இந்தியாவுக்கு எதிராக இங்கிலாந்தில் இருக்கும் லண்டன் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வரும் ஐசிசி 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் மாபெரும் இறுதி போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 469 ரன்கள் குவித்து வலுவான துவக்கத்தை பெற்றது. அந்த அணிக்கு அதிகபட்சமாக டிராவிஸ் ஹெட் 163 ரன்களும் ஸ்டீவ் ஸ்மித் 121 ரன்களும் எடுக்க இந்தியா சார்பில் அதிகபட்சமாக முகமது சிராஜ் 4 விக்கெட்களை எடுத்தார். அதைத் தொடர்ந்து களமிறங்கிய இந்தியாவுக்கு ரோகித் சர்மா 15, கில், புஜாரா 14, விராட் கோலி 14 என முக்கிய பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர்.
அதனால் 71/4 என ஆரம்பத்திலேயே திணறிய இந்தியாவை ரகானேவுடன் இணைந்து 5வது விக்கெட்டுக்கு 71 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து ஓரளவு காப்பாற்றிய ரவீந்திர ஜடேஜா 48 ரன்களில் அவுட்டானார். அதன் காரணமாக 151/5 என தடுமாறிய இந்தியா ஃபாலோ ஆனை தவிர்க்க மேற்கொண்டு 119 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் இன்று துவங்கிய 3வது நாளின் 2வது பந்திலேயே பரத் 5 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தாலும் அடுத்து வந்த ஷார்துல் தாக்கூர் நிதானமான பேட்டிங்கை வெளிப்படுத்தினார்.
லார்ட் தாக்கூர்:
அவருடன் மறுபுறம் தொடர்ந்து அசத்திய ரகானே நோபால் மற்றும் சில கேட்ச் விட்ட அதிர்ஷ்டத்தை பயன்படுத்தி நங்கூரமாக செயல்பட்டு டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் அரை சதமடித்த முதல் இந்திய வீரராக சாதனை படைத்தார். குறிப்பாக கேரியர் முடிந்ததாக கருதப்பட்ட அவர் 12 மாதங்கள் கழித்து அசத்தலாக செயல்பட்டு கம்பேக் கொடுத்ததால் சதமடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 11 பவுண்டரி 1 சிக்சருடன் 89 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்துடன் சென்றார். இருப்பினும் மறுபுறம் தொடர்ந்து கையில் அடி வாங்கியும் அசராமல் நின்ற தாக்கூர் நோ-பால் அதிர்ஷ்டத்தை பயன்படுத்தி அரை சதமடித்து 6 பவுண்டரியுடன் 51 (109) ரன்கள் குவித்து அவுட்டானார்.
இறுதியில் அடுத்த வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் நடையை கட்டியதால் 296 ரன்களுக்கு இந்தியாவை சுருட்டிய ஆஸ்திரேலியா சார்பில் அதிகபட்சமாக கேப்டன் பட் கமின்ஸ் 3 விக்கெட்டுகளை எடுத்தார். இருப்பினும் இந்த போட்டியில் விராட் கோலி, புஜாரா, ரோகித் சர்மா போன்ற முக்கிய பேட்ஸ்மேன்கள் கைவிட்ட போது அசத்தலாக பேட்டிங் செய்த ரகானே 12 மாதங்கள் கழித்து இந்தியாவை காப்பாற்றும் அளவுக்கு கம்பேக் கொடுத்து அசத்தியது ரசிகர்களை பாராட்ட வைத்தது.
அதை விட லோயர் மிடில் ஆர்டரில் அவருடன் 109 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் 100 ரன்கள் பார்ட்னர்ஷிப் முதல் இந்திய ஜோடியாக சாதனை படைத்த தாக்கூர் வரலாற்று சிறப்புமிக்க லண்டன் ஓவல் மைதானத்தில் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஹாட்ரிக் அரை சதங்கள் அடித்த வீரர் என்ற ஆஸ்திரேலிய ஜாம்பவான் டான் ப்ராட்மேன், ஆலன் பார்டர் சாதனையையும் சமன் செய்தார். ஆம் கடந்த 2021இல் இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற்ற 4வது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் அதிரடியாக 57 (36) ரன்கள் எடுத்த அவர் 2வது இன்னிங்சிலும் 60 (72) ரன்கள் எடுத்தார்.
அதை தொடர்ந்து விளையாடிய இந்த போட்டியிலும் 51 ரன்கள் குவித்துள்ள அவர் 1880இல் வரலாற்றிலேயே முதல் முறையாக டெஸ்ட் போட்டி நடைபெற்ற பழமை வாய்ந்த ஓவல் மைதானத்தில் ஹட்ரிக் அரை சதங்கள் அடித்த வீரர் என்ற சாதனையை சமன் செய்துள்ளார். இதற்கு முன் கடந்த 1930 – 1934 காலகட்டத்தில் ஜாம்பவான் பிராட்மேன் மற்றும் 1985 – 1989 காலகட்டத்தில் ஆலன் பார்டர் ஆகியோர் இங்கிலாந்துக்கு எதிராக 3 இன்னிங்ஸில் அடுத்தடுத்து அரை சதமடித்திருந்தனர்.
இதையும் படிங்க: WTC Final : ஜாம்பவான்கள் டான் ப்ரேட்மேன், ஆலன் பார்டர் சாதனையை சமன் செய்த லார்ட் தாக்கூர் – 2021 மேஜிக்கை மீண்டும் நிகழ்த்துவாரா?
அத்துடன் ஓவல் மைதானத்தில் இங்கிலாந்துக்கு எதிரான கடந்த போட்டியில் பந்து வீச்சிலும் 3 விக்கெட்டுகளை எடுத்த தாக்கூர் இந்த போட்டியிலும் ஏற்கனவே 2 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். அந்த வகையில் கடந்த போட்டியில் இங்கிலாந்துக்கு எதிராக ஆல் ரவுண்டராக செயல்பட்டு 157 ரன்கள் வித்தியாசத்தில் மேஜிக் வெற்றி பெறுவதற்கு முக்கிய பங்காற்றிய அவர் இந்த ஃபைனலிலும் 2வது இன்னிங்ஸில் இன்னும் அசத்தலாக செயல்பட்டு இந்தியாவை வெற்றி பெற வைப்பாரா என்று எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் ஏற்பட்டுள்ளது. மேலும் காபா வெற்றியில் ஆல் ரவுண்டராக பங்காற்றிய அவர் மீண்டும் இப்போட்டில் அசத்தியுள்ளதால் ரசிகர்கள் லார்ட் என பாராட்டி வருகிறார்கள்.



