இந்தியாவில் இந்த ஆண்டு 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரானது நடைபெற உள்ளது. எதிர்வரும் அக்டோபர் 5-ஆம் தேதி துவங்கும் இந்த உலகக்கோப்பை தொடரானது நவம்பர் 19-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்தியா முழுவதும் உள்ள பத்து நகரங்களில் 40-க்கும் மேற்பட்ட போட்டிகள் ரசிகர்களை மகிழ்விக்க காத்திருக்கிறது. இந்நிலையில் இந்த உலகக்கோப்பை தொடர் இந்தியாவில் நடைபெறவுள்ள வேளையில் பாகிஸ்தான் அணி இந்த தொடரில் பங்கேற்குமா? இல்லையா? என்பது தற்போது வரை புரியாத புதிராகவே இருந்து வருகிறது.
ஏனெனில் இதுவரை பாகிஸ்தான அணி இந்தியாவிற்கு சென்று விளையாட அந்நாட்டு அரசாங்கத்திடம் அனுமதியை பெறவில்லை. மேலும் அந்நாட்டு பிரதமர் தற்போது உயர்மட்ட குழு ஒன்றினை அமைத்து இது குறித்த விவாதங்களை நடத்தி வருகிறார்.
இந்நிலையில் இந்தியாவிற்கு சென்று பாகிஸ்தான அணி விளையாட வேண்டுமா? வேண்டாமா? என்பது குறித்த கேள்விக்கு பதில் அளித்துள்ள பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டனான ஷாஹித் அப்ரிடி கூறுகையில் : இந்தியாவிற்கு பாகிஸ்தான் சென்று விளையாட வேண்டும் அதிலும் குறிப்பாக நாம் அங்கு வெற்றி பெற வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தொடர்ந்து பேசிய அவர் கூறுகையில் : இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் சென்றாலே அது எங்களுக்கு மிகவும் அழுத்தம் நிறைந்த தருணமாக தான் இருந்துள்ளது. ஏனெனில் நாங்கள் அங்கு சென்று விளையாடிய போது பவுண்டரி அடித்தால் கூட எங்களுக்கு உற்சாகப்படுத்த அங்கு யாரும் இருந்ததில்லை.
ஒரு முறை பெங்களூரில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் நாங்கள் வெற்றி பெற்றுவிட்டு ஹோட்டலுக்கு சென்றபோது நாங்கள் சென்ற பேருந்து மீது கற்கள் வீசப்பட்டன. நிச்சயமாக அங்கு சென்று விளையாடும் போது அழுத்தம் இருக்கிறது. இருந்தாலும் அதையும் தாண்டி அங்கு விளையாடி நாம் வெற்றியை பெற வேண்டும் என அப்ரிடி கூறியுள்ளார்.
இதையும் படிங்க: வெளிநாட்டில் சொதப்பும் சுப்மன் கில்லை ட்ராப் செய்யுமாறு கோபத்துடன் வெங்கடேஷ் ப்ரசாத் பதிவிட்டாரா? உண்மை என்ன
மேலும் தொடர்ந்து பேசிய அவர் : பாகிஸ்தான் இந்தியாவிற்கு செல்லக்கூடாது என்று மக்கள் நினைக்கிறார்கள். ஆனால் அதை நான் முற்றிலும் எதிர்க்கிறேன். ஏனெனில் நாம் அங்கு சென்று அங்கு நடைபெற இருக்கும் போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.