
ஐசிசி டி20 உலகக் கோப்பை 2024 கிரிக்கெட் தொடரில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்தியா முதல் 3 லீக் போட்டிகளில் 3 வெற்றிகள் பெற்றுள்ளது. அதனால் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ள இந்தியா இத்தொடரில் நன்றாகவே செயல்பட்டு வருகிறது. முன்னதாக இந்த தொடரில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சிவம் துபே தடுமாற்றமாக செயல்பட்டு வருவது ரசிகர்களை கடுப்பாக வைத்தது.
ஏனெனில் ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணியில் கடந்த வருடம் அபாரமாக விளையாடிய அவர் 5வது கோப்பையை வெல்ல உதவினார். அதே காரணத்தால் இந்திய டி20 அணியிலும் கம்பேக் கொடுத்த அவர் 2023 ஆசிய விளையாட்டுப் போட்டிகளிலும், 2024 ஆப்கானிஸ்தான் டி20 தொடரிலும் நன்றாக விளையாடினார். அதே வேகத்தில் 2024 ஐபிஎல் தொடரிலும் சிஎஸ்கே அணியில் அசத்திய அவர் சிக்சர்களை பறக்க விட்டார்.
துபேவின் தடுமாற்றம்:
அதன் காரணமாக டி20 உலகக் கோப்பையில் தேர்வான அவர் ஐபிஎல் தொடரின் கடைசிக்கட்ட போட்டிகளில் சுமாராக விளையாட விளையாடி சிஎஸ்கே அணியின் தோல்விக்கு காரணமாக அமைந்தார். அப்போதே ரசிகர்கள் சந்தேகப்பட்ட நிலையில் தற்போது டி20 உலகக் கோப்பையிலும் தடுமாற்றமான துவக்கத்தை பெற்ற அவர் அமெரிக்காவுக்கு எதிரான போட்டியில் மெதுவாக விளையாடி 31* ரன்கள் எடுத்தார்.
இந்நிலையில் ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணிக்காக விளையாடியது போன்ற மைதானங்கள் உலகக் கோப்பையில் இல்லை என்று சிவம் துபே தெரிவித்துள்ளார். அதனால் இந்தியாவில் சிஎஸ்கே அணிக்காக விளையாடுவதை மிஸ் செய்வதாக தெரிவிக்கும் அவர் இந்திய அணி நிர்வாகம் முடிந்தளவுக்கு அதிரடியாக விளையாடுமாறு ஆதரவு கொடுத்துள்ளதாகவும் கூறியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு.
“என்னுடைய ஃபார்மில் தடுமாறும் நான் செயல் முறையில் கவனம் செலுத்துகிறேன். ஆனால் இங்கே அழுத்தமில்லை. ஏனெனில் “இங்கே அடிப்பது கடினம் என்றாலும் உன்னிடம் சிக்சர் அடிக்கும் திறமை இருப்பதால் அதை பயன்படுத்து” என்று பயிற்சியாளர்கள் ஆதரவு தெரிவித்தனர். கடந்த காலங்களில் நான் என்ன செய்தேன் என்பதில் சந்தேகப்படவில்லை. ஆனால் சிஎஸ்கே அணியில் நான் செய்ததை இந்த சூழ்நிலையில் செய்ய முடியாது என்று நினைக்கிறேன்”
இதையும் படிங்க: ட்ரேக்டர் விற்ற காசுல பாகிஸ்தான் மாதிரி இந்தியா ஏமாத்தல.. அவர் இதயத்தை ஜெய்ச்சுட்டாரு.. ரசிகர் பேட்டி
“இங்குள்ள சூழ்நிலைகளுக்கு வித்தியாசமான அணுகுமுறை தேவைப்படுகிறது. இங்கே விளையாடுவது ரஞ்சிக் கோப்பையில் விளையாடுவதைப் போன்ற உணர்வை எனக்கு கொடுக்கிறது. இங்கே முதல் பந்திலிருந்தே உங்களால் அடிக்க முடியவில்லை. நீங்கள் இங்கே நேரமெடுத்து விளையாட வேண்டியுள்ளது. எனவே கண்டிப்பாக இந்தியாவில் சிஎஸ்கே அணியில் சிக்ஸர் அடித்ததை நான் தற்போது மிஸ் செய்கிறேன். ஏனெனில் இங்கே வலைப்பயிற்சியில் கூட அதிரடியாக விளையாட முடியவில்லை. பந்து வீசுவது நன்றாக இருந்தாலும் சிக்ஸர் அடிப்பதற்கு வாய்ப்பு கிடைக்கவில்லை” என்று கூறினார்.