இந்திய கிரிக்கெட் அணிக்கு எதிராக ஆஸ்திரேலியா சொந்த மண்ணில் விளையாடும் 2024 – 25 பார்டர் – கவாஸ்கர் கோப்பை நவம்பர் மாதம் துவங்குகிறது. கடைசியாக ஆஸ்திரேலியாவில் விளையாடிய 2 தொடர்களையும் முதல் முறையாக வென்று இந்தியா வரலாறு காணாத சாதனை படைத்தது. அந்த வரிசையில் இம்முறையும் வென்று ஆஸ்திரேலியாவில் ஹாட்ரிக் வெற்றியை பெறுவதற்கு இந்திய அணி போராட உள்ளது.
மறுபுறம் 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் மற்றும் உலகக்கோப்பை ஃபைனலில் இந்தியாவை தோற்கடித்து ஆஸ்திரேலியா கோப்பைகளை முத்தமிட்டது. அந்த உத்வேகத்துடன் இம்முறை இந்தியாவை தோற்கடித்து கடந்த தோல்விகளுக்கு பதிலடி கொடுக்க ஆஸ்திரேலியா தயாராகியுள்ளது. இருப்பினும் அவர்களுக்கு இந்தியாவின் சீனியர்கள் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் சவாலாக இருந்து வெற்றிக்கு போராடுவார்கள் என்று நம்பப்படுகிறது.
வாட்சன் கருத்து:
இந்நிலையில் கடந்த முறை காபா மைதானத்தில் 89* ரன்கள் குவித்த ரிஷப் பண்ட் ஆஸ்திரேலியாவின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்ததாக ஷேன் வாட்சன் கூறியுள்ளார். எனவே இம்முறை காயத்திலிருந்து குணமடைந்து வந்துள்ள அவர் மிகப்பெரிய சவாலாக இருக்கலாம் என்று ஆஸ்திரேலிய அணியை வாட்சன் எச்சரித்துள்ளார். அதே போல ஜஸ்ப்ரித் பும்ரா ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களுக்கு பெரிய சவாலை கொடுப்பார் என்றும் வாட்சன் கணித்துள்ளார்.
ஆகையால் அந்த இருவரையும் கட்டுக்குள் வைக்காமல் போனால் ஆஸ்திரேலியா வெல்வது கடினம் என்று தெரிவிக்கும் அவர் பற்றி பேசியது பின்வருமாறு. “முதலில் ரிஷப் பண்ட். ஆஸ்திரேலியாவில் பேட்டிங்கை பொறுத்த வரை கடந்த சுற்றுப்பயணத்தில் அவர் மகத்தான நினைவுகளை பதிவிட்டுச் சென்றார். குறிப்பாக காபாவில் அவர் விளையாடிய இன்னிங்ஸ் மிகவும் ஸ்பெஷலானது”
ஆஸ்திரேலியாவின் சவால்கள்:
“கடந்த சில வருடங்களில் காயத்தால் சந்தித்த சவால்களில் இருந்து மீண்டும் வந்துள்ள அவர் விட்ட இடத்திலிருந்து துவங்கியுள்ளார். எனவே அவருக்கு இது மிகப்பெரிய தொடராக இருக்கும் என்று நான் நினைக்கிறேன். அதே போல ஜஸ்ப்ரித் பும்ரா ஆஸ்திரேலியா மட்டுமின்றி அனைத்து வகையான சூழ்நிலையிலும் நன்றாக அசத்தக்கூடியவர்”
இதையும் படிங்க: அதற்குள் 5000.. தனித்துவ உலக சாதனை பட்டியலில் சச்சினை நெருங்கிய ஜோ ரூட்.. 15921 ரன்ஸ் சாதனை காலியாகுமா?
“முக்கிய தருணங்களில் விக்கெட்டுகளை எடுத்து பேட்ஸ்மேன்களை அவுட்டாக்கும் அவர் ஆஸ்திரேலியாவிலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார். எனவே இந்த இரண்டு பையன்கள் அசத்துவார்கள். ஒருவேளை அவர்களுக்கு இது பெரிய தொடராக அமைந்தால் ஆஸ்திரேலியா சில மிகப்பெரிய சவால்களை சந்திக்க நேரிடும்” என்று கூறினார். முன்னதாக ரிஷப் பண்ட்டை அமைதியாக வைத்திருக்க திட்டங்களை வகுத்து வருவதாக கேப்டன் பட் கமின்ஸ், நேதன் லயன்ஸ் ஆகியோரும் சமீபத்தில் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.



