தைரியம் இருந்தா என் முகத்து நேராக அதை சொல்லச்சொல்லுங்க பாப்போம் – சேவாக்க்கு சோயப் அக்தர் பதிலடி?

Akhtar
- Advertisement -

உலக அளவில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ஆசிய கோப்பையின் 2வது லீக் போட்டியில் சிறப்பாக செயல்பட்ட இந்தியா பரம எதிரியான பாகிஸ்தானை போராடி 5 விக்கெட் வித்தியாசத்தில் சாய்த்தது. துபாயில் விறுவிறுப்பாக நடைபெற்ற அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் ஆரம்ப முதலே சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்து 19.5 ஓவரில் 147 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணிக்கு அதிகபட்சமாக முஹம்மது ரிஸ்வான் 43 ரன்கள் எடுக்க இந்தியா சார்பில் பந்துவீச்சில் அதிகபட்சமாக புவனேஸ்வர் குமார் 4 விக்கெட்டுகளை எடுத்தார்.

அதை துரத்திய இந்தியாவுக்கு கேஎல் ராகுல் முதல் ஓவரிலேயே கோல்டன் டக் அவுட்டாகி ஏமாற்றினாலும் ரோஹித் சர்மா 12, விராட் கோலி 35, சூரியகுமார் யாதவ் 18, ரவீந்திர ஜடேஜா 35 என முக்கிய வீரர்கள் அனைவரும் கணிசமான ரன்களை எடுக்க கடைசியில் அதிரடியாக 33* (17) ரன்களை விளாசிய ஹர்திக் பாண்டியா சிக்சருடன் பினிஷிங் கொடுத்தார். அதனால் 19.4 ஓவரில் இலக்கை எட்டிய இந்தியா இதே மைதானத்தில் கடந்த வருடம் உலகக்கோப்பையில் முதல் முறையாக மறக்க முடியாத தோல்வியை கொடுத்த பாகிஸ்தானுக்கு தக்க பதிலடி கொடுத்து ஆசிய கோப்பையை வெற்றிகரமாக துவங்கியுள்ளது.

- Advertisement -

அக்தர் காட்டம்:
முன்னதாக இப்போட்டிக்கு கடந்த ஒரு மாதமாகவே உலகம் முழுவதிலும் பெரிய எதிர்பார்ப்பு நிலவிய நிலையில் இந்தியா மற்றும் பாகிஸ்தானை சேர்ந்த ரசிகர்களும் சமூக வலைதளங்களில் மல்லு கட்டியதை போல நிறைய முன்னாள் வீரர்கள் தங்களது அணிக்கு ஆதரவாகவும் இதற்கு முந்தைய போட்டியில் நிகழ்ந்த வரலாற்று நிகழ்வுகளின் நினைவுகளை பகிர்ந்து வந்தனர். அந்த வகையில் பாகிஸ்தானைச் சேர்ந்த முன்னாள் வீரர் சோயப் அக்தர் இப்போட்டியை முன்னிட்டு அந்நாட்டின் பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

அப்போது ஒருமுறை வீரேந்திர சேவாக் கூறியிருந்த மிகவும் புகழ்பெற்ற “அப்பன் எப்போதுமே அப்பன் தான்” என்ற நிகழ்வு போல இந்தியா – பாகிஸ்தான் மோதிய போட்டிகளில் வேறு ஏதேனும் ரசிகர்கள் அறியாத நிகழ்வுகள் நடந்திருந்தால் அதை பகிருமாறு அக்தரிடம் தொகுப்பாளர் கேட்டார். அதாவது இந்தியா – பாகிஸ்தான் மோதிய ஒரு போட்டியின் போது தொடர்ச்சியாக பவுன்சர்களை வீசி சோயப் அக்தர் தம்மை அச்சுறுத்த நினைத்ததாக தெரிவித்த முன்னாள் இந்திய வீரர் வீரேந்திர சேவாக் அதற்கு எதிர்ப்புறம் உங்களுடைய அப்பன் (சச்சின் டெண்டுல்கர்) இருக்கிறார், அவர் உங்களை சிக்ஸர் அடிப்பார் என்று பதிலடி கொடுத்ததாக கூறியிருந்தார்.

- Advertisement -

சொன்னது போலவே அந்த போட்டியில் அடுத்த சில பந்துகளில் சோயப் அக்தரை சச்சின் டெண்டுல்கர் சிக்ஸர் அடித்ததால் மீண்டும் அவரிடம் “அப்பன் எப்போதும் அப்பன் தான், மகன் எப்போதும் மகன்தான்” என்று பதிலடி கொடுத்ததாகவும் வீரேந்திர சேவாக் கடந்த 2010இல் ஒரு பேட்டியில் குறிப்பிட்டிருந்தார். அவருடைய அந்தப் பேட்டி இப்போதுவரை பிரபலமாக இருக்கும் நிலையில் அதை சுட்டிக்காட்டி தொகுப்பாளர் நேரலையில் கேள்வி எழுப்பினார்.

தைரியம் இருந்தால்:
அதனால் கோபமடைந்த சோயப் அக்தர் முதலில் அது போன்ற நிகழ்வு நடைபெறவில்லை என்றும் அதுபற்றி நேரடியாகவே சேவாக்கிடம் கேட்டபோது அவர் அவ்வாறு கூறவில்லை என்று மறுத்ததாகவும் தெளிவுபடுத்தினார். மேலும் ஒருவேளை தனது முகத்துக்கு நேராக அப்படி சொல்லியிருந்தால் அவரை சும்மா விட்டிருப்பேனா என்றும் காரமாக பேசினார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“ஒருவேளை அதை மட்டும் அவர் என்னிடம் நேரில் தெரிவித்திருந்தால் அவர் மிகவும் கஷ்டப்பட்டிருப்பார். மேலும் இதை அவர் எப்போது எங்கு தெரிவித்தார் என்பது எனக்கு தெரியவில்லை. ஒருமுறை வங்கதேசத்தில் அவரை சந்தித்தபோது இது பற்றி கேட்டேன். ஆனால் அவ்வாறு கூறவில்லை என்று அவர் மறுப்பு தெரிவித்து விட்டார்.

அது போக நாங்கள் வெற்றிகளை மரியாதையுடன் கொண்டாடுவோமே தவிர இது போல் பேசிக்கொள்ள மாட்டோம். நான் எப்போதும் இந்தியாவை அதிகமாக மதிக்கிறேன், உங்களையும் நான் மதிக்கிறேன். அதனால் இரு நாடுகளை பிளவுபடுத்தும் இதுபோன்ற கருத்துக்களை நான் எப்போதும் கூறியதில்லை” என்று கூறினார்.

இதையும் படிங்க : IND vs PAK : அது மட்டும் நடக்காம இருந்திருந்தா நாங்க ஜெயிச்சுருப்போம் – அறிவாளியாக பேசும் முன்னாள் பாக் கேப்டனுக்கு ரசிகர்கள் பதிலடி

இதே கேள்வியை கடந்த சில வருடங்களுக்கு முன்பாக ஒரு தொகுப்பாளர் கேட்ட போது சேவாக் மட்டும் அதை என்னிடம் நேராக தெரிவித்திருந்தால் அடித்திருப்பேன் என்று அகதர் கூறியிருந்தார். 2 வருடங்களுக்கு முன்பு கொடுத்த அந்த பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “அது போன்றவற்றை சொல்லிவிட்டு என்னிடமிருந்து அவர் தப்பி விடுவாரா? அல்லது நான்தான் அவரை விட்டிருப்பேனா? அது நடந்திருந்தால் களத்திலும் ஹோட்டலிலும் அவரை அடித்திருப்பேன்” எனக் கூறியிருந்தார்.

Advertisement