காலை உடைத்து கண்ணீருடன் வெளியேற வைத்த ஆஸியை.. காபாவில் 35 வருடம் கழித்து ஓடவிட்ட 24 வயது வீரர்.. மாஸ் பதிலடி

- Advertisement -

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பிரிஸ்பேன் நகரில் உள்ள காபா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற 2வது டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அந்த வெற்றியால் 2 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டியில் வென்ற ஆஸ்திரேலியாவுக்கு பதிலடி கொடுத்த வெஸ்ட் இண்டீஸ் 1 – 1 என்ற கணக்கில் கோப்பையை பகிர்ந்து கொண்டது.

ஜனவரி 25ஆம் தேதி பகலிரவு போட்டியாக துவங்கிய அப்போடியில் முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் போராடி 311 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஜோஸ்வா டா சில்வா 79, காவெம் ஹோட்ஜ் 71 ரன்கள் எடுக்க ஆஸ்திரேலியா சார்பில் அதிகபட்சமாக மிட்சேல் ஸ்டார்க் 4 விக்கெட்டுகள் எடுத்தார். அதைத்தொடர்ந்து களமிறங்கிய ஆஸ்திரேலியா 289/9 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்வதாக அறிவித்தது.

- Advertisement -

மாஸ் பதிலடி:
அந்த அணிக்கு அதிகபட்சமாக உஸ்மான் கவாஜா 75, அலெக்ஸ் கேரி 65, கேப்டன் கமின்ஸ் 64* ரன்கள் எடுக்க வெஸ்ட் இண்டீஸ் சார்பில் அதிகபட்சமாக அல்சாரி ஜோசப் 4 விக்கெட்டுகள் சாய்த்தார். அதைத்தொடர்ந்து 22 ரன்கள் முன்னிலையுடன் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் 193 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக மெக்கன்சி 41 ரன்கள் ஆஸ்திரேலியா சார்பில் அதிகபட்சமாக ஹேசல்வுட், நேதன் லயன் தலா 3 விக்கெட்டுகள் எடுத்தனர்.

இறுதியில் 216 ரன்களை துரத்திய ஆஸ்திரேலியாவுக்கு ஒருபுறம் ஸ்டீவ் ஸ்மித் நங்கூரமாக 91* ரன்கள் எடுத்து போராடியும் எதிர்ப்புறம் வந்த வீரர்கள் சமர் ஜோசப் வேகத்தில் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். அதனால் ஆஸ்திரேலியாவை 207 ரன்களுக்கு கட்டுப்படுத்தி வென்ற வெஸ்ட் இண்டீஸ் சார்பில் அதிகபட்சமாக சமர் ஜோசப் 7 விக்கெட்டுகள் எடுத்தார். இதன் வாயிலாக ஆஸ்திரேலிய மண்ணில் 30 வருடங்கள் கழித்தும் காபா மைதானத்தில் 35 வருடங்கள் கழித்தும் வென்ற வெஸ்ட் இண்டீஸ் 2 சரித்திரம் படைத்தது.

- Advertisement -

முன்னதாக இப்போட்டியில் நேற்று 193/9 என வெஸ்ட் இண்டீஸ் தடுமாறிய போது 11வது வீரராக வந்து பேட்டிங் செய்து செய்து கொண்டிருந்த சமர் ஜோசப் பாதத்தை மிட்சேல் ஸ்டார்க் துல்லியமான யார்க்கர் பந்தால் உடைத்தார். அந்த வலியால் துடித்த சமர ஜோசப் மேற்கொண்டு விளையாட முடியாமல் கண்ணீர் விட்டுக்கொண்டே மெதுவாக நடந்து சென்று பாதியிலேயே வெளியேறினார்.

இதையும் படிங்க: அணில் கும்ப்ளே மற்றும் ஹர்பஜன் சிங்கை தாண்டிய ஜஸ்ப்ரீத் பும்ரா.. டெஸ்ட் கிரிக்கெட்டில் – தனித்துவ சாதனை

அதனால் 2வது இன்னிங்ஸில் விளையாடுவாரா? என்று எதிர்பார்க்கப்பட்ட அவர் அதற்கெல்லாம் அசராமல் முதலுதவிகளை மட்டும் எடுத்துக் கொண்டு வெறியுடன் பந்து வீசி 7 விக்கெட்டுகளை சாய்த்து வெஸ்ட் இண்டீஸ் சரித்திரம் வெற்றி பெறுவதற்கு முக்கிய பங்காற்றி ஆட்டநாயகன் விருதை வென்றார். அந்த வகையில் தன்னுடைய காலை உடைத்த ஆஸ்திரேலியர்களுக்கு அவர்களின் சொந்த மண்ணில் அதுவும் காபா மைதானத்தில் 24 வயதுடைய சம்மர் ஜோசப் தோல்வியை பரிசளித்து மாஸ் பதிலடி கொடுத்துள்ளது ரசிகர்களின் பாராட்டுகளை பெற்று வருகிறது.

Advertisement