ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் 2008 முதல் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரின் மிகச்சிறந்த செயல்பாடுகளை வெளிப்படுத்திய வீரர்களை கொண்ட ஆல் டைம் கனவு அணியை ஜாம்பவான்கள் ஆடம் கில்கிறிஸ்ட், ஷான் பொல்லாக் வெளியிட்டுள்ளார்கள்.
க்ரிக்பஸ் இணையத்தில் அந்த 2 ஜாம்பவான்களும் தங்களுடைய கனவு ஐபிஎல் அணியை வெளியிட்டுள்ளார்கள். அந்த அணியில் 5 கோப்பைகளை வென்ற முதல் கேப்டனாக சாதனை படைத்த ரோகித் சர்மாவை அவர்கள் தேர்ந்தெடுக்கவில்லை. அந்த அணிக்கு கிறிஸ் கெய்ல் மற்றும் விராட் கோலி ஆகியோரை அவர்கள் ஓப்பனிங் ஜோடியாக தேர்ந்தெடுத்துள்ளனர்.
ரோஹித் மிஸ்:
அதில் கிறிஸ் கெயில் ஐபிஎல் வரலாற்றின் அதிகபட்ச ஸ்கோர் அடித்து வேகமாக சதத்தை அடித்து ஏராளமான சாதனைகளைப் படைத்த பெருமைக்குரியவர். விராட் கோலி 18 வருடங்களாக ஒரே அணிக்காக விளையாடி அதிக ரன்கள் குவித்த வீரராக சரித்திர சாதனை படைத்துள்ளார். அவர்களுக்கு அடுத்தபடியாக மிஸ்டர் ஐபிஎல் என்று அழைக்கப்படும் சுரேஷ் ரெய்னாவை அவர்கள் 3வது இடத்தில் தேர்வு செய்துள்ளனர்.
2021இல் விடைபெற்ற ரெய்னா 2014இல் அடித்த 87 (25) ரன்கள் இன்னிங்ஸ் அவரை மிஸ்டர் ஐபிஎல் என்ற பெயருக்கு எப்போதும் சொந்தக்காரராக காட்டும். அடுத்ததாக 360 டிகிரியில் சுழன்றடித்து புதுப்புது ஷாட்டுகளை அறிமுகப்படுத்திய ஏபி டீ வில்லியர்ஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 5வது இடத்தில் இந்தியாவின் மிஸ்டர் 360 டிகிரி பேட்ஸ்மேனாக அறியப்படும் சூரியகுமார் யாதவ் தேர்வாகியுள்ளார்.
தோனி கேப்டன்:
இந்த அணிக்கு அவர்கள் விக்கெட் கீப்பராகவும் கேப்டனாகவும் 5 கோப்பைகளையும் வென்று நிறைய சாதனைகளை படைத்துள்ள எம்எஸ் தோனியை தேர்ந்தெடுத்துள்ளனர். சுழல் பந்து வீச்சு ஆல் ரவுண்டர்களாக ரவீந்திர ஜடேஜா மற்றும் சுனில் நரேன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள். முதன்மை ஸ்பின்னராக ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்டுகள் எடுத்த சாதனை படைத்துள்ள சஹால் இடம் பிடித்துள்ளார்.
இதையும் படிங்க: வெறும் 93.48 ஸ்ட்ரைக் ரேட்டில் உருட்டியே ஆட்டநாயகனான கில்.. கோலிக்கு பின் தோனியின் அரிய சாதனை சமன்
வேகப்பந்து வீச்சாளர்களாக யார்க்கர் கிங் என்றழைக்கப்படும் லசித் மலிங்கா தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவருடன் உலகின் நம்பர் ஒன் வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்ப்ரித் பும்ராவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஷான் பொல்லாக் – ஆடம் கில்கிறிஸ்ட் ஆல் டைம் ஐபிஎல் கனவு அணி: கிறிஸ் கெய்ல், விராட் கோலி, சுரேஷ் ரெய்னா, ஏபி டீ வில்லியர்ஸ், சூரியகுமார் யாதவ், எம்எஸ் தோனி (கேப்டன்/கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, சுனில் நரைன், ஜஸ்ப்ரித் பும்ரா, லசித் மலிங்கா, யுஸ்வேந்திர சஹால்



