துவண்டு கிடக்கும் வெஸ்ட் இண்டீஸை தூக்கி நிறுத்த வரும் குட்டி சந்தர்பால் – ரசிகர்கள் மகிழ்ச்சி, காரணம் இதோ

Shivanarine Chanderpaul
- Advertisement -

ஆஸ்திரேலியாவில் பரபரப்பாக நடைபெற்று வரும் 2022 ஐசிசி டி20 உலக கோப்பையில் நிறைய போட்டிகள் ஏராளமான எதிர்பாராத திருப்பங்களை கொடுத்து ரசிகர்களுக்கு விருந்து படைத்து வருகிறது. ஆனால் 2 உலகக் கோப்பைகளை வென்று வெற்றிகரமான அணியாக திகழும் வெஸ்ட் இண்டீஸ் ஏற்கனவே நேரடியாக சூப்பர் 12 சுற்றுக்கு தகுதி பெற முடியாத நிலையில் அதை எட்டுவதற்காக விளையாடிய முதல் சுற்றில் நமீபியா போன்ற கத்துக்குட்டிகளுடன் தோற்று ஆரம்பத்திலேயே வெளியேறியது ரசிகர்களுக்கு அதிர்ச்சியையும் ஏமாற்றத்தையும் கொடுத்தது. 70, 80களில் உலகையே தனது கட்டுக்குள் வைத்து மிரட்டிய வெஸ்ட் இண்டீஸ் அடுத்தடுத்த 2 உலக கோப்பைகளை வென்றாலும் 21ஆம் நூற்றாண்டில் தரமான அடுத்த தலைமுறை வீரர்கள் இல்லாததால் ஒருநாள் மட்டும் டெஸ்ட் கிரிக்கெட்டில் இப்போது வரை தடுமாறுகிறது.

ஆனாலும் கிறிஸ் கெயில், ப்ராவோ என தரமான அதிரடி நாயகன்கள் இருந்ததால் முரட்டுத்தனமான ஆட்டத்தை வெளிப்படுத்தி எதிரணிகளை பந்தாடிய அந்த அணி குறைந்தபட்சம் டி20 கிரிக்கெட்டில் அசத்தலாக செயல்பட்டது அந்நாட்டு ரசிகர்களை மகிழ்ச்சியில் வைத்திருந்தது. ஆனால் தற்போது கெயில் போன்ற மூத்த வீரர்களின் ஓய்வு, ரசல் போன்ற முக்கிய வீரர்கள் பணத்துக்காக ஐபிஎல் போன்ற தொடருக்கு முன்னுரிமை அளிப்பதால் டி20 கிரிக்கெட்டிலும் வெஸ்ட் இண்டீஸ் திண்டாட துவங்கியுள்ளது எதிரணி ரசிகர்களை கூட ஏமாற்றமடைய வைக்கிறது.

- Advertisement -

குட்டி சந்தர்பால்:
இந்நிலையில் உலக கோப்பையில் ஏமாற்றத்துடன் வெளியே வெஸ்ட் இண்டீஸ் அடுத்ததாக வரும் நவம்பர் இறுதியில் இதே ஆஸ்திரேலியாவில் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. அதற்காக அறிவிக்கப்பட்ட வெஸ்ட் இண்டீஸ் அணியில் ரசிகர்களிடம் மிகவும் புகழ் பெற்ற நட்சத்திர முன்னாள் வீரர் சிவ்நரைன் சந்தர்பால் மகன் தகேநரைண் சந்தர்பால் முதல் முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் 11867 ரன்களையும் ஒருநாள் கிரிக்கெட்டில் 8778 ரன்களையும் எடுத்து ஜாம்பவான் பிரைன் லாராவுக்கு பின் அதிக ரன்கள் குவித்த வெஸ்ட் இண்டீஸ் வீரராக சாதனை படைத்த சந்தர்பால் தன்னுடைய வித்தியாசமான பேட்டிங் ஸ்டேன்ஸ் வைத்து உலகின் அத்தனை எதிரணி பவுலர்களுக்கும் சிம்ம சொப்பனமாக திகழ்ந்ததை ரசிகர்கள் மறக்க முடியாது.
அவரை போலவே கிரிக்கெட்டில் மிகவும் ஆர்வம் கொண்டுள்ள அவரது மகனும் வெஸ்ட் இண்டீசுக்கு விளையாடுவதற்காக சமீப காலங்களில் உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாடி வருகிறார். குறிப்பாக அவரைப்போலவே களமிறங்கியதும் ஸ்டம்பின் பெய்ல்ஸை எடுத்து தன்னுடைய பேட்டிங் ஃகார்ட் போடுவதை வழக்கமாக வைத்துள்ள இவர் சமீபத்தில் உள்ளூர் கிரிக்கெட்டில் தன்னுடைய தந்தையுடன் இணைந்து விளையாடியது உலக அளவில் வைரலானது. தற்போது 26 வயதாகும் அவர் இதுவரை முதல் தர கிரிக்கெட்டில் 5 சதங்கள் உட்பட 2669 ரன்களை குவித்து நம்பிக்கை அளிக்கும் வகையில் செயல்பட்டு வருவதால் முதல் முறையாக தேர்வாகியுள்ளதாக வெஸ்ட் இண்டீஸ் தேர்வுக்குழு தலைவர் தேஷ்மென்ட் ஹையன்ஸ் தெரிவித்துள்ளார்.

இதனால் மகிழ்ச்சியடைந்துள்ள அந்நாட்டு ரசிகர்கள் வரும் காலங்களில் முதலில் டெஸ்ட் கிரிக்கெட்டில் கால் தடம் பதித்து பின்னர் ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டிலும் அவர் அசத்துவார் என்று நம்பிக்கை தெரிவிக்கிறார்கள். அதே போல் துவண்டு கிடக்கும் வெஸ்ட் இண்டீஸ் அணியை தந்தையின் வழியில் அபாரமாக செயல்பட்டு வரும் காலங்களில் இந்த இளம் வீரர் தூக்கி நிறுத்த வேண்டும் என்பதே ஒட்டுமொத்த உலக கிரிக்கெட் ரசிகர்களின் விருப்பமாகவும் உள்ளது.

ஆஸ்திரேலிய தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் அணி இதோ: க்ரைக் ப்ரத்வேய்ட் (கேப்டன்), ஜெர்மைன் ப்ளாக்வுட், நிக்ரும்ஹ போனர், சமர் ப்ரூக்ஸ், தகேநரைன் சந்தர்பால், ரோஸ்டன் சேஸ், ஜோஷுவா டா சில்வா, ஜேசன் ஹோல்டர், அல்சாரி ஜோசப், கைல் மேயர்ஸ், ஆண்டர்சன் பில்லிப், ரேமன் ரெய்ப்ர், கெமர் ரோச், ஜேய்டென் சீல்ஸ், டேவோன் தாமஸ்

Advertisement