கடந்த 2015-ஆம் ஆண்டு ஐ பி எல் கிரிக்கெட் தொடரில் அறிமுகமான மும்பையை சேர்ந்த ஷர்துல் தாகூர் இதுவரை 95 போட்டிகளில் விளையாடி உள்ளார். அது தவிர்த்து 2017 ஆம் ஆண்டு இந்திய அணிக்காக சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அறிமுகமான அவர் 47 ஒருநாள் போட்டிகள், 11 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 25 டி20 போட்டிகள் என்று 3 வகையான இந்திய அணியிலும் விளையாடிய அனுபவம் உடைய வீரராவார்.
ஷர்துல் தாகூர் எடுத்துள்ள புதிய முடிவு :
பந்துவீச்சு ஆல்ரவுண்டராக பார்க்கப்படும் ஷர்துல் தாகூர் ஓரளவு சிறப்பாக செயல்பட்டாலும் அவரை விட வேகமாக பந்து வீசக்கூடிய வீரர்கள் வந்துவிட்டதால் மெல்ல மெல்ல ஓரங்கட்டப்பட்ட அவர் இந்திய அணியில் இருந்து முற்றிலும் புறக்கணிக்கப்பட்டார்.
ஆனாலும் ஐபிஎல் தொடரில் விளையாடி வந்த அவர் கடைசியாக சிஎஸ்கே அணியில் இடம் பிடித்திருந்தார். இவ்வேளையில் இந்த 2025-ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் மெகா ஏலத்திற்கு முன்னர் அவர் சென்னை அணியில் இருந்து கழட்டி விடப்பட்டார். அதுமட்டுமின்றி மெகா ஏலத்தின் போதும் அடிப்படை விலைக்கு கூட ஷர்துல் தாகூரை எடுக்க எந்த அணியும் முன்வரவில்லை.
இதன் காரணமாக ஷர்துல் தாகூர் இந்த ஐபிஎல் ஏலத்தில் விற்கப்படாமல் போனார். அதன் காரணமாக எதிர்வரும் ஐபிஎல் தொடரை தவறவிட இருக்கும் அவர் மீண்டும் இந்திய அணிக்கு கம்பேக் கொடுக்க ஒரு முக்கிய முடிவு ஒன்றினை எடுத்துள்ளார்.
அந்த வகையில் இந்திய அணி அடுத்ததாக இங்கிலாந்து அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கும் வேளையில் அந்த தொடருக்காக தயாராகும் வகையில் இங்கிலாந்து சென்று கவுண்டி கிரிக்கெட்டில் விளையாட இருக்கிறார் என்று தகவல் வெளியாகி உள்ளது.
இதையும் படிங்க : சாம்பியன்ஸ் டிராபி தொடரில் 2 மாபெரும் சாதனைகளை நிகழ்த்த காத்திருக்கும் விராட் கோலி – விவரம் இதோ
ஏனெனில் இந்திய டெஸ்ட் அணியில் இடம்பிடிக்க முயற்சித்து வரும் அவர் ரஞ்சி தொடரில் பந்துவீச்சு மற்றும் பேட்டிங் என இரண்டிலும் அசத்திய வேளையில் இங்கிலாந்து சென்று அங்கும் தனது திறமையை நிரூபித்தால் நிச்சயம் தேர்வாளர்களின் கவனத்தை ஈர்க்க முடியும் என்பதன் காரணமாக இந்த முடிவை எடுத்துள்ளார் என்று தெரிகிறது.



