ஆசியக் கோப்பை 2025 கிரிக்கெட் தொடரில் இந்திய அணி தங்களது முதல் சூப்பர் 4 போட்டியில் பாகிஸ்தானை 6 விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக தோற்கடிப்பது. துபாயில் நடைபெற்ற அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் 172 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்தது. அதைத் துரத்திய இந்தியா 18.5 ஓவரிலேயே இலக்கைத் தொட்டு இரண்டாவது முறையாக இத்தொடரில் பாகிஸ்தானை தோற்கடித்தது.
அதிகபட்சமாக அபிஷேக் சர்மா 74, சுப்மன் கில் 47, திலக் வர்மா 30* ரன்கள் எடுத்தனர். முன்னதாக அந்தப் போட்டியில் ஃபகார் ஜமான் கொடுத்த கேட்ச்சை சஞ்சு சாம்சன் தரையில் பட்டு பிடித்ததால் அவுட்டில்லை என்று பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் விமர்சித்தனர். ஒருவேளை அந்த தீர்ப்பு சரியாக வழங்கப்பட்டிருந்தால் பாகிஸ்தான் 190 ரன்கள் அடித்து வெற்றி பெற்றிருக்கும் என்று கேப்டன் சல்மான் ஆகா ஆதங்கம் தெரிவித்திருந்தார்.
200 அடிச்சிருந்தாலும் அடி தான்:
இந்நிலையில் இந்தியா விளையாடும் விதத்திற்கு பாகிஸ்தான் 200 ரன்களை அடித்திருந்தாலும் அதை சேசிங் செய்திருப்பார்கள் என்று முன்னாள் கேப்டன் சாஹித் அப்ரிடி தெரிவித்துள்ளார். மேலும் ஆஸ்திரேலியாவை போல விளையாடும் இந்திய அணி வெற்றிக்குத் தகுதியானவர்கள் என்றும் அவர் பாராட்டியுள்ளார். இது பற்றி பாகிஸ்தானின் சாமா தொலைக்காட்சியில் அப்ரிடி பேசியது பின்வருமாறு.
“இந்தியா வெற்றிக்குத் தகுதியானவர்கள். இன்று அவர்களுடைய ஃபீல்டிங் பற்றி சொல்ல முடியாது என்றாலும் அவர்களின் அணுகுமுறை, மனநிலை, பேட்டிங், பவுலிங் ஆகியவை சிறப்பாக இருந்தது. ஒட்டுமொத்தமாக நல்ல மனநிலையைக் கொண்டுள்ள பெரிய போட்டிகளில் அசத்தக்கூடிய வீரர்கள். இந்த மனநிலை ஆஸ்திரேலியா போன்ற பெரிய அணிகளிடம் தான் இருந்தன”
அப்ரிடி பாராட்டு:
“அந்த அணுகு முறையை தற்போது நீங்கள் பார்க்கிறீர்கள். பாகிஸ்தான் செய்த தவறுகள் அவர்களுடைய முடிவில் எதிரொலித்தது. ஆனால் இந்தியா அற்புதமான அணி. ஒருவேளை 200 அடிக்கப்பட்டிருந்தால் கூட அவர்கள் அதை திருப்பி எடுத்திருப்பார்கள் என்று நான் கருதுகிறேன். ஒரு கட்டத்தில் பாகிஸ்தான் 190 ரன்கள் அடிப்பார்கள் என்று நான் நினைத்தேன்”
இதையும் படிங்க: 3 கேட்ச் ட்ராப் 45 ரன்ஸ்.. நல்லா விளையடாத இந்தியா.. பாகிஸ்தானை வீழ்த்த இதான் காரணம்.. மஞ்ரேக்கர் பேட்டி
“ஆனால் 14 – 15 ஓவர்களுக்குப் பின் நீங்கள் 18 பந்துகளில் 14 ரன்கள் மட்டுமே அடித்தீர்கள். அதிலும் ஒரு சிக்ஸ் இருந்தது. அந்தப் பகுதியில் நம்முடைய ஆட்டம் கவலையளிக்கிறது. அங்கே சுமாரான ஃபார்மில் இருக்கும் வீரர்களை விட நீங்கள் தாலத் ஷாஹீன் அப்ரிடி, ஹரிஸ் ரவூப் போன்றவர்களை பேட்டிங் செய்ய வைத்திருக்கலாம்” என்று கூறினார்.



