கொல்கத்தாவை தோற்கடிக்க தோணியின் 7 யோசனைகள் ! – என்னவென்று தெரியுமா ?

Dinesh
- Advertisement -

வெற்றியோடு தொடங்கியிருக்கிறது சென்னை என்று எவ்வளவுதான் சந்தோஷப்பட்டாலும் அந்த வெற்றி எப்படிக் கிடைத்தது என்று ஒவ்வொரு சென்னை ரசிகனுக்கும் தெரியும். மும்பையிடம் அவமானப்படாமல் தோற்றால் போதும் என ரசிகர்கள் மட்டும் அல்ல தோனியே நினைத்தார். ”வெற்றி பெறமுடியாவிட்டாலும் எதிர் அணியின் ஸ்கோரையாவது நெருங்கிவர வேண்டும்” என்று நினைத்தேன் என்றார் தோனி.

- Advertisement -

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பிராவோ மட்டும் அடித்து ஆடவில்லை என்றால் சென்னையின் நிலமை கேலிக்கூத்தாகியிருக்கும். இன்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை சந்திக்கிறது சென்னை. கொல்கத்தா நைட் ரைடர்ஸ், கோலியின் பெங்களூரு அணியைத் தோற்கடித்துவிட்டு சென்னையை சந்திக்கிறது… அதுவும் சென்னை மண்ணில்!

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சூப்பர் கிங்ஸின் வெற்றிகள்தான் அதிகம் என பழம்பெருமைகளைப் பேசி கொல்கத்தாவை ஊதித்தள்ளிவிடுவார்கள் என்று சொல்ல முடியாது. சென்னை சூப்பர் கிங்ஸுடன் ஒப்பிடும்போது பலமான அணியாகவே இருக்கிறது கொல்கத்தா. சென்னை வெற்றிபெற தோனி என்ன செய்ய வேண்டும்?

1 டாஸ்!

- Advertisement -

இன்றையப் போட்டியில் டாஸ் முக்கியமானது. சென்னை ஸ்லோ பிட்ச் என்பதால் டாஸ் வெல்பவர்கள் முதலில் பேட்டிங்கைத்தான் தேர்ந்தெடுப்பார்கள். ஆனால், மும்பை அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்றதும் பெளலிங்கை தேர்ந்தெடுத்ததுபோல இன்றைய போட்டியிலும் டாஸ் வென்றால் தோனி பெளலிங்கைத்தான் தேர்ந்தெடுக்க வேண்டும். சென்னை பிட்ச் ஸ்லோ பெளலிங்கிற்குச் சாதகமான பிட்ச் என்பதால், சென்னை சூப்பர் கிங்ஸின் ஸ்பின்னர்கள் மற்றும் பிராவோவைக் கொண்டு எதிர் அணியின் ஸ்கோரை கட்டுக்குள் கொண்டுவர வேண்டும். 150- 160 ரன்களுக்குள் எதிர் அணியைச் சுருட்டினால் சென்னைக்கு வெற்றி வாய்ப்புகள் அதிகம்.

2. சுனில் நரேன்!

- Advertisement -

kkr

கொல்கத்தா அணியின் ஸ்டார் பேட்ஸ்மேன் சுனில் நரேன்தான். பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் ஓப்பனிங் இறங்கி அவர் அடித்த 50 ரன்கள்தான் கொல்கத்தா அணிக்கு மிகப்பெரிய நம்பிக்கையைக் கொடுத்தது. ஆனால், சுனில் நரேன் இதுவரை சென்னை பிட்ச்சில் பெரிதாக ஸ்கோர் செய்ததில்லை என்பதே வரலாறு. அதேபோல் கொல்கத்தாவின் இன்னொரு பேட்ஸ்மேனான கிறிஸ் லின் சென்னைக்கு எதிரான போட்டியில் இறங்கி அடிக்கவாய்ப்புண்டு. ஆனால், சென்னையின் ஸ்பின் மற்றும் மித வேகப்பந்துவீச்சை அவர் மிக எளிதாக சமாளித்துவிட முடியாது என்பதால் ஆரம்பத்திலேயே ஸ்பின் மற்றும் மிதமான வேகப்பந்து வீச்சை தோனி களம் இறக்க வேண்டும்.

3. பேட்டிங் ஆர்டர்!

- Advertisement -

சென்னையின் மிகப்பெரிய பலவீனமாகத் தெரிவதே பேட்டிங்தான். கேதர் ஜாதவ் காயம் அடைந்திருப்பதால் அவருக்குப் பதிலாக இன்றைய போட்டியில் முரளி விஜய் களமிறங்குவார். இன்னும் காயத்தில் இருந்து முழுமையாக குணமடையாததால் டு பிளெஸ்ஸி அணியில் இருக்கமாட்டார். வாட்சன், விஜய், ரெய்னா, ராயுடு, தோனி, ஜடேஜா, பிராவோ என்பதுதான் சென்னையின் பேட்டிங் ஆர்டர். பார்ப்பதற்கு செம ஸ்ட்ராங்கான பேட்டிங் லைன் அப் என்பதுபோலத் தெரிந்தாலும், யாருமே பெரிதாக ஃபார்மில் இல்லை என்பதே தோனியின் கவலை. வாட்சன், விஜய், ராயுடு, ஜடேஜா என யாருமே கடைசியாகப் பெரிய சர்வதேசப் போட்டிகளில் விளையாடியவர்கள் இல்லை. ஐ.பி.எல்தான் இவர்களுக்கு இப்போதைக்கு மிகப்பெரிய போட்டி. அதனால் பேட்ஸ்மேன்களுக்கு மிகப்பெரிய நம்பிக்கையைக் கொடுக்கவேண்டியது தோனியின் கடமை. அதேபோல் தோனியும் தன் பேட்டிங்கை மீட்டெடுக்க வேண்டும். மும்பை அணிக்கு எதிரான போட்டியின்போது பேட்ஸ்மேன் தோனியின் முகத்தில் பெரிதாக நம்பிக்கையே இல்லை. பேட்டிங் பயத்தை முழுமையாக விரட்டினால் மட்டுமே சென்னை பேட்ஸ்மேன்களால் ஸ்கோர்களை துரத்தவும், மிகப்பெரிய ஸ்கோரை செட் செய்யவும் முடியும்.

4. நித்திஷ் ரானா!

மும்பை அணிக்கு எதிரான போட்டியின்போது சென்னையின் பேட்டிங்கை மொத்தமாக காலி செய்தவர் மார்க்கெண்டே என்னும் இளம் சுழற்பந்துவீச்சாளர். அதேபோல் கொல்கத்தா அணியிலும் ஒருவர் இருக்கிறார். ஆஃப் பிரேக் பெளலரான ரானாவின் பெளலிங்கில்தான் கோலி, டி வில்லியர்ஸ் வீழ்ந்தனர். அதேபோல் ஸ்பின்னுக்கு சாதகமான சென்னை பிட்ச்சிலும் நடக்க வாய்ப்பிருக்கிறது. அதனால் ரானாவை சமாளிக்கும் ஸ்பெஷல் பேட்டிங் தோனியின் படைக்குத் தேவை.

5. தினேஷ் கார்த்திக்!

வங்களாதேசத்தை வீழ்த்தி இந்தியாவுக்கு கோப்பையை வாங்கிக்கொடுத்ததில் இருந்து நம்பிக்கையின் உச்சத்தில் இருக்கிறார் தினேஷ் கார்த்திக். பெங்களூரு அணிக்கு எதிராகவும் நாட் அவுட் பேட்ஸ்மேனாக களத்தில் நின்று அவர் அடித்த 35 ரன்கள் வெற்றிக்கானவை. தினேஷ் கார்த்திக் மண்ணின் மைந்தன் என்பதால் அவருக்கும் சென்னை பிட்ச்சின் தன்மைகள் தெரியும். அதனால் அவரும் நரேன், குல்தீப் யாதவ், பியூஷ் சாவ்லா, ரானா, ராபின் உத்தப்பா என ஸ்பின் மற்றும் மிதமான வேகப்பந்து வீச்சாளர்களையே அதிகம் இறக்குவார். நரேனைத் தவிர கொல்கத்தா அணியின் பந்துவீச்சாளர்களை சென்னை பேட்ஸ்மேன்கள் அவ்வளவாக சந்தித்ததில்லை. அதனால் பந்துவீச்சை கணித்து கொஞ்சம் நிதானமான பேட்டிங்கை ஆடினால் மட்டுமே சென்னையால் ரன் குவிக்க முடியும். குறிப்பாக ரெய்னா!

6. ஹர்பஜன், இம்ரான், ஜடேஜா!

சென்னை அணி சென்னை மைதானத்தை மனதில் கொண்டுதான் அதிகமான ஸ்பின்னர்களை அணிக்குள் எடுத்திருக்கிறது என்று சொல்வார்கள். ஆனால், சென்னையின் ஸ்பின்னர்கள் யாருமே மும்பை அணிக்கு எதிரான போட்டியில் மிரட்டவில்லை. ஸ்பின்னர்கள் மொத்தமே 5 ஓவர்கள்தான் வீசினார்கள். அதேபோல் ஹர்பஜன், இம்ரான் இருவருமே இன்றைய நிலையில் மிகவும் சூப்பரான ஸ்பின்னர்கள் என்று சொல்லமுடியாது. அதனால் ஸ்பின்னர்களை இன்றைய மேட்ச்சில் மிக கவனமாக தோனி பயன்படுத்த வேண்டும். சென்னையின் ஸ்பின் அட்டாக்கை ஆரம்பத்திலேயே குலைத்துவிட வேண்டும் என்பதுதான் எதிர் அணியின் திட்டமாக இருக்கும். அதனால் மும்பை போட்டியின்போது பெளலர்களை மாற்றி மாற்றி பயன்படுத்தியதுபோல தோனி மாற்றிக்கொண்டேயிருக்க வேண்டும்.

7. மன பலம்!

‘வி ஆர் பேக்’, ‘சென்னை சூப்பர் கிங்ஸ்தான் எப்பவுமே கெத்து’, ‘சென்னை போல வருமா’ என சென்னையை எவ்வளவுதான் ரசிகர்கள் புகழ்ந்தாலும் சென்னை அணியின் பலம், பலவீனம் என்ன என்பது தோனிக்குத் தெரியும், மும்பை போட்டியைவிட கொல்கத்தா அணிக்கு எதிரான இந்தப் போட்டி மிக முக்கியமானது. இதில் வெற்றிபெற்றால்தான் அது அணிக்குள் மிகப்பெரிய நம்பிக்கையைக் கொடுக்கும். அடுத்தடுத்த போட்டிகளுக்கு மிகப்பெரிய உத்வேகமாக இருக்கும். பேட்ஸ்மேனாக, கேப்டனாக தோனிக்கு இது முக்கியமான போட்டி.

Advertisement