ஆசியக் கோப்பை 2025 கிரிக்கெட் தொடரில் இந்திய அணி பாகிஸ்தானுடன் விளையாடக்கூடாது என்ற குரல் எழுந்தது. ஏனெனில் சமீபத்தில் பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் நிகழ்த்திய தாக்குதலில் 26 இந்தியர்கள் இயற்கை எய்தினர். இருப்பினும் ஆசிய மற்றும் ஐசிசி கோப்பைகளில் பாகிஸ்தானுடன் விளையாடுவதில் தடையில்லை என்று இந்திய விளையாட்டுத்துறை அறிவித்தது. அதே சமயம் இருதரப்பு தொடர்களில் விளையாட மாட்டோம் என்றும் இந்திய அரசு தெரிவித்தது.
அதனால் எதிர்ப்புக்கு மத்தியில் களமிறங்கிய இந்தியா லீக் சுற்றில் பாகிஸ்தானை எளிதாக தோற்கடித்தது. ஆனால் அப்போட்டியின் முடிவில் பாகிஸ்தான் அணிக்கு இந்திய அணியினர் கைகுலுக்காமல் வெளியேறியது சர்ச்சையை உண்டாக்கியது. அடுத்ததாக நடைபெற்ற சூப்பர் 4 சுற்றில் அரை சதத்தை அடித்த பாகிஸ்தான் வீரர் ஃபர்கான் தம்முடைய பேட்டால் இந்தியாவை சுடுவது போல் கொண்டாடி கிண்டலடித்தார்.
கிண்டல்கள் தப்பு தான்:
மேலும் ஆப்ரேஷன் சிந்தூரில் 6 இந்திய விமானங்களை பாகிஸ்தான் ராணுவம் சுட்டு வீழ்த்தியது என்ற போலியான செய்தியை சைகைகளாக செய்து காட்டிய ஹரிஷ் ரவூப் இந்தியாவையும் மைதானத்திலிருந்த இந்திய ரசிகர்களையும் கலாய்த்தார். அத்துடன் ஹரிஷ் ரவூப், ஷாஹித் அப்ரிடி ஆகியோர் அபிஷேக் சர்மா – சுப்மன் கில் ஆகியோரிடம் வாய்மொழியாக வம்பிழுத்தார்கள். அதற்கு அபிஷேக் – கில் அவர்களுக்கு வாயாலும் பேட்டாலும் தக்க பதிலடி கொடுத்தனர்.
அதெல்லாம் ஒரு புறமிருக்க ஒருதலைபட்சமாக தோற்கும் பாகிஸ்தான் இனிமேலும் இந்தியாவுக்கு போட்டியாளர் கிடையாது என்று இந்திய கேப்டன் சூரியகுமார் தெரிவித்தார். இந்நிலையில் ஹரிஷ் ரவூப், ஃபர்ஹான் போன்ற பாகிஸ்தான் வீரர்கள் இந்தியாவை சைகைகளால் கிண்டலடித்தது சரியல்ல என்று ஷாஹீன் அப்ரிடி ஒப்புக் கொண்டுள்ளார். அதே சமயம் ஃபைனலில் இந்தியாவை தோற்கடித்து பாகிஸ்தான் எப்படிப்பட்ட போட்டியாளர் என்பதை சூரியகுமாருக்கு காண்பிப்போம் என்றும் அப்ரிடி தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் வெல்லும்:
இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “கிரிக்கெட்டில் விளையாடுவதே எங்களுடைய வேலை. நேர்மையாக சொல்ல வேண்டுமெனில் அது போன்ற (சைகை கிண்டல்கள்) விஷயங்களில் நாங்கள் சரியல்ல. இங்கே ஒவ்வொரும் தங்களுடைய சொந்த மதிப்பைக் கொண்டுள்ளார்கள். ஒவ்வொருவரும் தங்களுடைய வழியில் சிந்திக்கின்றனர். ஆனால் எங்களுடைய வேலை கிரிக்கெட்டில் விளையாடுவதாகும்”
இதையும் படிங்க: இன்னும் அது முடிவாகல.. இந்தியாவை ஃபைனலில் பாகிஸ்தான் தோற்கடிக்கும்.. ஷாஹீன் அப்ரிடி பேட்டி
“சமீபத்தில் முத்தரப்பு தொடரில் வென்ற நாங்கள் அடுத்ததாக ஆசியக் கோப்பையை வெல்ல வந்திருக்கிறோம். கடவுளின் அருளால் நாங்கள் சிறந்தவற்றைச் செய்கிறோம். அது அவருடைய (சூரியகுமார்) கருத்து என்பதால் சொல்ல விடுங்கள். ஃபைனலில் நாங்கள் அவர்களை சந்திக்கும் போது எது இருக்கிறது, இல்லை என்பதைப் பார்க்கலாம். நாங்கள் இங்கே ஆசியக் கோப்பையை வெல்ல வந்துள்ளோம். அதற்காக எங்களுடைய சிறந்த முயற்சிகளைக் கொடுப்போம்” என்று கூறினார்.



