இந்திய கிரிக்கெட் அணிக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் வங்கதேசம் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. செப்டம்பர் 19ஆம் தேதி தமிழகத்தின் தலைநகர் சென்னையில் துவங்கும் அந்தத் தொடர் 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் பகுதியாக நடைபெறுகிறது. எனவே ஃபைனலுக்கு தகுதி பெற அந்தத் தொடரில் வெல்லும் முனைப்புடன் இந்தியா களமிறங்க உள்ளது.
மறுபுறம் இந்தியாவுக்கு எதிராக டெஸ்ட் கிரிக்கெட்டில் வங்கதேசம் ஒரு போட்டியில் கூட வரலாற்றில் வென்றதில்லை. அந்த சூழ்நிலையில் சமீபத்தில் பாகிஸ்தானை அதனுடைய சொந்த மண்ணில் 2 – 0 என்ற கணக்கில் வங்கதேசம் தோற்கடித்தது. அதனால் பாகிஸ்தானுக்கு எதிராக முதல் முறையாக டெஸ்ட் போட்டியில் வென்று தொடரையும் கைப்பற்றி வங்கதேசம் புதிய சரித்திரம் படைத்தது.
ஃபார்மில் இருக்கோம்:
ஆனால் அந்த ஒரு வெற்றியை பெற்று விட்டு இந்தியாவையும் வீழ்த்துவோம் என்று வங்கதேச கேப்டன் நஜ்முல் சான்டோ தொடர்ந்து சவால் விடுத்து வருகிறார். இந்நிலையில் நஹிட் ராணா, டஸ்கின் அகமது, ஹசன் மஹ்முட் போன்ற தங்கள் அணியின் வேகப்பந்து வீச்சாளர் தற்போது நல்ல ஃபார்மில் இருப்பதாக வங்கதேச வீரர் சோரிபுல் இஸ்லாம் தெரிவித்துள்ளார். எனவே பாகிஸ்தானை போல இந்தியாவையும் தங்கள் அணி வீழ்த்தும் என்று அவர் சவால் விடுத்துள்ளார்.
பாகிஸ்தானில் 2 – 0 என்ற கணக்கில் வங்கதேசம் வெற்றி பெற முக்கிய பங்காற்றிய வேகப்பந்து வீச்சாளரான அவர் காயத்தால் இந்திய தொடரில் விளையாடவில்லை. இருப்பினும் தங்களுடைய இதர வேகப்பந்து வீச்சாளர்கள் இந்தியாவை வீழ்த்துவார்கள் என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு. “எங்களால் இந்தியாவை வீழ்த்த முடியும் என்று நாங்கள் நம்புகிறோம். பாகிஸ்தானுக்கு எதிராக நாங்கள் நன்றாக விளையாடினோம்”
இந்தியாவையும் சாய்ப்போம்:
“அதே போல இந்தியாவிலும் வெல்ல முடியும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது. எங்களுடைய வேகப்பந்து வீச்சாளர்கள் நல்ல ஃபார்ம் மற்றும் ரிதத்தில் உள்ளனர். ஆரம்பத்தில் எங்களிடம் வேகப்பந்து வீச்சாளர்கள் இருந்தனர். ஆனால் அவர்களுக்கு போதுமான ஆதரவு இல்லை. தற்போது அவர்களுக்கு ஆதரவு உள்ளது. அது வங்கதேச கிரிக்கெட்டுக்கு நல்லது”
இதையும் படிங்க: இங்கிலாந்து தொடர் மாதிரியே செய்வோம்.. வங்கதேச தொடரில் பும்ராவுக்கு ஓய்வு கொடுக்கப்படுமா? கேப்டன் ரோஹித் பதில்
“நான் என்னுடைய பந்து வீச்சில் ஒவ்வொரு நாளும் வேலை செய்து வருகிறேன். எனவே விரைவில் ஃபிட்டாகி இந்தியாவுக்கு எதிராக நடைபெற உள்ள டி20 தொடரில் விளையாடுவேன் என்று நம்புகிறேன்” எனக் கூறினார். இப்படி தொடர்ச்சியாக சவாலை கொடுத்து வரும் வங்கதேசத்தை செயலில் வீழ்த்தி இந்தியா பதிலடி கொடுக்குமா என்ற எதிர்பார்ப்பு இங்குள்ள ரசிகர்களிடம் காணப்படுகிறது.



