
பாகிஸ்தான், நியூசிலாந்து, தென்னாபிரிக்கா அணிகள் முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடுகின்றன. அந்தத் தொடரில் பிப்ரவரி 12ஆம் தேதி நடைபெற்ற கடைசி லீக் போட்டியில் தென்னாப்பிரிக்காவை 6 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் தோற்கடித்தது. அதனால் இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணியை எதிர்கொள்வதற்கு பாகிஸ்தான் தகுதிப் பெற்றது. கராச்சியில் நேற்று நடைபெற்ற அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்கா 353 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்தது.
அதிகபட்சமாக கேப்டன் பவுமா மேத்யூ 82, மேத்தியூ பிரட்ஸ்கே 83, ஹென்றிச் க்ளாஸென் 87, கெய்ல் வேரின் 44* ரன்கள் எடுத்தார்கள். பாகிஸ்தானுக்கு அதிகபட்சமாக சாகின் அப்ரிடி 2 விக்கெட்டுகள் எடுத்தார். பின்னர் விளையாடிய பாகிஸ்தானுக்கு கேப்டன் முகமது ரிஸ்வான் 122*, சல்மான் ஆகா 134 ரன்கள் அடித்து 49 ஓவரில் வெற்றி பெற வைத்தார்கள்.
தென்னாபிரிக்காவுக்கு அதிகபட்சமாக வியான் முல்தர் 2 விக்கெட்டுகள் எடுத்தும் தோல்வியைத் தவிர்க்க முடியவில்லை. முன்னதாக இந்தத் தொடரில் அறிமுகமான தென்னாப்பிரிக்க வீரர் மேத்தியூ பிரட்ஸ்கே நியூசிலாந்துக்கு எதிரான முதல் போட்டியிலேயே 150 ரன்கள் அடித்தார். அதனால் ஒருநாள் கிரிக்கெட்டில் தனது அறிமுகப் போட்டியிலேயே 150 ரன்கள் அடித்து அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்த வீரர் என்ற உலக சாதனையை அவர் படைத்தார்.
அந்த நிலையில் இந்தப் போட்டியில் 83 ரன்கள் அடித்த அவர் தனது முதல் 2 போட்டிகளில் மொத்தம் 233 ரன்களைக் குவித்துள்ளார். இதன் வாயிலாக ஒருநாள் கிரிக்கெட்டில் தனது முதல் 2 போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற உலக சாதனையை மேத்தியூ பிரட்ஸ்கே அடைத்துள்ளார். இதற்கு முன் வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் தேஷ்மண்ட் ஹைன்ஸ் 195 ரன்கள் அடித்ததே முந்தைய சாதனை.
மேலும் ஒருநாள் கிரிக்கெட்டில் தனது முதல் 2 போட்டியிலேயே சதத்தையும் அரை சதத்தையும் அடித்த வீரர் என்ற சாதனையையும் அவர் படைத்துள்ளார். அப்படிப்பட்ட அவர் சாகின் அப்ரிடி வீசிய 28வது ஓவரில் ஒரு பந்தை அடித்து விட்டு சிங்கிள் எடுக்க முடியாத விரக்தியில் பேட்டால் பவுலரை அடிப்பது போல் சுழற்றிக் காட்டினார். அதனால் கோபமடைந்த அப்ரிடி அவரிடம் சில வார்த்தைகளைப் பேசினார்.
அதற்கு மேத்தியூ பிரட்ஸ்கேவும் சில வார்த்தைகளைச் சொல்லி பதிலடிக் கொடுத்தார். அடுத்த பந்தில் சிங்கிள் எடுக்க ஓடிய போது ரன்கள் எடுக்கும் வழியில் அவருக்கு வழி விடாமல் அப்ரிடி நடந்து சென்றார். அதனால் அவர் மீது மேத்தியூ பிரட்ஸ்கே மோதியதால் இருவருக்கும் இடையே மீண்டும் சண்டை வந்தது.
இதையும் படிங்க: 1 பயிற்சி தானா? காற்றை குறை சொல்லி இந்தியாவை அவமதித்து 3 – 0 என தோற்ற இங்கிலாந்தை.. விளாசிய பீட்டர்சன்
உடனே நடுவர்கள் உள்ளே புகுந்து சண்டையை நிறுத்தினர். இது சமீபத்திய பார்டர் – கவாஸ்கர் கோப்பையில் இந்தியாவின் விராட் கோலி – ஆஸ்திரேலியாவின் சாம் கோன்ஸ்டஸ் தோளில் இடித்து மோதிக்கொண்ட நிகழ்வின் மறுஒளிபரப்பு போல் இருந்ததாக நேரலையில் வர்ணனையாளர் முன்னாள் நியூஸிலாந்து வீரர் டேனி மோரிசன் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.