நியூசிலாந்து அணிக்கு எதிராக நேற்று அகமதாபாத் நகரில் நடைபெற்ற நடப்பு 2026 ஆம் ஆண்டிற்கான டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டியில் விளையாடிய இந்திய அணியானது 96 ரன்கள் வித்தியாசத்தில் அவர்களை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியது. இந்த போட்டியில் இந்திய அணியின் வெற்றிக்கு மிக முக்கியமான காரணமாக துவக்க வீரர் சஞ்சு சாம்சன் திகழ்ந்தார் என்றால் அது மிகையல்ல. ஏனெனில் இந்த போட்டியில் 46 பந்துகளை சந்தித்த அவர் 5 பவுண்டரி மற்றும் 8 சிக்சர் என 89 ரன்கள் குவித்து அசத்தியிருந்தார்.
நடப்பது எல்லாம் கனவு மாதிரி இருக்கு : சஞ்சு சாம்சன்
அவரது இந்த சிறப்பான செயல்பாடு காரணமாகவே இந்திய அணி மிகப்பெரிய ரன் குவிப்பை நோக்கி சென்றது மட்டுமின்றி வெற்றியும் பெற்றது. அதோடு ஏற்கனவே இந்த தொடரின் சூப்பர் 8 சுற்று போட்டிகள் மற்றும் அரையிறுதி போட்டி என தொடர்ந்து அசத்தி வந்த அவர் 5 போட்டிகளில் மட்டுமே விளையாடி இருந்தாலும் கிட்டத்தட்ட 200 ஸ்ட்ரைக் ரேட்டுடன் 300-க்கும் மேற்பட்ட ரன்களை குவித்ததால் அவருக்கு இந்த உலக கோப்பை தொடரின் தொடர் நாயகன் விருது வழங்கப்பட்டது.
இந்நிலையில் இந்த தொடர் நாயகன் விருதுக்கு பின்னர் பேசிய சஞ்சு சாம்சன் கூறுகையில் : உண்மையிலேயே இது எனக்கு கனவு போன்று இருக்கிறது. எனக்கு பேச வார்த்தைகள் இல்லை உணர்ச்சிகரமான தருணமாக இதை நினைக்கிறேன். இந்த தொடர் உண்மையிலேயே நான் நம்ப முடியாத வகையில் நிறைவடைந்து உள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் நான் 2024 டி20 உலக கோப்பை தொடரில் விளையாடிய போது ஒரு போட்டியில் கூட எனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.
அப்போதெல்லாம் நான் இந்திய அணியில் விளையாடி அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்று நினைத்து அதற்காகவே கடுமையாக உழைத்து வந்தேன். தற்போது இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு கடவுளின் கருணையால் இந்திய அணியில் இடம் கிடைத்து முக்கியமான போட்டிகளில் என்னுடைய சிறப்பான பங்களிப்பை வெளிப்படுத்தி வெற்றியும் பெற்றுள்ளேன்.
இதையும் படிங்க : தோற்றாலும் எங்களது வீரர்களை நெனச்சா ரொம்ப பெருமையா இருக்கு – நியூசி கேப்டன் பேச்சு
நியூசிலாந்து தொடருக்கு பின்னர் நான் மிகவும் மனமடைந்து விட்டேன். ஆனால் என்னுடைய விடயத்தில் கடவுள் வேறு திட்டங்களை வைத்து என்னை இங்கு கொண்டு வந்து நிறுத்தி இருக்கிறார். உண்மையிலேயே எனக்கு இது மகிழ்ச்சியான தருணமாகவும், பெருமையான தருணமாகவும் இருப்பதாக சஞ்சு சாம்சன் கூறியது குறிப்பிடத்தக்கது.



