அது தோனியின் மாஸ்டர் முடிவல்ல, எங்கள பார்த்து பயந்துட்டாங்க – 2007 ஃபைனல் பற்றி சோயப் மாலிக் கூறும் உருட்டலான தகவல் என்ன

MS Dhoni Shoaib Malik IND vs PAK
Advertisement

ஆஸ்திரேலியாவில் எதிர்பாராத திரில்லர் திருப்பங்களுடன் நடைபெற்ற 2022 ஐசிசி டி20 உலக கோப்பையில் பாகிஸ்தானை தோற்கடித்த இங்கிலாந்து 2010க்குப்பின் 2வது கோப்பையை வென்று சாதனை படைத்துள்ளது. முன்னதாக இந்த தொடரில் 15 வருடங்கள் கழித்து 2வது கோப்பையை வெல்லும் லட்சியத்துடன் களமிறங்கிய ரோஹித் சர்மா தலைமையிலான இந்தியா லீக் சுற்றில் அசத்தினாலும் நாக் அவுட் சுற்றில் வழக்கம் போல சொதப்பி படுதோல்வியை சந்தித்து ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்தது. அதன் காரணமாக கடந்த 2007ஆம் ஆண்டு தென்னாபிரிக்காவில் நடைபெற்ற வரலாற்றின் முதல் டி20 உலக கோப்பையை நினைத்துக் கொண்டே காலத்தைத் தள்ள வேண்டிய கட்டாயம் இந்திய ரசிகர்களுக்கு மீண்டும் ஏற்பட்டுள்ளது.

2007 t20 worldcup

முன்னதாக 2007 டி20 உலக கோப்பையில் காலத்திற்கு மறக்க முடியாத ஏராளமான நினைவுகள் ரசிகர்களுக்கு கிடைத்தது. குறிப்பாக முதல் போட்டியிலேயே வித்யாசமான பவுல் அவுட் முறையில் வென்றது, இங்கிலாந்துக்கு எதிராக யுவராஜ் சிங் ஒரே ஓவரில் பறக்க விட்ட 6 மெகா சிக்ஸர்கள், அரையிறுதி போட்டியில் மீண்டும் யுவராஜ் சிங் விளாசிய 70 (30) ரன்களும் ஹெய்டன், கில்கிறிஸ்ட் ஆகியோரது ஸ்டம்ப்புகளை தெறிக்க விட்டு வெறித்தனமாக கொண்டாடிய ஸ்ரீசாந்த் போன்ற தருணங்களை மறக்க முடியாது.

- Advertisement -

மாஸ்டர் ஸ்ட்ரோக்’லாம் இல்ல:

அதை விட பரம எதிரியான பாகிஸ்தானுக்கு எதிராக நடைபெற்ற மாபெரும் ஃபைனலில் கடைசி நேரத்தில் இந்தியாவுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்த மிஸ்பா-உல்-ஹக் வெற்றியை பறிக்கும் அளவுக்கு அதிரடியாக விளையாடினார். ஆனால் அவரை தடுக்கும் வகையில் ஹர்பஜன் சிங் போன்ற அனுபவ பவுலர் இருந்தும் கடைசி ஓவரை வீச இளம் வீரரான ஜோஹிந்தர் சர்மாவை அழைத்த தோனியின் மாஸ்டர் முடிவு கடைசியில் 5 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றியை பெற்றுக் கொடுத்தது. குறிப்பாக தவறான ஸ்கூப் ஷாட்டை அடித்து மிஸ்பா அவுட்டானாலும் ஆரம்பத்திலேயே ஒய்ட் பந்துடன் ஆரம்பித்து ஒரு மெகா சிக்ஸரை கொடுத்தாலும் அதற்காக அசராமல் தைரியத்துடன் வீசிய ஜோகிந்தர் சர்மா பாராட்டுகளை அள்ளினார்.

Misbah

அந்த வகையில் தோனியின் பல கேப்டன்ஷிப் மாஸ்டர் முடிவுகளில் அது முக்கியதாக பார்க்கப்படுகிறது. ஆனால் அந்த பரபரப்பான ஃபைனலில் விஸ்வரூபம் எடுத்து மிரட்டிய மிஸ்பாவுக்கு எதிராக கடைசி ஓவரை வீசுவதற்கு ஹர்பஜன் சிங் உள்ளிட்ட சீனியர் இந்திய பவுலர்கள் பயந்து போய் மறுப்பு தெரிவித்த காரணத்தாலேயே வேறு வழியின்றி ஜோஹிந்தர் சர்மாவை தோனி அழைத்ததாக அப்போட்டியில் பாகிஸ்தானின் கேப்டனாக செயல்பட்ட சோயப் மாலிக் தற்போது கூறியுள்ளார். இது பற்றி பிரபல பாகிஸ்தான் தொலைக்காட்சியில் அவர் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“நான் யாருடைய பெயரையும் சொல்லவில்லை. ஆனால் அந்த இறுதிப் போட்டியில் கடைசி ஓவருக்கு முன்பாக ஒவ்வொரு இந்திய பந்து வீச்சாளர்களுக்கும் ஒரு ஓவர் மீதமிருந்தது. ஆனால் அவர்கள் கடைசி ஓவரை வீசுவதற்கு மறுப்பு தெரிவித்து விட்டார்கள். ஏனெனில் அவர்கள் மிஸ்பாவுக்கு எதிராக பந்து வீச பயந்து விட்டார்கள். காரணம் ஏற்கனவே அவர் மைதானத்தில் நாலாபுறங்களிலும் அவர்களை சரமாரியாக அடித்திருந்தார். மேலும் அப்போட்டியில் அனைவரும் மிஸ்பாவின் அந்த ஸ்கூப் ஷாட் பற்றியே பேசுகிறார்கள்”

“ஆனால் நான் உங்களுக்கு ஒன்று சொல்கிறேன். அந்த சமயத்தில் மட்டும் பாகிஸ்தான் 9 விக்கெட்டுகளை இழக்காமல் இருந்திருந்தால் அவர் நேராக சிக்சர் அடித்து வெற்றி பெற வைத்திருப்பார். ஏனெனில் ஏற்கனவே அந்த ஓவரில் ஜோஹிந்தர் சர்மாவை நேராக அவர் ஒரு சிக்சர் அடித்திருந்தார்” என்று கூறினார். அதாவது அந்த பைனலில் மிஸ்பாவின் அதிரடியான ஆட்டத்திற்கு பயந்து கடைசி ஓவரை வீசுவதற்கு இந்திய சீனியர் பவுலர்கள் மறுப்பு தெரிவித்து விட்டதாக சோயப் மாலிக் கூறியுள்ளார்.

ஆனால் உண்மையாகவே அப்போட்டியில் ஆர்பி சிங், ஸ்ரீசாந்த், இர்பான் பதான் ஆகிய 2 இந்திய முதன்மை வேகப்பந்து வீச்சாளர்களும் 4 ஓவர்களை முழுமையாக வீசி முடித்து விட்ட காரணத்தாலேயே ஸ்பின்னரான ஹர்பஜன் சிங்கிற்கு ஒரு ஓவர் மீதமிருந்தும் அவருக்கு பதிலாக ஜோஹிந்தர் சர்மாவை தோனி தேர்வு செய்தார். எனவே இத்தனை வருடங்கள் கழித்து அவர் கூறும் இந்த கருத்தை இந்திய ரசிகர்கள் உருட்டலாகவே பார்க்கிறார்கள்.

Advertisement