ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பையில் பாகிஸ்தானை 6 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து இந்தியா வெற்றி கண்டது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. ஜூன் ஒன்பதாம் தேதி அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்ற அந்தப் போட்டியில் முதலில் விளையாடிய இந்தியா 119 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக ரிஷப் பண்ட் 43, அக்சர் பட்டேல் 20 ரன்கள் எடுத்தனர்.
அதைத் தொடர்ந்து 120 ரன்களை துரத்திய பாகிஸ்தான் ஆரம்பம் முதலே இந்தியாவின் துல்லியமான பந்து வீச்சில் அதிரடியாக விளையாட முடியாமல் 20 ஓவரில் 113/7 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக முகமது ரிஸ்வான் 31 ரன்கள் எடுத்த நிலையில் இந்தியா சார்பில் அதிகபட்சமாக ஜஸ்ப்ரித் பும்ரா 3, ஹர்திக் பாண்டியா 2 விக்கெட்டுகள் எடுத்தனர்.
ரசிகர்கள் கோபம்:
அதனால் டி20 கிரிக்கெட்டில் ஆல் அவுட்டான போட்டியில் முதல் முறையாக வெற்றியை பதிவு செய்து இந்தியா சாதனை படைத்தது. முன்னதாக இந்தப் போட்டியில் பேட்டிங் துறையில் ரிஷப் பண்ட், அக்சர் படேல் தவிர்த்து கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி உட்பட அனைத்து வீரர்களுமே சொதப்பினர். குறிப்பாக மிடில் ஆர்டரில் களமிறங்கிய சிவம் துபே 9 பந்துகளை எதிர்கொண்டு 3 ரன்களில் அவுட்டாகி மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தினார்.
இருப்பினும் போட்டி நடைபெற்ற மைதானம் பேட்டிங் செய்வதற்கு சவாலாக இருந்ததால் சிவம் துபே அப்படி தடுமாறி அவுட்டானதை ரசிகர்கள் ஏற்றுக்கொள்கின்றனர். ஆனால் பாகிஸ்தான் பேட்டிங் செய்யும் போது பாபர் அசாம் அவுட்டானதும் மறுபுறம் முகமது ரிஸ்வான் நங்கூரமாக விளையாடத் துவங்கினார். அப்போது 7 ரன்களில் அவர் கொடுத்த அல்வா போன்ற கேட்ச் பவுண்டரி எல்லை அருகே நின்ற சிவம் துபே கைகளுக்கு நேராகச் சென்றது.
ஆனால் அந்த எளிதான கேட்சை அவர் பிடிக்காமல் கோட்டை விட்டது மொத்த இந்திய ரசிகர்களை கடுப்பாக்கியது. ஏனெனில் அதைப் பயன்படுத்தி அசத்தலாக விளையாடிய ரிஸ்வான் 31 ரன்கள் எடுத்து இந்தியாவின் வெற்றிக்கு அச்சுறுத்தலை கொடுத்தார். நல்லவேளையாக அப்போது பும்ரா அவரை க்ளீன் போல்ட்டாக்கி பாகிஸ்தானிடம் சந்திக்க வேண்டிய அவமான தோல்வியிலிருந்து இந்தியாவை காப்பாற்றினார். ஒருவேளை இந்தியா தோற்றிருந்தால் துபே விட்ட அந்த கேட்ச் தான் தோல்விக்கான முக்கிய காரணமாக இருந்திருக்கும்.
இதையும் படிங்க: டி20 உலககோப்பையில் எந்தவொரு வெஸ்ட் இண்டீஸ் வீரரும் செய்யாத சாதனையை நிகழ்த்திய – அகீல் ஹூசேன்
அதனால் வெற்றிக்கு மத்தியில் கோபமாக இருக்கும் ரசிகர்கள் துபே கேட்ச் விட்டதை ஏற்றுக்கொள்ளவே முடியாது என்று விமர்சித்து வருகின்றனர். குறிப்பாக ஐபிஎல் 2024 தொடரில் கடைசிக்கட்ட போட்டிகளில் பேட்டிங்கில் சொதப்பிய அவர் இம்பேக்ட் வீரராக விளையாடியதால் இப்படி ஃபீல்டிங்கில் சொதப்புகிறார். எனவே பேசாமல் இவரை நீக்கி விட்டு இப்போட்டியை களத்தில் இருந்து பார்த்த ரிசவர் பட்டியலில் இருக்கும் ரிங்கு சிங்கை கொண்டு வாருங்கள் என்று ரசிகர்கள் விளாசி வருகின்றனர்.