அதை செஞ்சு என்னோட உலக சாதனையை உடைத்தால் முத்தம் கொடுத்து பாராட்டுறேன் – உம்ரானுக்கு அக்தர் ஓப்பன் அட்வைஸ்

- Advertisement -

ஜம்மு காஷ்மீரை சேர்ந்த இளம் கிரிக்கெட் வீரர் உம்ரான் மாலிக் கடந்த 2021 ஐபிஎல் தொடரில் அறிமுகமாகி 140 கி.மீ வேகத்தில் தொடர்ச்சியாக பந்து வீசி பலரது பாராட்டுகளை அள்ளினார். அதனால் ஹைதராபாத் நிர்வாகம் பெரிய தொகைக்கு தக்க வைத்த நிலையில் 2022 சீசனில் வேகத்தை அதிகரித்து தொடர்ந்து 150 கி.மீ வேகத்தில் பந்து வீசி எதிரணி பேட்ஸ்மேன்களின் ஸ்டம்ப்புகளை பறக்க விட்ட அவர் ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமான பந்தை (157.0) வீசிய இந்திய பவுலராக வரலாற்று சாதனை படைத்தார். அதனால் நிறைய முன்னாள் வீரர்களின் பாராட்டுக்களுடன் இந்தியாவுக்காக அறிமுகமான அவர் ஆரம்பத்தில் வேகத்தை மட்டும் நம்பி பந்து வீசியதால் ரன்களை வாரி வழங்கினார்.

- Advertisement -

அதன் காரணமாக கிண்டல்களையும் விமர்சனங்களையும் சந்தித்த அவர் 2 போட்டிகளுடன் கழற்றி விடப்பட்டு 2022 ஆசிய மற்றும் டி20 உலக கோப்பையிலும் தேர்வு செய்யப்படவில்லை. ஆனால் அவரை சரியாக பயன்படுத்தாமல் இந்தியா தவற விட்டு விட்டதாக பிரட் லீ, வாசிம் அக்ரம் போன்ற வெளிநாட்டு ஜாம்பவான் வீரர்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தினர். அந்த நிலையில் உள்ளூர் கிரிக்கெட்டுக்கு சென்ற சில யுக்திகளை கற்று வந்த அவர் பும்ரா போன்ற முதன்மை வீரர்கள் காயமடைந்ததால் மீண்டும் இந்தியாவுக்காக விளையாடும் வாய்ப்பை பெற்றார்.

காத்திருக்கும் அக்தர்:
ஆனால் இம்முறை வேகத்துடன் நல்ல லைன், லென்த் போன்றவற்றை பயன்படுத்தி விவேகமாக பந்து வீசிய அவர் குறைவான ரன்களை கொடுத்து விக்கெட்டுகளை எடுத்து அசத்தி வருகிறார். குறிப்பாக கடந்த ஜனவரியில் இலங்கைக்கு எதிராக நடைபெற்ற தொடரில் கேப்டன் சனாக்காவை 155 கி.மீ வேகப் பந்தில் அவுட்டாக்கிய அவர் சர்வதேச கிரிக்கெட்டில் அதிவேகமான பந்தை வீசிய இந்திய பவுலராக சாதனை படைத்தார். அதனால 2003 உலக கோப்பையில் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் அதிவேகமான பந்தை (161 கி.மீ) வீசி பவுலராக உலக சாதனை படைத்துள்ள சோயப் அக்தரின் சாதனையை உம்ரான் மாலிக் உடைப்பாரா என்று எதிர்பார்ப்பு நிலவுகிறது.

akhtar

இந்நிலையில் தமது சாதனையை 20 யார்ட்டுக்கு பதிலாக 26 யார்ட் தூரத்திலிருந்து ஓடி வந்தால் முறியடிக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கும் சோயப் அக்தர் அதை உம்ரான் மாலிக் செய்தால் அவரை அன்புடன் கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்து பாராட்டக் காத்திருப்பதாக தெரிவித்துள்ளார். தனது சாதனையை உம்ரான் மாலிக் உடைத்தால் மிகவும் மகிழ்ச்சியென்று கடந்த ஐபிஎல் தொடரின் போதே தெரிவித்திருந்த அவர் இது பற்றி சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு. “மிகவும் வலுவாக உள்ள அவருடைய ரன் அப் மிகவும் பவராக இருக்கிறது. அவருடைய கை வேகங்களும் சிறப்பாக உள்ளது. குறிப்பாக சனாக்காவை அவர் அவுட்டாக்கிய பந்தை நீங்கள் பார்க்கும் போது அது மிகவும் இரக்கமற்ற பவுலிங் என்பதை உணர முடியும்”

- Advertisement -

“எனவே உம்ரான் கொஞ்சம் கொஞ்சமாக வேகமாக பந்து வீசும் கலையை கற்று வருகிறார். தற்போதைக்கு டெக்னிக்கல் அளவில் இன்னும் கற்றுக் கொள்ளுங்கள். உங்களுடைய ஆக்ரோசத்தை குறைக்காதீர்கள். ஒருவேளை உங்களது பவுலிங் தோற்கடிக்கப்பட்டால் கூட அதற்காக உங்களுடைய ஆக்ரோசத்தை குறைக்காதீர்கள். எப்போதும் வேகமாக பந்து வீச முயற்சிப்பதை கைவிடாதீர்கள். மேலும் களத்திற்குள் நீங்கள் செல்லும் போது மைதானத்தை உங்களது கட்டுப்பாட்டிற்குள் எடுத்துக் கொள்ள வேண்டும். களத்திற்கு வெளியே தொடர்ந்து ஓய்வெடுக்காமல் பயிற்சி எடுங்கள்”

Shoaib Akhtar Umran Malik

“நீங்கள் மிகச் சிறந்த நாட்டுக்காக விளையாடுகிறீர்கள். அங்குள்ள மக்கள் உங்கள் மீது நிறைய அக்கறையும் மரியாதையும் காட்டுகிறார்கள். அதனால் அவர்களுடைய உணர்வுகளை கீழே விடாத வகையில் பெரிய மனதுடன் பந்து வீசங்கள். பொதுவாக நான் 26 யார்ட்டிலிருந்து பந்து வீசுவேன். ஆனால் உம்ரான் 20 யார்ட் மட்டுமே எடுக்கிறார். எனவே அவர் 26 யார்ட் எடுக்கும் போது அவருடைய தசைகள் இன்னும் வித்தியாசமாக மாறுபடும்”

இதையும் படிங்க:பிஎஸ்எல் 2023 : கிறிஸ் கெயில் உலக சாதனையை உடைத்த பாபர் அசாம் – விராட் கோலியையும் மிஞ்சி கிண்டல்களுக்கு பதிலடி

“வரும் காலங்களில் அவர் அதை கற்றுக் கொள்வார் என்று நம்புகிறேன். தேவைப்பட்டால் நானும் உதவி செய்ய தயாராக இருக்கிறேன். ஒருவேளை நீங்கள் என்னுடைய சாதனையை உடைக்க விரும்பினால் தாராளமாக செய்யுங்கள். நான் அதை செய்து 20 வருடங்கள் ஆகிவிட்டதால் தயவு செய்து உடையுங்கள். அதை செய்தால் நான் தான் உங்களை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்து பாராட்டும் முதல் நபராக இருப்பேன்” என்று கூறினார்.

Advertisement