ஐசிசி 2025 சாம்பியன்ஸ் ட்ராபி கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானில் நடைபெற்று வருகிறது. அதில் நடப்பு சாம்பியனாக களமிறங்கிய பாகிஸ்தான் வெறும் 5 நாட்களில் அடுத்தடுத்த தோல்விகளை சந்தித்து வெளியேறியது. குறிப்பாக பரம எதிரி இந்தியாவுக்கு எதிராக போராடாமலேயே தோற்ற அந்த அணி சொந்த மண்ணில் நடைபெற்ற ஐசிசி தொடரில் ஒரு வெற்றியைக் கூட பதிவு செய்யாமல் மோசமான உலக சாதனை படைத்து பரிதாபமாக வெளியேறியது.
இந்த சூழ்நிலையில் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் முன்னாள் பாகிஸ்தான் வீரர்கள் வர்ணனையாளர்களாக செயல்பட்டு வருகிறார்கள். அதில் ஒரு தொலைக்காட்சியில் முன்னாள் வீரர்கள் சோயப் அக்தர் மற்றும் முகமது ஹபீஸ் ஆகியோர் நேரலையில் மோதிக்கொண்டனர். அதில் 1990களில் விளையாடிய வீரர்கள் பாகிஸ்தானுக்காக எதையுமே விட்டுச் செல்லவில்லை என்று ஹபீஸ் கடுமையாக விமர்சித்தார்.
1990இல் என்ன செஞ்சீங்க:
இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “நான் 1990களில் விளையாடிய வீரர்களின் பெரிய ரசிகன். ஆனால் மரபு என்று வரும் போது அவர்கள் பாகிஸ்தானுக்கு எதையும் விட்டு செல்லவில்லை. அவர்கள் எந்த ஐசிசி தொடரையும் வெல்லவில்லை. 1996, 1999, 2003 உலகக் கோப்பைகளில் அவர்கள் தோல்வியை சந்தித்தனர். 1999 உலகக்கோப்பை ஃபைனலுக்கு தகுதி பெற்றும் மோசமாக தோற்றோம்”
“நட்சத்திர அந்தஸ்து அடிப்படையில் அவர்கள் மெகா சூப்பர் ஸ்டார்கள். ஆனால் அவர்கள் ஐசிசி தொடர்களில் பாகிஸ்தானுக்கு வெற்றியை கொடுக்கவில்லை. 2007 உலகக் கோப்பையில் மோசமான தோல்வியை சந்தித்த அவர்கள் டி20 உலகக் கோப்பை ஃபைனலில் இந்தியாவிடம் தோற்றனர். 2009 டி20 உலகக் கோப்பையை யூனிஸ் கான் தலைமையில் வென்றது அடுத்த தலைமுறைக்கு உத்வேகத்தைக் கொடுத்தது”
73 வெற்றிகள்:
“துரதிஷ்டவசமாக அதே சமயத்தில் ஏற்பட்ட மோசமான நிகழ்வால் (2009 இலங்கை அணி மீதான தாக்குதல்) பாகிஸ்தான் கிரிக்கெட் இன்னும் மீண்டு வர முடியாமல் தடுமாறுகிறது. பின்னர் 2017 சாம்பியன்ஸ் டிராபியை வென்றது மிகப்பெரிய உத்வேகம். அந்த வகையில் 1990களில் இருந்தவர்களால் திறமை இருந்தும் ஐசிசி தொடரை வெல்ல முடியவில்லை” எனக் கூறினார்.
இதையும் படிங்க: உண்மையா சொல்லனும்னா துபாய் பிட்ச்ல எங்களுக்கு அந்த ஹெல்ப் இருக்கு – முகமது ஷமி ஓபன்டாக்
அப்போது குறிக்கிட்ட சோயப் அக்தர் “அந்தக் காலகட்டங்களில் இந்தியாவுக்கு எதிராக 73 ஒருநாள் போட்டிகளை நாங்கள் தான் வென்றோம்” என்று பதிலடி கொடுத்தார். அதற்கு இம்ரான் கான் மற்றும் 1990களில் இருந்த வீரர்கள் உருவாக்கிய மரபில் சந்தேகம் இல்லை என்று ஹபீஸ் கூறினார். அவருடைய மழுப்பலை ஏற்றுக் கொள்ளாத அக்தர் “இப்போது உங்களால் சமாளிக்க முடியாது. நீங்கள் சொன்னது ஏற்கனவே வீடியோவில் இருக்கிறது. நீங்கள் ஏற்கனவே பெரிய வீரர்கள் பற்றி பேசி விட்டீர்கள்” என்று கூறினார்.



