
ஐபிஎல் 2026 கிரிக்கெட் தொடருக்கு முன் நிறைய வீரர்கள் டிரேடிங் முறையில் வெவ்வேறு அணிகளுக்காக வாங்கப்பட்டனர். அந்த வகையில் லக்னோ அணிக்காக 2 கோடிக்கு விளையாடி வந்த ஷார்துல் தாக்கூர் மும்பைக்காக ட்ரேடிங் முறையில் வாங்கப்பட்டார். மும்பையைச் சேர்ந்த அவர் உள்ளூரில் சிறப்பாக விளையாடியதன் காரணமாக 2018 ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணிக்காக வாங்கப்பட்டார்.
அந்த காலகட்டங்களில் ஓரளவு நல்ல ஆட்டத்தையும் வெளிப்படுத்திய அவர் 2018, 2021 ஐபிஎல் கோப்பைகளை சிஎஸ்கே வெல்வதற்கு முக்கிய பங்காற்றினார். அதனாலேயே சர்வதேச அரங்கில் அவருக்கு 3 வகையான கிரிக்கெட்டில் இந்தியாவுக்காக விளையாடும் வாய்ப்பு கிடைத்தது. அந்த வாய்ப்பில் 2021 காபா, லண்டன் ஓவல் போன்ற வெளிநாட்டு டெஸ்ட் போட்டிகளில் இந்தியாவில் வெற்றியில் தாகூர் முக்கிய பங்காற்றினார்.
இருப்பினும் நாளடைவில் பந்து வீச்சில் ரன்களை வாரி வழங்கிய அவரை இந்தியா மற்றும் சிஎஸ்கே அணிகள் கழற்றி விட்டன. அதற்காக மனம் தளராத தாக்கூர் மீண்டும் இந்திய அணிக்காக விளையாட முயற்சித்து வருகிறார். அப்படிப்பட்ட அவருக்கு தற்போது தம்முடைய சொந்த ஊரான மும்பை அணிக்காகவே ஐபிஎல் தொடரில் விளையாடும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
இந்நிலையில் சிஎஸ்கே அணிக்காக விளையாடுவதற்கு முன்பே மும்பைக்காக நெட் பவுலராக விளையாடிய போது ரோஹித் சர்மா தமக்கு சுதந்திரமாக விளையாடுவதற்கான வாய்ப்பைக் கொடுத்ததாக தாக்கூர் தெரிவித்துள்ளார். அந்த வகையில் தம்முடைய கேரியரில் வளர்வதற்கு மும்பை மற்றும் ரோஹித் உதவியதாக தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “என்னைக் கச்சிதமாக உணர வைத்த ரோஹித் சர்மா அவருடன் சுதந்திரமாகவும் இருக்க அனுமதித்தார்”
“அவர் என்னை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்பையும் கொடுத்தார். நாங்கள் ஒருவரை ஒருவர் சார்ந்து விளையாடுவதில் ரோஹித் முக்கிய பங்காற்றினார். என்னுடைய ஆரம்பக் காலங்களில் போதுமான அனுபவத்தைப் பெறுமளவுக்கு அவருடன் விளையாடும் வாய்ப்பு கிடைத்ததற்கு நான் அதிர்ஷ்டம் செய்திருக்க வேண்டும். அதனால் தற்போது மும்பை அணியில் உள்ள வீரர்களுடன் இப்போதே என்னால் கச்சிதமாக உணர முடிகிறது”
இதையும் படிங்க: நல்லா பாருங்க அகர்கர்.. இதை செய்ற ஷமியால் இந்தியாவுக்காக விளையாட முடியாதா? கங்குலி பேட்டி
“இதற்கு முந்தைய காலங்களில் மும்பை இந்தியன்ஸ் அணியில் நான் நெட் பவுலராக இருந்துள்ளேன். மும்பை அணியிடமிருந்து அந்த சிறிய உதவி என்னுடைய கேரியரில் மிகப்பெரிய அளவில் வளர உதவியது” என்று கூறினார். அத்துடன் ராகுல் சங்வி, பராஸ் மாம்ப்ரே ஆகிய மும்பை அணியின் பயிற்சியாளர்களும் தமது வளர்ச்சிக்கு உதவியதாக தாக்கூர் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.