
வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் பங்கேற்று வரும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் கடைசி போட்டி ஜூலை 27-ஆம் தேதி இந்திய நேரப்படி இரவு 7 மணிக்கு குயின்ஸ் பார்க் மைதானத்தில் நடைபெற்றது. இத்தொடரின் முதல் 2 போட்டிகளில் ஏற்கனவே அடுத்தடுத்த திரில் வெற்றிகளைப் பெற்று தொடரை கைப்பற்றிய இந்தியா இந்த சம்பிரதாய போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய இந்தியாவுக்கு கேப்டன் ஷிகர் தவான் – சுப்மன் கில் ஆகியோர் முதல் விக்கெட்டுக்கு நிதானமாகவும் அதிரடியாகவும் பேட்டிங் செய்து 113 ரன்கள் ஓபனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து மிகச் சிறப்பான தொடக்கம் கொடுத்தனர்.
அதில் 7 பவுண்டரியுடன் ஷிகர் தவான் 58 (74) ரன்களில் அவுட்டான போது வந்த மழை ஒரு மணி நேரம் பெய்து குறுக்கிட்ட நிலையில் மீண்டும் போட்டி துவங்கிய போது மீண்டும் ஒரு மணிநேரம் கொட்டி தீர்த்து சென்றது. அதனால் 40 ஓவர்களாக குறைக்கப்பட்ட இந்த போட்டி மீண்டும் தொடங்கிய போது 2-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த கில் – ஸ்ரேயாஸ் அய்யர் ஆகியோர் 86 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து இந்தியாவை மேலும் வலுப்படுத்தினர். அதில் ஸ்ரேயஸ் ஐயர் 44 (34) ரன்களில் ஆட்டமிழக்க அடுத்து வந்த சூரியகுமார் யாதவ் 8 (6) ரன்களில் அவுட்டானார். அதனால் 36 ஓவரில் இந்தியா 225/3 ரன்கள் எடுத்தபோது மீண்டும் வந்த மழை முதல் இன்னிங்ஸ் முடியும் நேரம் வரை வெளுத்து வாங்கியது.
அசத்திய இந்தியா:
அதனால் இந்தியாவின் இன்னிங்ஸ் முடிவுக்கு வந்ததாக அறிவிக்கப்பட்டதால் 7 பவுண்டரி 2 சிக்சருடன் 98* (98) ரன்கள் எடுத்திருந்த சுப்மன் கில் சதமடிக்கும் வாய்ப்பை நழுவவிட்டார். வெஸ்ட் இண்டீஸ் சார்பில் அதிகபட்சமாக ஹெய்டன் வால்ஸ் 2 விக்கெட்டுகள் எடுத்தார். அதை தொடர்ந்து டக் வொர்த் லீவிஸ் முறைப்படி 35 ஓவர்களில் 252 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று மாற்றியமைக்கப்பட்ட இலக்கை துரத்திய வெஸ்ட் இண்டீசுக்கு தனது முதல் ஓவரை வீசிய முகமது சிராஜ் கெய்ல் மேயர்ஸ், சமர் ப்ரூக்ஸ் ஆகிய 2 பேட்ஸ்மேன்களை அடுத்தடுத்து டக் அவுட் செய்து மிரட்டினார்.
அதனால் 0/2 என்ற மோசமான தொடக்கத்தை பெற்ற வெஸ்ட் இண்டீசுக்கு கடந்த போட்டியில் சதமடித்த ஷாய் ஹோப் இம்முறை 22 (33) ரன்களில் ஆட்டமிழக்க அவருடன் அதிரடி காட்டிய பிரண்டன் கிங் 42 (37) ரன்களில் அவுட்டானார். அந்த நிலைமையில் களமிறங்கிய கார்ட்டி 5 (17) ரன்களில் ஆட்டமிழக்க மிடில் ஆர்டரில் அதிரடி காட்ட முயன்ற கேப்டன் நிக்கோலஸ் பூரன் 42 (32) ரன்களில் அவுட்டானார். இறுதியில் எதிர்புறம் வந்த பேட்ஸ்மேன்கள் அனைவரும் இந்தியாவின் தரமான பந்துவீச்சுக்கு பதில் சொல்ல முடியாமல் சொற்ப ரன்களில் நடையை கட்டியதால் 26 ஓவர்களில் வெறும் 137 ரன்களுக்கு வெஸ்ட் இண்டீஸ் ஆல் அவுட்டானது. இந்தியா சார்பில் பந்துவீச்சில் அதிகபட்சமாக சஹால் 4 விக்கெட்களை எடுத்தார்.
வைட்வாஷ் வெற்றி:
அதனால் கடந்த 2 போட்டிகளில் போல் அல்லாமல் இம்முறை 119 ரன்கள் வித்தியாசத்தில் மெகா வெற்றி பெற்ற இந்தியா 3 – 0 (3) என்ற கணக்கில் ஒயிட் வாஷ் வெற்றி பெற்றது. இந்த வெற்றிக்கு 98 ரன்கள் எடுத்து முக்கிய பங்காற்றிய கில் ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதுகளை வென்றார். முன்னதாக இந்த தொடரில் கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி இல்லாத நிலைமையில் ஷிகர் தவான் தலைமையில் இளம் வீரர்களுடன் களமிறங்கிய இந்தியா கொஞ்சமும் சுணக்கம் இல்லாமல் தங்களுக்கு சரிசமமான வெஸ்ட் இண்டீசை அனைத்துப் போட்டிகளிலும் அற்புதமாக எதிர்கொண்டு வைட்வாஷ் வெற்றியை பதிவு செய்து சாதித்து காட்டியுள்ளது.
அதிலும் ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் இப்போதுதான் முதல் முறையாக வெஸ்ட் இண்டீசை அதன் சொந்த மண்ணில் வைட்வாஷ் வெற்றியை பதிவு செய்து இந்தியா புதிய சாதனையுடன் கோப்பையை வென்றுள்ளது. மேலும் இதன் வாயிலாக ஒருநாள் கிரிக்கெட்டில் வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் வைட்வாஷ் வெற்றியை பதிவு செய்த முதல் இந்திய கேப்டன் என்ற புதிய சாதனையை ஷிகர் தவான் படைத்துள்ளார். அந்த பட்டியல்:
1. சௌரவ் கங்குலி (2002) : 2 – 1 (5), 2 போட்டிகள் மழையால் ரத்து செய்யப்பட்டன
2. எம்எஸ்ட் தோனி (2009) : 2 – 1 (4), 1 போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டது
3. சுரேஷ் ரெய்னா (2011) : 3 – 2 (5)
4. விராட் கோலி (2017) : 3 – 1 (5), 1 போட்டி மழையால் கைவிடப்பட்டது
5. விராட் கோலி (2019) : 2 – 0 (3), 1 போட்டி மழையால் கைவிடப்பட்டது
6. ஷிகர் தவான் (2022): 3 – 0 (3)*
இதையும் படிங்க: 98 ரன்களில் இருந்தபோது மழை வந்துச்சி. அப்போ நான் என்ன நெனச்சேன் தெரியுமா? – சுப்மன் கில் பேட்டி
மேலும் கடந்த 2006க்குப்பின் தொடர்ச்சியாக 12 தொடர்களில் வெஸ்ட் இண்டீசை தோற்கடித்த இந்தியா ஒருநாள் கிரிக்கெட்டில் குறிப்பிட்ட அணிக்கு எதிராக அதிக தொடர்களில் வென்ற அணி என்ற புதிய உலக சாதனையும் படைத்துள்ளது. 2-வது இடம் : பாகிஸ்தான் – ஜிம்பாப்வேக்கு எதிராக (11)