
ஆசியக் கோப்பை 2025 கிரிக்கெட் தொடரில் இந்தியா தங்களது முதல் சூப்பர் 4 போட்டியில் பாகிஸ்தானை 6 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது. துபாயில் நடைபெற்ற அந்தப் போட்டியில் முதலில் விளையாடிய பாகிஸ்தான் 172 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்தது. அதைத் துரத்திய இந்தியா 18.5 ஓவரிலேயே இலக்கைத் தொட்டு இத்தொடரில் 2வது முறையாக பாகிஸ்தானை வீழ்த்தியது.
முன்னதாக அந்தப் போட்டியில் பாகிஸ்தான் துவக்க வீரர் ஃபகார் ஜாமான் 15 ரன்கள் அடித்து நல்ல துவக்கத்தைப் பெற்றார். அப்போது ஹர்திக் பாண்டியா வேகத்தில் அவர் எட்ஜ் கொடுத்த பந்தை சஞ்சு சாம்சன் நன்றாக பிடித்ததாக கருதிய கள நடுவர் அவுட் வழங்கினார். இருப்பினும் பந்து தரையில் பட்டதாக கருதிய ஜமான் அம்முடிவை மறுபரீசலனை செய்யுமாறு கேட்டுக் கொண்டார்.
அதை 3வது நடுவர் சோதித்த போது முதல் கோணத்தில் பந்து தரையில் படுவதாக தெரிந்தது. இருப்பினும் 2வது கோணத்தில் சோதித்த போது சாம்சனின் நுனி விரலில் பந்து பவுன்ஸ் ஆகி கைக்குள் சென்றது தெளிவாக தெரிந்ததாக 3வது நடுவர் நேரலையிலேயே சொன்னார். எனவே 3வது நடுவரும் மீண்டும் அதே தீர்ப்பை வழங்கியதால் ஜமான் தலையை அசைத்துக் கொண்டே ஏமாற்றத்துடன் சென்றார்.
ஆனால் அது அவுட்டல்ல என்று சோயப் அக்தர் போன்ற முன்னாள் பாகிஸ்தான் வீரர்கள் விமர்சித்தனர். சொல்லப்போனால் அந்த தீர்ப்பை நடுவர்கள் சரியாக வழங்கியிருந்தால் தாங்கள் 190 ரன்கள் அடித்து இந்தியாவை வென்றிருப்போம் என்று கேப்டன் சல்மான் ஆகா தெரிவித்திருந்தார். இந்நிலையில் ஆசியக் கோப்பையில் உள்ள நடுவர்கள் ஐபிஎல் தொடரில் நடுவர்களாக செயல்பட ஆசைப்படுவதாக முன்னாள் பாகிஸ்தான் கேப்டன் ஷாகித் அப்ரிடி தெரிவித்துள்ளார்.
அதனாலேயே அவர்கள் இந்தியாவுக்கு சாதகமாக தீர்ப்புகளை வழங்கி பாகிஸ்தானை தோற்கடிப்பதாகவும் அப்ரிடி மறைமுகமாக கூறியுள்ளார். இது பற்றி பாகிஸ்தானின் சாமா தொலைக்காட்சியில் அவர் பேசியது பின்வருமாறு. “அந்த நடுவர் ஐபிஎல் தொடரிலும் நடுவராக செயல்பட வேண்டும்” என்று கூறினார்.
இதையும் படிங்க: தெ.ஆ அணியிடம் மண்ணை கவ்விய பின்பும்.. இந்தியாவை கிண்டலடித்த பாக் மகளிரணி கேப்டன், வீராங்கனை
அதே நிகழ்ச்சியில் முகமது யூசுப் பேசியது பின்வருமாறு. “சந்தேகத்தின் பலன் பேட்ஸ்மேனுக்கு கொடுக்கப்பட வேண்டும். அதை நடுவர்கள் பல்வேறு கோணங்களில் சோதிக்கவில்லை. பும்ராவுக்கு எதிராக 3 பவுண்டரிகளை அடித்த ஜமான் முதல் ஓவரிலேயே அவரை எளிதாக கையாண்டார். அப்படிப்பட்ட அவருடைய விக்கெட் இந்தியாவின் வெற்றிக்கு முக்கியமானது” என்று கூறினார்.