ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அதனுடைய சொந்த மண்ணில் இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. அத்தொடரில் முதல் போட்டியில் வென்ற இந்தியா 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு தகுதி பெறும் முனைப்புடன் விளையாடி வருகிறது. இதை அடுத்து அடிலெய்ட் நகரில் நடைபெறும் பகல் இரவு டெஸ்ட் போட்டியில் விளையாட இந்திய அணி தயாராகி வருகிறது.
முன்னதாக பெர்த் மைதானத்தில் நடைபெற்ற முதல் போட்டியில் விராட் கோலி 100*, ராகுல் 77 ரன்கள் எடுத்து வெற்றியில் முக்கிய பங்காற்றினார்கள். அவர்களை விட துவக்க வீரர் ஜெய்ஸ்வால் முதல் முறையாக ஆஸ்திரேலியாவில் விளையாடினார். அந்த வாய்ப்பில் முதல் இன்னிங்ஸில் டக் அவுட்டான அவர் இரண்டாவது இன்னிங்ஸில் 161 ரன்கள் குவித்து இந்தியாவின் வெற்றியில் கருப்பு குதிரையாக செயல்பட்டார்.
ஜெய்ஸ்வால் அபாரம்:
அந்தப் போட்டியில் ஆஸ்திரேலியாவின் அனுபவமிக்க நம்பிக்கை நட்சத்திரம் மிட்சேல் ஸ்டார்கை அவர் அபாரமாக எதிர்கொண்டார். ஒரு கட்டத்தில் உங்களுடைய வேகம் மிகவும் குறைவாக இருக்கிறது என்று சொல்லி அவரை ஜெய்ஸ்வால் ஸ்லெட்ஜிங் செய்தது மிகவும் ஆச்சரியமாக அமைந்தது. ஏனெனில் 140 – 150 கி.மீ வேகத்தில் வீசக்கூடிய ஸ்டார்க் உலகின் பல டாப் பேட்ஸ்மேன்களை திணறடிக்கக் கூடியவராக கருதப்படுகிறார்.
இந்நிலையில் ஸ்டார்க்கிற்கு எதிராக தாமாக இருந்தால் அப்படி சொல்லியிருக்க மாட்டேன் அலெஸ்டர் குக் தெரிவித்துள்ளார். ஆனால் 22 வயதிலேயே பயமின்றி ஸ்டார்க்கை எதிர்கொண்ட ஜெய்ஸ்வாலை அவர் பாராட்டியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “இங்கிலாந்துக்கு எதிராக அவருடைய கொண்டாட்டத்தை நாங்கள் போதுமான அளவுக்கு பார்த்தோம். இம்முறை ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அவர் அதை செய்வதை பார்ப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது”
குக் பாராட்டு:
“100 ரன்களை தொடக்கூடிய சூழ்நிலையில் இல்லாத போது ஸ்டார்க்கிற்கு எதிராக நீங்கள் மெதுவாக பந்து வீசுகிறீர்கள் என்று அவர் சொன்னார். ஸ்டார்க்கை நான் நிறைய எதிர்கொண்டுள்ளேன். ஒருவேளை அவர் மெதுவாக பந்து வீசினால் நான் என்னுடைய வாயை மூடிக்கொண்டு அவரை தொந்தரவு செய்யாமல் விளையாடுவேன். ஆனால் இந்த பையன் 22 வயதிலேயே அப்படி சொல்வதற்கான தன்னம்பிக்கையை கொண்டுள்ளார்”
இதையும் படிங்க: 197 ஸ்ட்ரைக் ரேட்டில் 7 சிக்ஸ்.. 130 பார்ட்னர்ஷிப்.. ஃபார்முக்கு வந்த துபே.. சிஎஸ்கே மகிழ்ச்சி.. சூர்யகுமாரும் மிரட்டல்
“டாப் ஆர்டரில் முதல் 15 போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த இந்திய வீரராக வந்துள்ளார் என்று நினைக்கிறேன். பெர்த் மைதானம் பேட்டிங் செய்வதற்கு மிகவும் கடினம் என்று நான் சொல்வதை யாரும் நம்ப மாட்டார்கள். ஆனால் அங்கே அசத்திய அவர் என்ன ஒரு கிளாஸ் பிளேயர்” என்று கூறினார். அது போக ஆஸ்திரேலியாவில் அறிமுகப் போட்டியில் அதிகபட்ச ஸ்கோர் அடித்த இந்திய வீரராகவும் ஜெய்ஸ்வால் சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.



