
இங்கிலாந்துக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் நடைபெற்று வரும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் முதல் போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இந்தியா 1 – 0* என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே தொடரில் முன்னிலை பெற்றுள்ளது. இதையடுத்து ஜூலை 14-ஆம் தேதியன்று உலகப் புகழ்பெற்ற லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறும் இத்தொடரின் வெற்றியை தீர்மானிக்கும் 2-வது போட்டியிலும் வென்று தொடரை கைப்பற்ற இந்தியா போராட உள்ளது. முன்னதாக ஓவலில் நடைபெற்ற இத்தொடரின் முதல் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவின் எரிமலையான பந்துவீச்சுக்கு பதில் சொல்ல முடியாமல் 110 ரன்களுக்கு சுருண்டது.
ஓவல் மைதானத்தில் நிலவிய கால சூழ்நிலையை கச்சிதமாக பயன்படுத்திய பும்ரா ஜேசன் ராய், ஜோ ரூட், ஜானி பேர்ஸ்டோ, லியம் லிவிங்ஸ்டன் என உலகத்தரம் வாய்ந்த வீரர்களை பவர்ப்ளே ஓவர்களுக்குள் அவுட் செய்து இந்தியாவின் வரலாற்று வெற்றிக்கு கருப்பு குதிரையாக செயல்பட்டார். மேலும் ஒருநாள் கிரிக்கெட்டில் வெளிநாட்டு மண்ணில் சிறந்த பந்து வீச்சை பதிவு செய்த இந்திய வேகப்பந்து வீச்சாளர் என்ற அபார சாதனையை அவர் படைத்துள்ளார். பொதுவாகவே பெரும்பாலான பந்துவீச்சாளர்கள் பிறந்த சொந்த மண்ணில் சிறப்பாகவும் அறியாத வெளிநாட்டு மண்ணில் தடுமாறுவார்கள்.
தங்கமான பும்ரா:
அதனால் வெளிநாடுகளில் சிறப்பாக செயல்படுபவரையே உலகத்தரம் வாய்ந்த பவுலர் என்று வல்லுனர்கள் மதிப்பிடுவார்கள். அந்த வகையில் சொந்த மண்ணை விட வெளிநாட்டு மண்ணில் இருமடங்கு அபாரமாக செயல்பட்டு ஜஸ்பிரித் பும்ரா தனது வித்தியாசமான பந்துவீச்சு ஆக்சனால் எதிரணி பேட்ஸ்மேன்களை திணறடிக்கிறார். கடந்த 2016இல் அறிமுகமாகி 2018 முதல் 3 வகையான இந்திய அணியிலும் முதன்மை வேகப்பந்து வீச்சாளராக உருவெடுக்கும் அளவுக்கு ஜொலிக்கும் அவர் அனைத்து சூழ்நிலைகளிலும் அசத்தி நம்பர் 1 பந்து வீச்சாளராக தன்னை நிரூபித்துள்ளார்.
இதுவரை எடுத்துள்ள 128 டெஸ்ட் விக்கெட்களில் 100 ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்கா ஆகிய சவாலான வெளிநாட்டு மண்ணில் எடுத்துள்ளதே அவரின் தங்கத்துக்கு நிகரான சான்றாகும். டெஸ்ட், ஒருநாள், டி20 மற்றும் ஐபிஎல் என எந்த வகையான போட்டியாக இருந்தாலும் எங்கு நடந்தாலும் அதில் சொல்லி அடிக்கும் கில்லியாக கலக்கும் இவர் உலகிலேயே தற்சமயத்தில் அனைத்து வகையான போட்டியிலும் கலக்கக்கூடிய நம்பர் ஒன் பந்துவீச்சாளராக திகழ்வதாக சச்சின் டெண்டுல்கர், நாசர் ஹுசைன் போன்ற பல முன்னாள் வீரர்களின் பாராட்டுகளை பெற்றுள்ளார்.
அப்ரிடி சளைத்தவரல்ல:
அதுவும் ஓவலில் மிரட்டிய அவர் தற்போது ஒருநாள் கிரிக்கெட்டில் உலகின் புதிய நம்பர் ஒன் வேகப்பந்து வீச்சாளராக ஐசிசி தரவரிசையில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். இந்நிலையில் இளம் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் சாகின் அப்ரிடி ஜஸ்பிரித் பும்ராவுக்கு கொஞ்சமும் குறைந்தவர் அல்ல என்று முன்னாள் பாகிஸ்தான் வீரர் சல்மான் பட் தாமாக வந்து கருத்து கூறியுள்ளார். இதுபற்றி தனது யூடியூப் பக்கத்தில் அவர் பேசியது பின்வருமாறு.
“ஷாஹீன் அப்ரிடி அவ்வளவு கிரிக்கெட் விளையாடியதில்லை என்றாலும் அனைவருக்கும் மத்தியில் அவர் சிறந்தவராக உள்ளார். அவர் பும்ராவுக்கு கொஞ்சமும் குறைந்தவர் அல்ல. சொல்லப்போனால் அனுபவமுள்ள சாஹீன் இன்னும் நல்ல நிலைமைக்கு வருவார். அவரிடமுள்ள வேகம் அவருக்கு வித்தியாசமான ஆங்கிளை வழங்குகிறது. பும்ரா மற்றும் ஷாஹீன் ஆகிய இருவருமே உலகின் மிகச் சிறந்தவர்கள் என்பதால் அவர்கள் பந்து வீசுவதை பார்ப்பது சுவாரஸ்யமான அனுபவமாகும். புதிய பந்தில் அவர்கள் சிறப்பாக பந்து வீசுவது எப்போது வேண்டுமானாலும் விக்கெட் வீழ்த்தப்படலாம் என்று உணர்த்துகிறது. உலகின் வேறு எந்த பவுலரை பார்க்கும்போது இந்த உணர்வு உங்களுக்கு ஏற்படாது” என்று கூறினார்.
கடந்த 2018இல் அறிமுகமாகி இதுவரை 96 போட்டிகளில் 204 விக்கெட்டுகளை எடுத்துள்ள சாகின் அப்ரிடி 2021-ஆம் ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீரருக்கான ஐசிசி விருதை வென்றதால் அந்நாட்டு ரசிகர்களும் முன்னாள் வீரர்களும் இப்படி அவரை உலகின் நம்பர் ஒன் பந்துவீச்சாளராக போற்றி வருகிறார்கள். அந்த வகையில் 2016இல் அறிமுகமாகி இதுவரை 159 போட்டிகளில் 316 விக்கெட்டுகளை எடுத்துள்ள பும்ராவை போல் இன்னும் அதிகப்படியான போட்டியில் சாகின் அப்ரிடி விளையாடியிருந்தால் பும்ராவை மிஞ்சியிருப்பார் என்றும் சல்மான் பட் கூறியுள்ளார்.
இதையும் படிங்க : IND vs ENG : ரோஹித் சர்மாவிடம் இருக்கும் அந்த திறமை விராட் கோலியிடம் இல்லை – பாக் வீரர் வித்யாசமான கருத்து
இதுபற்றி அவர் மேலும் பேசியது பின்வருமாறு. “20 வயதுடையை ஒருவர் இந்த அளவுக்கு அபாரமாக செயல்படுவது சுலபமான விஷயமல்ல. இந்த இருவருமே சிறப்பானவர்கள். இதில் சற்று அதிகப்படியான போட்டிகளில் சிறப்பாக விளையாடியுள்ள பும்ராவுடன் அவரை ஒப்பிடவில்லை. பும்ரா நிறைய போட்டிகளில் விளையாடியுள்ளார், ஷாஹீன் அந்த அளவுக்கான போட்டிகளில் விளையாடவில்லை” என்று கூறினார்.