நியூசிலாந்து அணிக்கு எதிராக நேற்று அகமதாபாத் நகரில் நடைபெற்ற 2026 ஆம் ஆண்டிற்கான டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டியில் விளையாடிய இந்திய அணி 96 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று மூன்றாவது முறையாக டி20 சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியிருந்தது. இந்த போட்டியின் போது முதலில் விளையாடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 255 ரன்கள் குவித்து அசத்தியது.
கடைசி ஓவரில் அதிரடியாக விளையாடியது குறித்து : ஷிவம் துபே பேச்சு
இந்திய அணியின் இந்த மிகப்பெரிய ரன் குவிப்பிற்கு டாப் ஆர்டர் வீரர்கள் முக்கிய காரணமாக திகழ்ந்தனர். அதே வேளையில் பின்வரிசையில் ஏழாவது வீரராக களம் புகுந்த ஷிவம் துபே தான் சந்தித்த 8 பந்துகளில் 3 பவுண்டரி மற்றும் 2 சிக்சர் என 26 ரன்கள் குவித்து இறுதி நேரத்தில் அசத்தியதால் இந்திய அணி 250 ரன்கள் கடந்தது. இந்நிலையில் இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்ற பிறகு தனது பேட்டிங் குறித்த சில கருத்துக்களை ஷிவம் துபே பகிர்ந்திருந்தார்.
அந்த வகையில் அவர் கூறியதாவது : நான் மக்களின் ஆசிர்வாதத்தாலும், ஆதரவினாலும், உலக கிரிக்கெட் ரசிகர்களின் ஆதரவினாலும் இந்த மிகப்பெரிய மேடையில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளேன். எப்போதுமே நான் நானாகவே இருக்க விரும்புகிறேன். இந்திய அணிக்காக வெற்றிகளில் பங்காற்ற வேண்டும் என்பது மட்டுமே என்னுடைய எண்ணமாக இருந்து வருகிறது.
கடந்த உலக கோப்பை தொடரின் போது இறுதி போட்டியில் 26 முதல் 27 ரன்கள் வரை அடித்திருந்தேன். இந்த போட்டியிலும் 24-25 ரன்கள் வரை அடித்து வெற்றிக்கு உதவியுள்ளேன். இதை நினைத்தால் மகிழ்ச்சியாக இருக்கிறது. பயிற்சியாளரும், கேப்டனும் கொடுக்கும் ஆதரவு என்னை தெளிவாக செயல்பட வைக்கிறது. இந்த போட்டியிலும் நான் எந்த இடத்தில் பேட்டிங் கிடைத்தாலும் என்னுடைய பங்களிப்பை வழங்க வேண்டும் என்று நினைத்தேன்.
இதையும் படிங்க : இதைவிட ஸ்பெஷலான ஒன்னு இருக்காதுன்னு நினைக்குறேன்.. ஆட்டநாயகன் விருதுக்கு பிறகு – பும்ரா நெகிழ்ச்சி
அந்த வகையில் போட்டியின் இறுதி நேரத்தில் எனக்கு வாய்ப்பு கிடைத்த போது முதல் இரண்டு பந்துகளை சிங்கள் எடுத்து விளையாடினேன். அதற்கு காரணம் யாதெனில் : கடைசி ஓவரில் நிச்சயம் என்னால் இரண்டு முதல் மூன்று சிக்ஸர்களை விளாச முடியும் என்கிற நம்பிக்கைதான். அதன் காரணமாகவே முதல் இரண்டு பந்துகளை சிங்கிள் எடுத்த நான் கடைசி ஓவரில் அதிரடியை வெளிப்படுத்தினேன் என ஷிவம் துபே கூறியது குறிப்பிடத்தக்கது.



