இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான நடப்பு 2026 ஆம் ஆண்டிற்கான டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் மாபெரும் இறுதி போட்டியானது நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 255 ரன்கள் குவிக்க 256 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கு நியூசிலாந்து அணிக்கு நிர்ணயிக்கப்பட்டது. பின்னர் தொடர்ந்து விளையாடிய நியூஸிலாந்து அணி இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 19 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 159 ரன்களை மட்டுமே குவித்தது.
இதைவிட சிறப்பான தருணம் வேறு ஏதுமில்லை : ஜஸ்ப்ரீத் பும்ரா
இதன் காரணமாக இந்திய அணி 96 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியின் போது இந்திய அணி சார்பாக மிகச் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய ஜஸ்ப்ரீத் பும்ரா 4 ஓவர்கள் வீசி 15 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். இதன் காரணமாக அவருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தான் செயல்பட்ட விதம் குறித்து பேசிய ஜஸ்ப்ரீத் பும்ரா கூறுகையில் :
உண்மையிலேயே இந்த தருணம் மிகவும் ஸ்பெஷலான ஒன்று. ஏனெனில் இது என்னுடைய சொந்த மைதானம் இங்கு நான் ஒரு உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் வெற்றி பெற்று ஆட்டநாயகன் விருதினை வென்றதில் உண்மையிலேயே மகிழ்ச்சியாக உணர்கிறேன். இந்த போட்டியில் என்னுடைய திட்டத்தை மிகவும் எளிமையாக வைத்துக் கொண்டு என்னுடைய அனுபவத்தையும், என்னுடைய பலத்தையும் மட்டும் நம்பியே பந்து வீசினேன் கடவுளின் கருணையால் எனக்கு விக்கெட்டுகளும் கிடைத்து இந்த தொடர் சிறப்பாக நிறைவடைந்துள்ளது.
என்னுடைய பந்து வீச்சில் நான் எந்த ஒரு மாற்றத்தையும் பெரிதாக செய்யவில்லை. இந்த போட்டியில் என்னுடைய முழு திறனையும் வெளிப்படுத்த வேண்டும் என்பதை மட்டுமே நினைத்து பந்து வீசினேன். சொந்த மைதானத்தில் இது போன்ற ஒரு பெரிய போட்டியில் வெற்றி பெற்று ஆட்டநாயகன் விருதினை வென்றதை விட மகிழ்ச்சியான தருணம் இருக்காது என்று நினைக்கிறேன்.
இதையும் படிங்க : பேச என்னிடம் வார்த்தைகள் இல்லை.. எல்லாம் கனவு மாதிரி இருக்கு.. தொடர்நாயகன் – சஞ்சு சாம்சன் ஹேப்பி
என்னுடைய கிரிக்கெட் இங்குதான் துவங்கியது இன்று நான் இங்கு ஒரு ஐசிசி கோப்பையை வென்று ஆட்டநாயகனாக நிற்கிறேன். மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டத்திற்கு மத்தியிலும், என்னுடைய குடும்பத்தாருக்கு மத்தியிலும் நான் இந்த வெற்றியை பெற்றுள்ளேன். எனக்கு ஆதரவு தெரிவித்த அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என ஜஸ்ப்ரீத் பும்ரா கூறியது குறிப்பிடத்தக்கது.



