
கடந்த ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடியிருந்த நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான ஷர்துல் தாகூர் சற்று சுமாரான ஆட்டத்தையே வெளிப்படுத்தி இருந்ததால் 2025 ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் மெகா ஏலத்திற்கு முன்னதாக சென்னை அணியில் இருந்து கழட்டி விடப்பட்டார். இதன் காரணமாக ஷர்துல் தாகூர் மெகா ஏலத்தின் போது தனது பெயரையும் ஏலத்தில் பதிவு செய்திருந்தார். அதனால் எந்த அணிக்காக அவர் தேர்வு செய்யப்படுவார் என்கிற எதிர்பார்ப்பு அனைவரது மத்தியிலும் இருந்தது.
ஆனால் சவுதி அரேபியாவில் நடைபெற்ற முடிந்த மெகா ஏலத்தில் அவரை எந்த அணியும் விலைக்கு வாங்கவில்லை. இதன் காரணமாக அதிருப்தி அடைந்த அவர் இங்கிலாந்து சென்று கவுன்டி கிரிக்கெட்டில் விளையாடவும் முடிவு செய்திருந்தார்.
இந்நிலையில் லக்னோ அணியில் இடம் பெற்றிருந்த வேகப்பந்து வீச்சாளர் மோசின் கான் காயம் காரணமாக இந்த 2025 தொடரில் விளையாட முடியாத சூழலில் அவருக்கு பதிலாக மாற்றுவீரராக லக்னோ அணி ஷர்துல் தாகூரை தேர்வு செய்திருந்தது. அந்த வகையில் இந்த 2025-ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் தொடரில் இடம் பெற்றிருந்த அவர் முதல் போட்டியின் போது 2 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.
அதனை தொடர்ந்து நேற்று சன் ரைசர்ஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் 4 ஓவர்களை வீசிய அவர் 34 ரன்களை விட்டுக் கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அந்த அணியின் வெற்றிக்கு மிக முக்கியமான காரணமாக திகழ்ந்தார். அதன் காரணமாக அவருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. அதோடு இந்த தொடரின் முதல் 2 போட்டிகளில் 6 விக்கெட்டுகளை கைப்பற்றிய அவர் இந்த தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பந்துவீச்சாளர்களின் பட்டியலில் முதலிடத்தை பெற்றிருந்தார்.
நேற்று அவர் எடுத்த 4 விக்கெட்டுகளோடு சேர்த்து ஊதா தொப்பியை கைப்பற்றியது மட்டுமின்றி மேலும் ஒரு சாதனையை ஐபிஎல் தொடரில் நிகழ்த்தியுள்ளார். அந்த வகையில் இதுவரை 97 ஐ.பி.எல் போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 100 விக்கெட்டுகளை ஐபிஎல் போட்டிகளில் கைப்பற்றி புதிய சாதனையையும் தன் வசப்படுத்தி உள்ளார்.
இதையும் படிங்க : அந்த 2 திறமை பயிற்சி செய்யாம இயற்கையாவே கிடைச்சுருக்கு.. ஹைதராபாத்தை சாய்த்தது பற்றி நிக்கோலஸ் பூரான் பேட்டி
நடைபெற்று முடிந்த மெகா ஏலத்தில் தன்னை எந்த ஒரு அணியும் தேர்வு செய்யாத நேரத்தில் தற்போது முதல் இரண்டு போட்டியிலேயே மிகச் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தி ஊதா தொப்பியை கைப்பற்றியதோடு சேர்த்து 100 விக்கெட்டுகளையும் எடுத்துள்ளது அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்க்கும் விடயமாக மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது.