ஆசிய கிரிக்கெட்டின் சாம்பியனை தீர்மானிக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க ஆசிய கோப்பை 15ஆவது முறையாக வரும் ஆகஸ்ட் 27 முதல் ஐக்கிய அரபு நாடுகளில் நடைபெறுகிறது. வரும் அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 உலகக் கோப்பைக்கு தயாராகும் வகையில் இம்முறை 20 ஓவர் தொடராக நடைபெறும் இத்தொடரில் ஆசியாவின் டாப் 6 அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன. இந்த பங்கேற்கும் 6 அணிகளும் குரூப் ஏ மற்றும் பி என இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு மற்றொரு அணியுடன் தலா ஒரு போட்டியில் லீக் சுற்றில் மோத வேண்டும். அதில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர் 4 சுற்றில் மோதி அதில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் செப்டம்பர் 11இல் நடைபெறும் மாபெரும் இறுதிப் போட்டியில் கோப்பைக்காக பலப்பரீட்சை நடத்த உள்ளது.
வரலாற்றில் நடைபெற்ற 14 தொடர்களில் 7 ஆசிய கோப்பைகளை வென்று வெற்றிகரமான அணியாக திகழும் இந்தியா கடைசியாக கடந்த 2018இல் இதே துபாயில் நடைபெற்ற 50 ஓவர் ஆசிய கோப்பையை ரோகித் சர்மா தலைமையில் வென்றது. அதனால் நடப்பு சாம்பியனாக களமிறங்கும் இந்தியா இம்முறையும் பாகிஸ்தான், இலங்கை போன்ற இதர அணிகளை தோற்கடித்து 8வது கோப்பையை வெல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் கடந்த டி20 உலகக் கோப்பைக்கு பின் பங்கேற்ற நியூசிலாந்து, இலங்கை, வெஸ்ட் இண்டீஸ், அயர்லாந்து, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் என அத்தனை தொடர்களிலும் இந்தியா தோல்வியே அடையாமல் வெற்றிநடை போட்டு வருகிறது.
வலுவான இந்தியா:
அதனால் கடைசியாக இதே துபாய் மைதானத்தில் மோதியபோது விராட் கோலி தலைமையிலான இந்திய அணியை முதல் முறையாக உலகக் கோப்பையில் தோற்கடித்து அவமான தோல்வியை பரிசளித்த பாகிஸ்தானுக்கு இம்முறை ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா பதிலடி கொடுக்குமா என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. அந்தப் போட்டியில் பாகிஸ்தானின் நட்சத்திர இடது கை இளம் வேகப்பந்து வீச்சாளர் ஷாஹீன் அப்ரிடி தனது அபார திறமையால் கேஎல் ராகுல், ரோஹித் சர்மா ஆகியோரை அடுத்தடுத்து ஒற்றை இலக்க ரன்களில் அவுட் செய்து அரைசதம் அடித்து வெற்றிக்கு போராடிய விராட் கோலியையும் சாய்த்து இந்தியா தோல்வியடைய முக்கிய பங்காற்றி ஆட்டநாயகன் விருதை வென்றார்.
அந்த நிலைமையில் சமீபத்தில் இலங்கை மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் தொடரின்போது காயமடைந்த அவர் இந்த ஆசிய கோப்பையில் விளையாடுவதற்காக அறிவிக்கப்பட்டிருந்த பாகிஸ்தான் அணியில் காயத்தை பொருத்து சேர்க்கப்பட்டிருந்தார். மேலும் தற்போது நெதர்லாந்தில் பங்கேற்று வரும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பாகிஸ்தான் அணியுடன் இருந்து வரும் அவர் களமிறங்கி விளையாடவில்லை. அதனால் இந்த ஆசிய கோப்பையில் அவர் பங்கேற்பாரா என்ற சந்தேகம் தொடர்ந்து இருந்து வந்தது.
காயத்தால் விலகல்:
இந்நிலையில் ஆசிய கோப்பைக்கு இன்னும் ஒரு வாரமே இருப்பதால் காயம் முழுமையாக குணமடையாத காரணத்தால் இந்த தொடரிலிருந்து சாஹீன் அப்ரிடி விலகுவதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் சற்றுமுன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதுமட்டுமல்லாமல் விரைவில் நடைபெறும் இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரிலிருந்தும் அவர் விலகுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் வரும் அக்டோபரில் நடைபெறும் முத்தரப்பு தொடருக்கும் அதைத் தொடர்ந்து ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 உலகக் கோப்பைக்கு முன்பாக குணமடைந்து அவர் அணிக்கு திரும்புவார் என்றும் அந்நாட்டு வாரியம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.
எப்படி இருந்தாலும் ஆசிய கோப்பையில் அவர் விலகியுள்ளது பாகிஸ்தானுக்கு பெரிய பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் கடந்த சில வருடங்களில் அபாரமாக செயல்பட்டு வரும் அவர் 2021 ஐசிசி சிறந்த கிரிக்கெட் வீரர் விருதை வென்ற பாகிஸ்தானின் முதன்மை வேகப்பந்து வீச்சாளராக கருதப்படுகிறார். முன்னதாக அவரைப் போலவே இந்திய அணியிலும் முதன்மை வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா காயத்தால் இந்த ஆசிய கோப்பையில் பங்கேற்கவில்லை. அதனால் இவ்விரு அணிகளின் பந்துவீச்சு துறையில் சமநிலை ஏற்பட்டுள்ளது.
தப்பிச்சுட்டீங்க:
ஆனால் கடந்த வருடம் நடந்த டி20 உலகக்கோப்பையில் தோல்விக்கு முக்கிய காரணமாக இருந்த சாஹீன் அப்ரிடி கடைசி நேரத்தில் காயத்தால் விலகியுள்ளது பாகிஸ்தானுக்கு பின்னடைவு என்பதைவிட இந்தியாவுக்கு சாதகம் என்று பாகிஸ்தான் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பேசுகின்றனர்.
இதையும் படிங்க: ENG vs RSA : காத்திருக்கும் ஆபத்தை உணராமல் தெ.ஆ வெற்றியை கொண்டாடும் இந்திய ரசிகர்கள் – காரணம் இதோ
அவர் இல்லாத காரணத்தால் இந்த ஆசிய கோப்பையில் இந்தியா தோல்வியிலிருந்து தப்பிக்க அதிக வாய்ப்புகள் உள்ளதாகவும் அவர்கள் கூறுகின்றனர். இருப்பினும் பாகிஸ்தான் விட வலுவான இங்கிலாந்தை அதன் சொந்த மண்ணில் சமீபத்தில் சாய்த்த இந்தியா யார் இருந்தாலும் இல்லாவிட்டாலும் பாகிஸ்தானை தோற்கடித்து அணியாகவே திகழ்கின்றது.



