இந்திய நட்சத்திரங்களை தொடர்ந்து திரைப்படமாகும் பாக் ஜாம்பவானின் வாழ்க்கை வரலாறு, கெஸ்ட் ரோலில் ஆஸி ஜாம்பவான்

pakipl
- Advertisement -

சர்வதேச கிரிக்கெட்டில் தங்களது அபார திறமையால் நாட்டுக்காக தொடர்ச்சியாக வெற்றிகளைத் தேடி கொடுக்கும் கிரிக்கெட் வீரர்கள் ரசிகர்களிடையே சூப்பர் ஸ்டார்களாக மாறுவார்கள். அது போன்ற வீரர்கள் காலத்திற்கும் நின்று பேசும் அளவுக்கு சாதனைகளையும் வெற்றிகளையும் படைத்து பல இளம் வீரர்களுக்கும் நாட்டிலுள்ள இளைஞர்களுக்கும் உத்வேகத்தைக் கொடுக்கும் ரோல் மாடல்களாக மாறுவார்கள். அந்த நட்சத்திர வீரர்கள் ஜாம்பவான்களாக உருவெடுப்பதற்கு முன்பாக எப்படி தங்களது இளம் வாழ்வில் கடினமாக உழைப்புகளையும் இன்னல்களையும் போராட்டங்களையும் சந்திக்கிறார்கள் என்ற பின்னணி ரசிகர்கள் உட்பட அனைவருக்கும் தெரியாது. அதற்காகவே அந்த ஜாம்பவான் வீரர்கள் ஓய்வு பெற்ற பின்பு தங்ககளது வாழ்க்கை வரலாற்றை சுயசரிதையாக எழுதி வெளியிடுவார்கள்.

தற்போது தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ப அவர்களைப் பற்றிய முழு வாழ்க்கை வரலாற்றையும் திரைப்படமாக எடுப்பதும் வழக்கமாகி வருகிறது.  சொல்லப்போனால் இந்திய முன்னாள் கேப்டன் மற்றும் நட்சத்திர விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் எம்எஸ் தோனியின் வாழ்க்கை வரலாறு பற்றி அவர் ஓய்வு பெறுவதற்கு முன்பாகவே “எம்எஸ் தோனி தி அன்டோல்ட் ஸ்டோரி” என்ற பெயரில் திரைப்படமாக எடுக்கப்பட்டு மிகப்பெரிய வெற்றி கண்டது. அதனால் ட்ரெண்ட் ஏற்பட்டதை போல அடுத்ததாக சச்சின் டெண்டுல்கர், கபில்தேவ், ஜூலன் கோஸ்வாமி போன்ற நட்சத்திர ஜாம்பவான் வீரர்கள் மற்றும் வீராங்கனைகளின் வாழ்க்கை வரலாறு திரைப்படங்களாக வெளிவந்தன.

- Advertisement -

சோயப் அக்தர்:
அப்படி இதுவரை இந்தியாவை சேர்ந்த விளையாட்டு வீரர்கள் பற்றிய திரைப்படங்கள் வெளிவந்து கொண்டிருந்த நிலையில் முதல்முறையாக பாகிஸ்தானைச் சேர்ந்த நட்சத்திரம் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயப் அக்தர் பற்றிய வாழ்க்கை வரலாற்று படம் விரைவில் வெளியாக உள்ளது. பாகிஸ்தானின் ராவல்பிண்டி நகரில் பிறந்த இவர் உள்ளூர் கிரிக்கெட்டில் அதிரடியான வேகத்தில் பந்து வீசியதால் கடந்த 1997இல் சர்வதேச அரங்கில் அறிமுகமாகி அடுத்த சில வருடங்களில் உலகை மிரட்டும் நம்பர் ஒன் வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவராக உருவெடுத்தார்.

கிட்டத்தட்ட பவுண்டரி எல்லையின் அருகே இருந்து நீண்ட முடிகளுடன் அதிரடியான வேகத்தில் ஓடி வரும் அவர் அசுர வேகப்பந்துகளை பந்துகளை வீசி ஜாம்பவான்கள் சச்சின் டெண்டுல்கர், ரிக்கி பாண்டிங், பிரைன் லாரா உட்பட உலகின் அத்தனை டாப் பேட்ஸ்மேன்களையும் திணறடித்த பெருமைக்குரியவர். பவுன்சர்கள், பீமர் பந்துகள் என அவரது காலத்தில் இருந்த பவுலர்களுக்கு சாதகமான விதிமுறைகளை பயன்படுத்தி பல முறை பேட்ஸ்மேன்களை பதம் பார்த்த அவர் சச்சின் டெண்டுல்கர், வீரேந்திர சேவாக், ராகுல் டிராவிட் போன்ற இந்திய பேட்ஸ்மேன்களுக்கு எதிராகவும் பல முறை வெற்றிகரமாக செயல்பட்டுள்ளார்.

- Advertisement -

ராவில்பிண்டி எக்ஸ்பிரஸ்:
100 சதங்களை அடித்து அவ்வளவு எளிதில் உடைக்க முடியாத உலக சாதனை படைத்துள்ள சச்சினை போல பந்துவீச்சில் தனது பலமான வேகத்தைப் பயன்படுத்திய சோயப் அக்தர் கடந்த 2002இல் நியூசிலாந்துக்கு எதிராக 161 கி.மீ வேகப்பந்தை வீசி சர்வதேச கிரிக்கெட்டில் அதிவேகமான பந்தை வீசிய பந்து வீச்சாளர் என்ற உலக சாதனை படைத்துள்ளார். மொத்தம் 444 விக்கெட்களை எடுத்து பாகிஸ்தானின் ஜாம்பவான் பந்து வீச்சாளர்களில் ஒருவராக போற்றப்படும் அவர் நிறைய இளம் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு ரோல் மாடலாக திகழ்கிறார் என்று கூறலாம்.

இந்த நிலையில் எக்ஸ்பிரஸ் வேகத்தில் பந்து வீசக்கூடிய அவரை ராவல்பிண்டி எக்ஸ்பிரஸ் என்று ரசிகர்களும் வல்லுனர்களும் போற்றுவதால் அதே பெயரை தனது வாழ்க்கை வரலாற்று படத்திற்கு வைத்துள்ளதாக அறிவித்துள்ள சோயப் அக்தர் பாகிஸ்தானின் பிரபல இயக்குனர் முகமது பராஸ் காசிர் இயக்கும் தனது படம் வரும் 2023 நவம்பர் 16இல் வெளியாக உள்ளதாகவும் தனது டுவிட்டரில் அறிவித்துள்ளார். அதற்கான மோசன் வீடியோவையும் வெளியிட்டுள்ள அவர் இது பற்றி குறிப்பிட்டுள்ளது பின்வருமாறு.

“இந்த அழகான பயணத்தை துவங்குகிறேன். என்னுடைய வாழ்க்கை பற்றிய கதையை “ராவல்பிண்டி எக்ஸ்பிரஸ் – முரண்பாடுகளுக்கு எதிராக ஓடியவர்” என்ற திரைப்படமாக துவங்குவதை அறிவிக்கிறேன். நீங்கள் இதற்கு முன் செல்லாத பயணத்தில் வந்துள்ளீர்கள். இது முதல் பாகிஸ்தான் விளையாட்டு வீரரை பற்றிய படமாகும். சர்ச்சைக்குரிய வகையில் உங்களது படமாகும்” என்று கூறியுள்ளார்.

இந்த படத்தில் ஆஸ்திரேலிய ஜாம்பவான் ப்ரெட் லீ கெஸ்ட் ரோலில் வர உள்ளதாகவும் அவர் மறைமுகமாக கூறியுள்ளார். அதிவேகமான பந்துகளை வீசுவதற்கு டிராக்டர் போன்ற கடினமான வாகனங்களை கட்டி இழுத்தாக சமீபத்திய பேட்டிகளில் சோயப் அக்தர் தெரிவித்திருந்தார். எனவே உலக கிரிக்கெட் அரங்கில் வேகத்தில் மின்னுவதற்கு எந்த அளவுக்கு அவர் உழைத்தார் என்பது போன்ற அவரது பின்னணி வாழ்க்கையை தெரிந்து கொள்ள இந்தத் திரைப்படத்திற்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.

Advertisement