வீடியோ : அவருக்கு மட்டும் காயம் ஆகலைனா, கப் அடிச்சுருப்போம் – தோல்விக்கு அக்தர் சொல்லும் நொண்டி சாக்கு என்ன

Akhtar
Advertisement

ஆஸ்திரேலியாவில் கடந்த அக்டோபர் 26 முதல் திரில்லர் திருப்பங்களுடன் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த 2022 ஐசிசி டி20 உலக கோப்பையின் சாம்பியன் பட்டத்தை ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து வென்று சரித்திரம் படைத்துள்ளது. இந்த தொடரில் லீக் மற்றும் நாக் அவுட் சுற்றில் அசத்திய பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து ஆகிய அணிகள் நவம்பர் 13ம் தேதியன்று நடைபெற்ற மாபெரும் இறுதிப் போட்டியில் கோப்பைக்காக பலப்பரீட்சை நடத்தினர். அதில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய பாகிஸ்தான் 20 ஓவர்களில் சுமாராக செயல்பட்டு 137/8 ரன்கள் மட்டுமே எடுத்தது.

England T20 World Cup

அந்த அணிக்கு அதிகபட்சமாக ஷான் மசூட் 38 (28) ரன்கள் எடுத்த நிலையில் இங்கிலாந்து சார்பில் அதிகபட்சமாக ஷாம் கரன் 3 விக்கெட்டுகளை சாய்த்தார். அதைத்தொடர்ந்து 138 ரன்களை துரத்திய இங்கிலாந்துக்கு அலெக்ஸ் ஹெல்ஸ் 1, பிலிப் சால்ட் 10, ஜோஸ் பட்லர் 26 என முக்கிய வீரர்கள் பாகிஸ்தானின் தரமான பந்து வீச்சில் சொற்ப ரன்களில் சீரான இடைவெளிகளில் விக்கெட்டுகளை இழந்தனர். ஆனால் மறுபுறம் நங்கூரமாக நின்ற நம்பிக்கை நட்சத்திரம் பென் ஸ்டோக்ஸ் 52* (49) ரன்கள் விளாசி 19 ஓவரிலேயே இங்கிலாந்தை 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற வைத்தார்.

- Advertisement -

நொண்டி சாக்கு:

அதனால் 2010க்குப்பின் 2வது கோப்பையை வென்ற இங்கிலாந்து டி20 கிரிக்கெட்டின் புதிய சாம்பியனாக சாதனை படைத்தது. மறுபுறம் 1992இல் இம்ரான் கான் தலைமையில் செய்த மேஜிக்கை மீண்டும் செய்வோம் என்று வாயில் மட்டும் பேசிய பாகிஸ்தான் பந்து வீச்சில் மிரட்டிய போதிலும் பேட்டிங்கில் 150 ரன்கள் எடுக்க தவறியதால் பரிதாபமாக தோற்றது. முன்னதாக இப்போட்டியில் கடுமையாக போராடிய இங்கிலாந்தின் வெற்றிக்கு கடைசி 5 ஓவரில் 41 ரன்கள் தேவைப்பட்ட போது பாகிஸ்தானின் நம்பிக்கை நட்சத்திரம் ஷாஹீன் அப்ரிடி 16வது ஓவரின் முதல் பந்தை வீசினார். ஆனால் அப்போது முந்தைய சில ஓவர்களுக்கு முன்பாக கேட்ச் பிடித்த போது ஏற்பட்ட காயத்தால் அதிக வலியை உணர்ந்தத அவர் போட்டியிலிருந்து வெளியேறினார்.

ஒருவேளை எஞ்சிய 1.5 ஓவர்களை அவர் வீசியிருந்தால் பாகிஸ்தான் நிச்சயம் வென்றிருக்கும் என்று தெரிவிக்கும் முன்னாள் கிரிக்கெட் வீரர் சோயப் அக்தர் இது பற்றி தோல்விக்கு பின் பேசியது பின்வருமாறு. “பாகிஸ்தான் உலக கோப்பையில் தோற்றாலும் நமது வீரர்கள் சிறப்பாக செயல்பட்டனர். தற்போது தோல்வியுடன் நின்றாலும் நீங்கள் ஃபைனலில் விளையாடியுள்ளீர்கள். மேலும் பாகிஸ்தானின் பந்து வீச்சு கூட்டணி இத்தொடர் முழுவதும் அபாரமாக செயல்பட்டதற்காக பாராட்டுகளை தெரிவிக்கிறேன். அதிர்ஷ்டம் எப்போதும் தேவைப்படக்கூடியது என்றாலும் நீங்கள் ஃபைனல் வரை சென்று சிறப்பாக விளையாடினீர்கள்”

- Advertisement -

“தோல்வி பரவாயில்லை. ஆனால் ஷாஹீன் அஃப்ரிடி வெளியேறிய தருணம் போட்டியில் திருப்பு முனையை ஏற்படுத்தியது. அதற்காக நாம் தலைகுனிய வேண்டிய அவசியமில்லை. 2016 உலக கோப்பையில் கடைசி ஓவரில் 5 சிக்சர்களை கொடுத்த பென் ஸ்டோக்ஸ் அதன் பயனாக இப்போது கோப்பையை வென்றுள்ளார். இந்த தோல்வி வலியையும் ஏமாற்றத்தையும் கொடுக்கிறது என்றாலும் பாகிஸ்தான் வீரர்களுடன் நான் நிற்கிறேன்” என்று கூறினார்.

ஆனால் 30 பந்துகளில் 41 ரன்கள் தேவை என்ற நிலைமையில் பழைய பந்தில் ஷாஹீன் அஃப்ரிடி விளையாடியிருந்தாலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்க முடியாது என்றே கூறலாம். ஒருவேளை ஸ்டோக்ஸ் அவுட்டாகியிருந்தால் கூட அந்த சமயத்தில் தேவைப்பட்ட குறைவான இலக்கை லியாம் லிவிங்ஸ்டன், சாம் கரண், கிறிஸ் ஓக்ஸ் போன்றவர்கள் எடுத்து வெற்றியைப் பெற்றுக் கொடுக்கும் அளவுக்கு இங்கிலாந்திடம் மேற்கொண்டு பேட்ஸ்மேன்கள் இருந்தனர்.

அந்த வகையில் பேட்டிங்கில் சுமாராக செயல்பட்ட காரணத்தால் சந்தித்த தோல்வியை ஒப்புக்கொள்ளாமல் ஷாஹீன் அஃப்ரிடி வெளியேறியது தான் காரணமென்று நொண்டி சாக்கு சொல்வதாக அவரை ரசிகர்கள் கலாய்க்கிறார்கள். மேலும் ஆரம்ப முதலே இந்த தொடரில் இந்தியாவை கிண்டலடித்து வந்த அவர் செமி ஃபைனலில் இங்கிலாந்திடம் தோற்றதால் தங்களுடன் இதே ஃபைனலில் மோதுவதற்கு தகுதியற்றவர்கள் என்று கிண்டலடித்தார். ஆனால் தற்போது நீங்கள் அதே இங்கிலாந்திடம் கோப்பை வெல்லும் அளவுக்கு தகுதியாக செயல்படவில்லை என்று அவருக்கு ரசிகர்கள் பதிலடி கொடுத்து வருகிறார்கள்.

Advertisement