இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 21-வது லீக் போட்டியானது நேற்று கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் அஜின்க்யா ரஹான தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும் மோதின. இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற கொல்கத்தா அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
மோசமான சாதனையை நிகழ்த்திய ஷர்துல் தாகூர் :
அதனைத்தொடர்ந்து முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 238 ரன்கள் குவித்தது. பின்னர் 239 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய கொல்கத்தா அணி 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 234 ரன்கள் குவித்ததால் 4 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
ஒரு கட்டத்தில் 13 ஓவர்களுக்கு 160 ரன்கள் கடந்து வலுவான நிலையில் இருந்தது. அதனால் கொல்கத்தா அணி எளிதாக வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் லக்னோ அணியின் சிறப்பான பந்துவீச்சால் தோல்வியை தழுவியது. இந்த போட்டியில் லக்னோ அணி சார்பாக ஆகாஷ் தீப், ஷர்துல் தாகூர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தனர்.
இந்நிலையில் இந்த போட்டியின் போது லக்னோ அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான ஷர்துல் தாகூர் ஐபிஎல் வரலாற்றிலேயே இதுவரை எந்த ஒரு வீரரும் நிகழ்த்தாத மோசமான சாதனையை நிகழ்த்தியது அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளது. அந்த வகையில் நேற்றைய போட்டியின் 13-வது ஓவரை வீசிய ஷர்துல் தாகூர் தொடர்ச்சியாக ஐந்து ஒயிடுகளை ரஹானேவிற்கு எதிராக வீசினார்.
இதன் மூலம் ஐபிஎல் தொடரின் ஒரே ஓவரில் தொடர்ச்சியாக 5 ஒயிடுகளை வீசிய முதல் பந்துவீச்சாளர் என்ற மோசமான சாதனையை ஷர்துல் தாகூர் நிகழ்த்தியுள்ளார். அதுமட்டுமின்றி லக்னோ அணி நேற்று வீசிய 20 ஒயிடுகளில் ஷர்துல் தாகூர் மட்டும் 8 ஒயிடுகளை வீசி ஒரு இன்னிங்ஸில் அதிக ஒயிடுகளை வீசிய பவுலர் என்ற மோசமான சாதனைக்கும் சொந்தக்காரராக மாறினார்.
இதையும் படிங்க : தப்பு நடந்தது இங்கு தான்.. பஞ்சாப் அணிக்கெதிரான தோல்விக்கு பின் பேசிய – சி.எஸ்.கே கோச் ஸ்டீபன் பிளமிங்
அதுமட்டும் இன்றி ஐபிஎல் போட்டிகளில் ஒரு ஓவரை வீச அதிக பந்துகளை எடுத்துக்கொண்ட முகமது சிராஜ் மற்றும் துஷார் தேஷ்பாண்டே ஆகியோருடன் நேற்றைய போட்டியில் ஒரு ஓவரினை வீச 11 பந்துகளை எடுத்துக்கொண்ட அவர் அந்தப் பட்டியலில் மூன்றாவது வீரராகவும் இணைந்தது குறிப்பிடத்தக்கது.



