனியாவையும் அவர் 42 (24) ரன்களில் அவுட்டானார். ஆனால் மிடில் ஆடரில் சிவாலிக் சர்மா 22, விஷ்ணு சோலங்கி 28* ரன்கள் எடுத்தார்கள்.
சென்னைக்கு மகிழ்ச்சி:
அதனால் 18.5 ஓவரில் 172-6 ரன்கள் எடுத்த பரோடா 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. கர்நாடகாவுக்கு அதிகபட்சமாக ஷ்ரேயாஸ் கோபால் 4 ஓவரில் 19 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகளை எடுத்தும் தோல்வியை தவிர்க்க முடியவில்லை. ஆனாலும் கடந்த காலங்களில் அவர் ஐபிஎல் தொடரில் விராட் கோலி, ஏபி டீ வில்லியர்ஸ் போன்ற தரமான வீரர்களை அவுட்டாக்கிய திறமையானவர்.
இதையும் படிங்க: ஸ்டார்க்கிற்கு எதிராக நான் கூட இதை செஞ்சுருக்க மாட்டேன்.. பயமின்றி அசத்திய ஜெய்ஸ்வாலுக்கு குக் பாராட்டு
அதனாலேயே 2025 ஐபிஎல் ஏலத்தில் அவரை 30 லட்சம் என்ற குறைந்த தொகைக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வாங்கியது. அப்படிப்பட்ட நிலையில் அவர் தற்போது நல்ல ஃபார்மில் இருக்கும் ஹர்திக் பாண்டியாவை அவுட்டாக்கி ஹாட்ரிக் விக்கெட்டுகளை எடுத்துள்ளார். அவருடைய இந்த செயல்பாடு சிஎஸ்கே அணிக்கும் ரசிகர்களுக்கும் நல்ல உத்வேகமாக அமைந்துள்ளது.



