இந்திய கிரிக்கெட் அணி வங்கதேசத்துக்கு எதிராக விளையாடும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் செப்டம்பர் 19ஆம் தேதி சென்னையில் துவங்குகிறது. 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் அங்கமாக நடைபெறும் அந்தத் தொடரில் ரோஹித் சர்மா தலைமையில் விராட் கோலி, பும்ரா உள்ளிட்ட நட்சத்திர வீரர்கள் விளையாட உள்ளனர். எனவே முழு பலத்துடன் கூடிய இந்தியா அத்தொடரில் வங்கதேசத்தை வீழ்த்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் வங்கதேசத்தை தொடர்ந்து நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியா விளையாட உள்ளது. வங்கதேசத்தை விட நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா மிகவும் வலுவான அணிகளாக கருதப்படுகின்றன. எனவே வங்கதேச தொடர்களை விட இந்தியாவுக்கு அந்த 2 தொடர்கள் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
ஜஸ்ப்ரித் பும்ராவுக்கு ஓய்வா:
குறிப்பாக நவம்பர் மாதம் ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ள 5 போட்டிகள் கொண்ட மெகா தொடர் இந்தியாவுக்கு மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. எனவே அந்தத் தொடரில் ஜஸ்ப்ரித் பும்ரா, சிராஜ் ஆகியோர் ஃபிட்டாக விளையாடுவது இந்தியாவின் வெற்றிக்கு அவசியமாகிறது. அதனால் வங்கதேசத் தொடரில் அவர்களுக்கு ஓய்வு கொடுக்கப்படுமா என்று கேப்டன் ரோஹித் சர்மாவிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு கடந்த இங்கிலாந்து டெஸ்ட் தொடரை ப் போல வங்கதேச தொடரின் ஏதேனும் ஒரு போட்டியில் பும்ரா, சிராஜுக்கு சூழ்நிலைக்குத் தகுந்தார் போல் ஓய்வு கொடுக்கப்படும் என்று ரோஹித் தெரிவித்துள்ளார். இது பற்றி முதல் போட்டிக்கு முந்தைய செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் பேசியது பின்வருமாறு. “பொதுவாக அனைத்து போட்டிகளிலும் எங்களுடைய சிறந்த வீரர்கள் விளையாடுவதை விரும்புகிறோம்”
இங்கிலாந்து தொடர் போல:
“ஆனால் அனைத்து நேரங்களிலும் அது சாத்தியமாவதில்லை. எனவே நீங்கள் உங்களுடைய அணியின் நலனைப் பார்த்து அதற்கு தகுந்தாற்போல் உங்களுடைய பவுலர்களை கையாள வேண்டியுள்ளது. இவை அனைத்தும் எங்களுடைய பவுலர்கள் எவ்வளவு பணிச்சுமையை கொண்டுள்ளார்கள் என்பதைப் பொறுத்தது. அதை நாங்கள் கவனித்து நன்றாக செய்து வருகிறோம்”
இதையும் படிங்க: அந்த அட்டாக் வேற மாதிரி இருப்பதால்.. இந்தியாவை இம்முறை ஆஸி தோற்கடிக்கும்.. ஜேசன் கில்லஸ்ப்பி பேட்டி
“இங்கிலாந்துக்கு எதிராக நாங்கள் ஜஸ்ப்ரித் பும்ரா, சிராஜுக்கு ஓய்வு கொடுத்தோம். எனவே நாங்கள் அவர்களை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். எங்களிடம் நிறைய பவுலர்கள் இருப்பதால் அனைவரும் அனைத்து போட்டிகளிலும் விளையாட விரும்புகிறோம். துலீப் கோப்பையில் எங்கள் பவுலர்களின் திறமையை பார்த்தோம். எனவே சிறகடிப்பதற்காக காத்திருக்கும் எங்களுடைய இளம் பவுலர்களுக்கு வாய்ப்பு கொடுக்க நான் கவலைப்படவில்லை” என்று கூறினார்.



