சயீத் முஷ்டாக் அலி 2024 உள்ளூர் டி20 கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. அதில் குரூப் ஈ பிரிவில் இடம் வகிக்கும் மும்பை மற்றும் சர்வீசஸ் அணிகள் மோதிய போட்டி ஹைதராபாத் மைதானத்தில் இன்று நடைபெற்றது. அந்தப் போட்டியில் டாஸ் வென்ற சர்வீசஸ் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதை அடுத்து மும்பைக்கு பிரிதிவி ஷா டக் அவுட்டாகி பெரிய ஏமாற்றத்தை கொடுத்தார்.
அதே போல மற்றொரு துவக்க வீரர் ரஹானே 22 (18) ரன்களில் அவுட்டான நிலையில் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 20 (14) ரன்களில் பெவலியன் திரும்பினார். அதனால் 60-3 என மும்பை தடுமாறிய நிலையில் அடுத்ததாக சூரியகுமார் யாதவ் மற்றும் சிவம் துபே ஆகியோர் ஜோடி சேர்ந்தார்கள். அதில் சூரியகுமார் தன்னுடைய ஸ்டைலில் வெளுத்து வாங்கினார்.
சூரியகுமார் அசத்தல்:
அவருடன் சேர்ந்த சிவம் துபே தம்முடைய ஸ்டைலில் எதிரணி பவுலர்களை சிக்ஸர்களாக பறக்க விட்டு வேகமாக ரன்களை குவித்தார். அந்த வகையில் அதிரடியாக விளையாடிய இந்த ஜோடி நான்காவது விக்கெட்டுக்கு 130 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து மிரட்டியது. அதில் சூரியகுமார் 7 பவுண்டரி 4 சிக்சருடன் 70 (46) ரன்கள் குவித்து அவுட்டானார்.
ஆனால் மறுபுறம் தொடர்ந்து அதிரடியாக விளையாடிய சிவம் துபே கடைசி வரை அவுட்டாகாமல் 2 பவுண்டரி 7 சிக்ஸருடன் 71* (36) ரன்களை 197.22 ஸ்ட்ரைக் ரேட்டில் விளாசி சூப்பர் ஃபினிஷிங் கொடுத்தார். அவருடைய ஆட்டத்தால் 20 ஓவரில் மும்பை 192-4 ரன்கள் குவித்தது. சமீபத்திய ஐபிஎல் தொடர்களில் சிஎஸ்கே அணியில் அதிரடியாக விளையாடிய அவர் இந்தியாவுக்காக டி20 கிரிக்கெட்டில் கம்பேக் கொடுத்தார்.
துபே அபாரம்:
அந்த வாய்ப்பில் அசத்தியதால் 2024 டி20 உலகக் கோப்பையிலும் தேர்வான அவர் ஃபைனலில் முக்கிய ரன்கள் எடுத்து இந்தியா சாம்பியன் பட்டம் வெல்ல உதவினார். இருப்பினும் சமீபத்தில் காயத்தை சந்தித்த அவர் தற்போது இந்தப் போட்டியில் குணமடைந்து அதிரடியாக விளையாடி ஃபார்முக்கு திரும்பியுள்ளார். அதனால் 2025 ஐபிஎல் தொடரில் அவரை தக்க வைத்த சிஎஸ்கே அணியும் ரசிகர்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
இதையும் படிங்க: ஜஹீர் கானும் நீங்களும் ஒன்னா? இதுக்காவே தல தோனி அடிப்பாரு.. யாஷ் தயாள் பதிவை விளாசும் ரசிகர்கள்
இறுதியில் 193 ரன்களை துரத்திய சர்வீஸ் அணி முடிந்தளவுக்கு போராடியும் 19.3 ஓவரில் 153க்கு ஆல் அவுட்டாகி தோல்வியை சந்தித்தது. அதனால் மும்பை 39 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. அதிகபட்சமாக கேப்டன் மோஹித் அஹ்லவத் 54 (40) ரன்கள் எடுத்த நிலையில் மும்பைக்கு அதிகபட்சமாக சர்துள் தாகூர் 4, சாம்ஸ் முலானி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள்.



