
இந்திய கிரிக்கெட் அணி 2027 உலகக் கோப்பையை வெல்லும் பயணத்தைத் துவங்கியுள்ளது. அதற்காக 2025 சாம்பியன்ஸ் ட்ராபியை வென்ற ரோஹித் சர்மாவை கழற்றி விட்டுள்ள தேர்வுக்குழு சுப்மன் கில் தலைமையில் புதிய இந்திய அணியை உருவாக்கத் துவங்கியுள்ளது. அதனால் 2027 உலகக் கோப்பையில் விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகியோர் விளையாடுவார்களா? என்பது சந்தேகமாகியுள்ளது.
இருப்பினும் கடந்த ஆஸ்திரேலிய ஒருநாள் தொடரின் கடைசி போட்டியில் அசத்திய அவர்கள் உலகக் கோப்பை வாய்ப்பை பிடிப்போம் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்கள். இந்நிலையில் 2027 உலகக் கோப்பை இந்திய அணியில் 8வது இடத்தை பிடிக்க முயற்சிக்க உள்ளதாக சர்துள் தாக்கூர் தெரிவித்துள்ளார். உள்ளூர் தொடரில் ஓரளவு அசத்திய அவர் 2018, 2021 ஐபிஎல் கோப்பைகளை சிஎஸ்கே வெல்ல முக்கிய பங்காற்றினார்.
அதனால் இந்திய அணியில் 3 வகையான கிரிக்கெட்டிலும் அறிமுகமான அவர் ஓரளவு நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்தினார். குறிப்பாக 2021 காபா, ஓவல் டெஸ்ட் போட்டிகளில் இந்தியா வெற்றி பெற முக்கிய பங்காற்றிய தாக்கூர் எதிரணி பார்ட்னர்ஷிப் அமைக்கும் போதெல்லாம் உடைப்பவராக வலம் வந்தார். இருப்பினும் எடுக்கும் விக்கெட்டுகளுக்கு நிகராக ரன்களை வாரி வழங்கியதால் அவரை இந்திய அணி கழற்றி விட்டது.
அத்துடன் தற்போதைய இந்திய அணி ஹர்ஷித் ராணாவுக்கு வாய்ப்புகளை வழங்கி வருகிறது. குறிப்பாக உலகக் கோப்பையில் 8வது இடத்தில் விளையாட வைப்பதற்காக பேட்டிங்கில் கணிசமாக ரன்கள் அடித்து விக்கெட்டுகளை எடுக்கக்கூடிய ராணாவை வளர்த்து வருவதாக கேப்டன் சுப்மன் கில் கூறியுள்ளார். இப்படிப்பட்ட சூழ்நிலையில் 8வது இடத்துக்கு குறி வைத்துள்ளது பற்றி தாகூர் பேசியது பின்வருமாறு.
“இந்திய அணிக்கு மீண்டும் திரும்ப நான் தொடர்ச்சியாக அசத்துவது முக்கியம். நல்ல செயல்பாடுகள் என்னை அணியில் மீண்டும் தேர்ந்தெடுக்க உதவும். இம்முறை உலகக் கோப்பை தென்னாப்பிரிக்காவில் நடைபெறுகிறது. எனவே அங்கே 8வது இடத்தில் பவுலிங் ஆல் ரவுண்டர் விளையாடுவதற்கான வாய்ப்பு திறக்கலாம். அந்த இடத்தின் மேல் நான் கண் வைத்துள்ளேன்”
இதையும் படிங்க: 38 வயதில் சச்சின் சாதனையை உடைத்த ரோஹித் உலகளவில் சாதனை.. கம்பீர், அகர்கருக்கு மாஸ் பதிலடி
“நான் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடத் தயாராக இருக்கிறேன். ஒருவேளை சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடுமாறு நாளை எனக்கு அழைப்பு வந்தால் அதற்காக நான் தயாராக இருக்க வேண்டும். அதன் அடிப்படையிலேயே நான் தயாராகி வருகிறேன்” என்று கூறினார். இதற்கிடையே நித்திஷ் ரெட்டியும் இந்திய அணியில் இருப்பதால் தாக்கூருக்கு வாய்ப்பு கிடைப்பது கடினம் என்றே சொல்லலாம்.