நேரலை என்றும் பாராமல் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் சண்டை போட்டுக்கொண்ட பாக் வீரர்கள் – என்ன நடந்தது

Shahid Afridi Ahamed Shehzad
- Advertisement -

இந்தியாவின் அண்டை நாடான பாகிஸ்தான் எப்போதுமே கிரிக்கெட்டில் தரமான வீரர்களையும் நல்ல வெற்றிகளையும் பதிவு செய்யக்கூடிய அணியாகத் திகழ்ந்தாலும் பல தருணங்களில் அந்நாட்டைச் சேர்ந்த வீரர்கள் ஏதேனும் வேடிக்கையான நிகழ்வுகளில் ஈடுபடுவது வழக்கமாகும். அந்த வகையில் பாகிஸ்தானை சேர்ந்த முன்னாள் கேப்டன் சாகித் அப்ரிடி மற்றும் அஹமத் சேஷாத் ஆகியோர் அந்நாட்டைச் சேர்ந்த பிரபல “சாமா” எனும் தொலைக்காட்சியில் கிரிக்கெட் சம்பந்தமான நேரடி நிகழ்ச்சியில் பங்கேற்றார்கள். இதில் பாகிஸ்தானுக்காக கடந்த 2009இல் அறிமுகமான அகமது சேஷாத் ஆரம்பக் காலகட்டங்களில் சிறப்பாக செயல்பட்ட நிலையில் பார்ப்பதற்கு இந்தியாவின் விராட் கோலியை போல் தோற்றத்தில் காணப்படுகிறார்.

அதனால் விராட் கோலியை விட மிகச் சிறந்த பேட்ஸ்மேனாக வருவார் என்று அந்நாட்டு முன்னாள் வீரர்களும் ரசிகர்களும் அந்த சமயத்தில் அவரை கொண்டாடினார்கள். ஆனால் குறிப்பிட்ட சில வருடங்களுக்கு பின் தொடர்ச்சியாக சிறப்பாகச் செயல்பட தவறிய அவரை கடந்த 2019க்குப்பின் அணி நிர்வாகமும் தேர்வு குழுவும் வாய்ப்பு கொடுக்காமல் கழற்றி விட்டது. குறிப்பாக அந்த சமயத்தில் பயிற்சியாளர்களாக இருந்த வக்கார் யூனிஸ் மற்றும் மிஸ்பா-உல்-ஹக் ஆகியோர் தன்னுடைய வளர்ச்சியை கண்டு பொறாமையில் வாய்ப்பு கொடுக்கவில்லை என்று சமீபத்தில் அஹமத் சேஷாத் குற்றம் சாட்டியிருந்தார்.

- Advertisement -

நேரலை விவாதம்:
அது பற்றி தொலைக்காட்சியில் பங்கேற்றபோது அந்த இருவரும் விவாதிக்கத் தொடங்கினர். அப்போது தாம் கேப்டனாக இருந்த சமயத்தில் அவருக்கு அதிகப்படியான வாய்ப்பையும் ஆதரவையும் அளித்ததாக தெரிவித்த சாகித் அப்ரிடி பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தில் தம்மை பிடிக்காதவர்கள் நாளடைவில் அவருக்கு வாய்ப்பு கொடுக்கவில்லை என்று நேரடி நிகழ்ச்சியில் கூறினார். மேலும் அஹமத் சேஷாத் கொடுக்கப்பட்ட அனைத்து வாய்ப்புகளிலும் சிறப்பாக செயல்படவில்லை என்றும் கூறிய அவர் காலம் கடந்ததால் இனிமேல் அதைப்பற்றிப் பேசுவதை விட்டு விட்டு குடும்பத்துடன் குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக இருக்குமாறும் சாகித் அப்ரிடி ஆலோசனை வழங்கினார்.

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “அஹமத் என்னால் அதிக பாதிப்பை சந்தித்தார். ஏனெனில் அவருக்கு நான் நிறைய ஆதரவு கொடுத்தேன். அவருக்கு நிறைய வாய்ப்பையும் கொடுத்த நான் கேப்டன்ஷிப் பொறுப்பிலிருந்து விலகிய போது அது எதிர்மறையான அம்சத்தை ஏற்படுத்தியது. காரணம் அவர் எனக்கு மிகவும் பிடித்தவர் என்பதால் வாய்ப்பு கொடுக்கிறேன் என்று அனைவரும் நினைத்தனர்”

- Advertisement -

“ஆனால் பாகிஸ்தானுக்கு நல்ல தொடக்க வீரர் கிடைக்கவில்லை என்பதால் அவருக்கு நிறைய ஆதரவு கொடுத்தேன். அதில் அவர் சிறப்பாகவும் செயல்பட்டார். ஆனால் அனைத்து போட்டிகளிலும் சிறப்பாக செயல்படவில்லை. இருப்பினும் எனக்கு பின் என் மேல் இருந்த பகையால் அவர் குறி வைக்கப்பட்டார்” என்று கூறினார்.

காரசார விவாதம்:
ஆனால் அதை ஏற்க மறுத்த அஹமத் சேஷாத் 2019க்குப்பின் பிஎஸ்எல் போன்ற உள்ளூர் தொடரில் கூட தம்மை விளையாட விடாமல் அனைவரும் சதி செய்ததாக கூறியதுடன் தனது திறமையை நிரூபிக்க வாய்ப்பு கொடுத்தால் தானே ரன்கள் அடிக்க முடியும் வீட்டில் அமர்ந்துகொண்டு ரன்கள் அடிக்க முடியுமா என்று காரசாரமாக கேள்வி எழுப்பினார். இது பற்றி அவர் கோபத்துடன் பதிலளித்தது பின்வருமாறு.

- Advertisement -

“ஷாஹித் பாய் கொஞ்சம் கேளுங்கள். நீங்கள் ஏன் அப்படி கூறினீர்கள் என்று எனக்கு தெரியவில்லை. என்னுடைய சகோதரனைப் போன்ற நீங்கள் என்னைப் பற்றி எது வேண்டுமானாலும் கூறலாம். இருப்பினும் சில நேரங்களில் அது எனது மனதை உடைக்கிறது” என்று கூறினார். அப்போது குறுக்கிட்ட அப்ரிடி பேசியது பின்வருமாறு. “அந்த சமயத்தில் நீங்கள் ரன்கள் அடிக்க வேண்டும் என்று எதிர்பார்த்தேன். தற்போது அதை விட்டுவிட்டு மனைவி குழந்தைகளுடன் அழகான வாழ்க்கையை வாழுங்கள்” என்று கூறினார்.

அதனால் மேலும் கோபமடைந்த சேஷாத் பேசியது பின்வருமாறு. ” இதை நான் தொடர்ந்து கூறிக் கொண்டிருக்கிறேன். நான் ரன்கள் அடிக்க வேண்டும் என விரும்பும் நீங்கள் அதற்காக குறைந்தது என்னுடைய வாய்ப்புகளை தடுக்காமல் இருங்கள். நான் உங்களைக் கேட்கிறேன், பிஎஸ்எல் தொடரில் சில அணிகள் என்னை வாங்க விரும்பிய போது அதை தடுத்தது யார்? நீங்கள் அனைவரும் ரன்கள் அடிக்க வேண்டும் என்று என்னிடம் கூறுகிறீர்கள். ஆனால் வாய்ப்பு கிடைக்காமல் நான் எங்கே சென்று ரன்கள் அடிப்பேன் என்று நீங்கள் சொல்லுங்கள்? வீட்டில் அமர்ந்து கொண்டா?” என்று பதிலளித்தார்.

இதனால் அந்த இருவரிடையே மேலும் காரசாரமான விவாதமும் சண்டையும் ஏற்பட இருந்த நிலையில் அதைத் தொகுத்து வழங்கிய தொகுப்பாளர்கள் உள்ளே புகுந்து பேச்சை மாற்றி சமாதானப்படுத்தினார்கள். இருப்பினும் நேரடி தொலைக்காட்சி நிகழ்ச்சி என்றும் பாராமல் விவாதித்தின் பெயரில் இவர்கள் மோதிக் கொண்டது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Advertisement