நெஞ்சங்களில் என்றும் வாழ்வீர்கள்! 50,000 ரசிகர்களுக்கு முன்னிலையில் ஷேன் வார்னேவுக்கு அளிக்கப்பட்ட கௌரம்

Shane Warne
- Advertisement -

ஆஸ்திரேலியாவை சேர்ந்த முன்னாள் ஜாம்பவான் மற்றும் நட்சத்திர கிரிக்கெட் வீரர் ஷேன் வார்னே கடந்த மார்ச் 4-ஆம் தேதியன்று திடீரென்று மாரடைப்பால் காலமானார். வெறும் 52 வயது மட்டுமே நிரம்பிய அவர் தனது நண்பர்களுடன் தாய்லாந்து நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட அவர் ஒரு விடுதியில் தங்கியிருந்த போது திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் இந்த உலகை விட்டு பிரிந்தார். கிரிக்கெட்டின் ஒரு மகத்தான வீரராகக் கருதப்படும் அவரின் இழப்பு பல முன்னாள், இந்நாள் கிரிக்கெட் வீரர்களுக்கும், ஜாம்பவான்களும், வல்லுநர்களுக்கும் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

- Advertisement -

கடந்த 1993-ஆம் ஆண்டு கிரிக்கெட்டில் அறிமுகமான அவர் அதன்பின் தனது மாயாஜால சுழல் பந்து வீச்சால் உலகில் எத்தனையோ தரமான டாப் பேட்ஸ்மேன்களை திணறடித்த பெருமைக்குரியவர். அவரின் பெரும்பாலான மேஜிக் நிறைந்த பந்துகள் தரையில் பிட்ச் ஆனபின் தாறுமாறாக சுழன்று பேட்ஸ்மேன்களை ஏமாற்றி விக்கெட்டாக மாறிவிடும் என்பதால் சச்சின் டெண்டுல்கர் உள்ளிட்ட எப்பேர்ப்பட்ட ஜாம்பவான் பேட்ஸ்மேனாக இருந்தாலும் அவரை எதிர்கொள்வதற்கு சற்று யோசிப்பார்கள் என்றே கூறலாம்.

மெல்போர்னில் வழியனுப்பும் விழா:
அந்த அளவுக்கு தரத்திலும் திறமையிலும் தனக்கென ஒரு முத்திரை பதித்த அவர் “லெக் ஸ்பின்” பந்துவீச்சு என்ற கலையின் மாபெரும் மகத்தான கலைஞனாக போற்றப்படுகிறார். 20-ஆம் நூற்றாண்டின் மிகச் சிறந்த பந்தை வீசி மாபெரும் சரித்திரம் படைத்த அவர் 20-ஆம் நூற்றாண்டின் சிறந்த 5 வீரர்களில் ஒருவராக விஸ்டன் பத்திரிகையால் தேர்வு செய்யப்பட்டவர். டெஸ்ட் கிரிக்கெட்டில் 708 உட்பட மொத்தம் 1001 விக்கெட்டுக்களை எடுத்துள்ள அவர் சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் அதிக விக்கெட்டுகள் எடுத்த 2-வது பந்துவீச்சாளராக சாதனை படைத்துள்ளார்.

அவரை பார்த்து உத்வேகமடைந்து இன்று பல இளம் வீரர்கள் லெக் ஸ்பின் பந்து வீச்சை கற்றுக்கொண்டு கிரிக்கெட்டில் காலடி வைத்துள்ளார்கள். அதேபோல் பல இளம் ரசிகர்களுக்கு ரோல் மாடலாக இருக்கும் அவரை இழந்தது கிரிக்கெட்டுக்கு ஒரு மாபெரும் இழப்பு என்றே கூறலாம். அப்படிப்பட்ட மகத்தான அவரின் உடல் கடந்த சில தினங்களுக்கு முன்பு அவரின் சொந்த ஊரான மெல்பேர்ன் நகருக்கு கொண்டு வரப்பட்டு அதன்பின் நல்லபடியாக அடக்கம் செய்யப்பட்டது. அந்த நிலையில் கிரிக்கெட்டில் சுழல் பந்துவீச்சை ஒரு புதிய பரிணாமத்திற்கு எடுத்து வந்த அவரை பாராட்டும் வகையில் மெல்போர்ன் நகரில் இன்று அவருக்கு வழியனுப்பும் விழா நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

- Advertisement -

50,000 ரசிகர்கள் முன்னிலையில்:
ஷேன் வார்னே பிறந்த மெல்போர்ன் நகரில் உள்ள உலகப் புகழ்பெற்ற உலகிலேயே மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமாக சாதனை படைத்துள்ள மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் அவருக்கு மாபெரும் வண்ணமயமான வழியனுப்பும் விழா நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் அவரை ஜொலிக்கும் வகையில் பல வண்ணமயமான மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட படங்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. மேலும் தனது சொந்த ஊரான மெல்பேர்ன் மைதானத்தில் அவர் எடுத்த 64 டெஸ்ட் விக்கெட்டுகளை நினைவுபடுத்தும் வகையில் மெல்போர்ன் மைதானத்தின் 22 யார்ட் வட்டத்தை சுற்றி 64 அலங்கரிக்கப்பட்ட சிவப்பு நிற பந்துகள் வைக்கப்பட்டிருந்தது.

Warne Sachin

விக்டோரியா மாகாண அரசு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அந்த நிகழ்ச்சியில் பல ஜாம்பவான் வீரர்களும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் நட்சத்திரங்களும் சுமார் 50,000 ரசிகர்களும் கலந்து கொண்டனர். மேலும் இந்த நிகழ்ச்சியில் வார்னேவின் குடும்பத்தினரும் கலங்கிய கண்களுடன் கலந்து கொண்டனர். அதையடுத்து துவங்கிய அந்த நிகழ்ச்சியில் ஆஸ்திரேலியாவின் தேசிய கீதத்தை அந்த நாட்டின் மற்றொரு மகத்தான ஜாம்பவான் கிரிக்கெட் வீரரான மறைந்த சர் டான் ப்ராட்மேனின் பேத்தி க்ரெட்டா ப்ராட்மேன் பாடினார். அத்துடன் அவரை கௌரவிக்கும் வண்ணமாக ஆஸ்திரேலியாவின் பிரபல மியூசிக் பாடகர் எல்டன் ஜான் ஒரு சிறப்பு பாடல் அடங்கிய வீடியோவை உருவாக்கி வெளியிட்டார்.

- Advertisement -

மாபெரும் கெளரவம்:
அந்த நிகழ்ச்சியில் மார்க் டெய்லர், மெர்வ் ஹூக்ஸ், பிரையன் லாரா, நாசர் ஹுசைன் போன்ற முன்னாள் கிரிக்கெட் வீரர்களும் ஜாம்பவான்களும் கலந்து கொண்டு ஷேன் வார்னேவை பற்றி நினைவு கூர்ந்து பாராட்டி பேசினார்கள். மேலும் அந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள முடியாத ஒரு சில நட்சத்திரங்கள் வார்னேவை பற்றிய நினைவுகளை பேசி கவுரவித்த வீடியோக்கள் மெல்போர்ன் மைதானத்தின் மிகப் பெரிய திரையில் ஒளிபரப்பப்பட்டது.

Warne Stand in MCG

அந்த வகையில் வார்னேவை பற்றி இந்தியாவின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் பேசிய வீடியோவும் மெல்போர்ன் மைதானத்தில் ஒளிபரப்பு செய்யப்பட்டது. அதை தொடர்ந்து நடந்த நிகழ்ச்சியில் அவரை கவுரவப்படுத்தும் வகையில் அவரின் சொந்த மைதானமான மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் உள்ள தெற்கு பகுதியில் புதிதாக பெயரிடப்பட்டுள்ள “ஷேன் வார்னே ஸ்டாண்ட்” என்ற பெவிலியன் அலங்கார வண்ணமயமான வெள்ளை மின் விளக்குகளுக்கு மத்தியில் கோலாகலமாக திறக்கப்பட்டது.

இதையும் படிங்க : இவர் மட்டும் ஐபிஎல் தொடரில் பங்கேற்றால் 20 கோடிக்கு போவார் – பாக் நட்சத்திர வீரரை வைத்து உருட்டும் சோயப் அக்தர்

அதை வார்னேவின் குழந்தைகளான ருக்கீ வார்னே, ஜாக்சன் வார்னே, சம்மர் வார்னே ஆகியோரை மையமாக வைத்து திறக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து நடந்த நிகழ்ச்சியில் பல முன்னாள் வீரர்களும் ஜாம்பவான்களும் ஆஸ்திரேலியாவின் நட்சத்திரங்களும் ஷேன் வார்னேவுக்கு பிரியாத விடையளித்தனர். மேலும் அவரது குடும்பத்தினரும் கலங்க்கிய கண்களுடன் உணர்ச்சி பொங்க பிரியாத மனதுடன் வழியனுப்பி வைத்தனர்.

Advertisement