- Advertisement -
ஐ.பி.எல்

ஐபில்…சர்வதேச கிரிக்கெட்டில் ஓய்வு…பின் 40 வயதிலும் சாதித்து காட்டிய வீரர்கள் – ஒரு ப்ளாஷ்பேக் !

பொதுவாகவே கிரிக்கெட் உலகில் 35ஐ தாண்டிவிட்டாலே எப்போது ஓய்வை பற்றி அறிவிக்கப்போகின்றீர்கள் என வீரர்களை பார்த்து ஊடகங்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பத்தொடங்கிவிடும்.உலகின் தலைசிறந்த ஆட்டக்காரர்கள் கூட 30வயது கடந்தபின் ஏதாவது ஒன்றிரண்டு தொடர்களில் சொதப்பினால் உடனே இந்த வீரரின் கதை இந்த தொடருடன் முடிந்தது என்று கட்டுக்கதை கட்டி எழுத ஆரம்பித்துவிடும் சில ஊடகங்கள்.அப்படி எழுதியதாலே வேறு வழியின்றி மனஉளைச்சலுக்கு ஆளாகி பின்னர் தனது ஓய்வை பற்றி வீரர்கள் அறிவித்த நிகழ்வுகளும் நடந்தது உண்டு.

அப்படி ஓய்வை அறிவித்த பின்னர் பல வீரர்கள் கிரிக்கெட் துறையின் பிற பிரிவுகளான பயிற்சி,வர்ணனையாளர் போன்ற பிரிவுகளை தேர்ந்தெடுத்து தங்களது மீதமுள்ள வாழ்க்கையை ஓட்டி வந்தனர்.அப்படிப்பட்ட அனுபவம் வாய்ந்த சிறந்த வீரர்களுக்கு கிடைத்த ஒரு பொக்கிஷமாக தான் ஆரம்ப காலத்தில் ஐபிஎல் பார்க்கப்பட்டது. இந்தியாவில் 2008ம் ஆண்டு முதன்முதலில் டி20 இந்தியன் பிரீமியர் லீக் தொடர் தொடங்கப்பட்டது. ஆரம்பத்தில் ஐபிஎல் தொடங்கப்பட்ட போதே கிரிக்கெட் நிர்வாகம் எதிர்பார்த்ததை விடவும் அதிகளவு இந்த தொடருக்கு ரசிகர்களிடையே ஆதரவு கிடைத்தது.

மறுபுறமோ இந்த ஐபிஎல் தொடரில் விளையாட ஓய்வுபெற்ற மூத்த வீரர்களும் பெரிதும் ஆர்வம் காட்டினர்.வயதானாலும் இன்னும் தாங்கள் சோர்ந்து போகவில்லை. இளம் வீரர்களுக்கு தாங்கள் சற்றும் சளைத்தவர்களல்ல என்பதை நிரூபிக்க அவர்கள் இந்த ஐபிஎல் தொடரை பயன்படுத்திக்கொண்டு அசத்த தொடங்கினர்.அப்படி சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வுபெற்ற பின்னரும் ஐபிஎல்-இல் ஆடி கலக்கிய சில வீரர்களை பற்றி காண்போம் வாருங்கள்.

- Advertisement -

1. முத்தையா முரளிதரன்.

உலகின் தலைச்சிறந்த பந்துவீச்சாளர்களில் ஒருவரான முத்தையா முரளிதரன் இலங்கைக்காக விளையாடினாலும் அவர் இந்தியாவை பூர்வீகமாக கொண்டவர்.தன்னுடைய மாயாஜால சுழல் வீச்சால் எதிரணியினரை திணறடிக்க செய்து 1300க்கும் மேற்பட்ட விக்கெட்டுகளை சர்வதேச போட்டிகளில் வீழ்த்தி சாதனை படைத்தவர்.ஐபிஎல்-இன் முதல் சீசன் தொடங்கப்பட்ட போது சென்னை அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்ட இவர் 2008 முதல் 2010 வரை சென்னை அணிக்காக விளையாடியவர். பின்னர் பெங்களூரு மற்றும் கேரளா அணிக்காக விளையாடிய இவர் ஐபிஎல்-இல் மொத்தம் 66 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இறுதியாக ஐபிஎல்-இல் இருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்த போது இவருக்கு வயது 42.

2. பிரவீன் டாம்பே.


தன்னுடைய 41வது வயதில் ஐபிஎல்-இல் கால்பதித்த இவர் ஒரு சர்வதேச போட்டிகளில் கூட விளையாடிய அனுபவமில்லாதவர். இருப்பினும் ஐபிஎல்-இல் ராஜஸ்தான் மற்றும் குஜராத் அணிகளுக்காக விளையாடி பல முன்னனி நட்சத்திர வீரர்களை தன்னுடைய திறமையான பந்துவீச்சால் அவுட்டாக்கியவர். இவருக்கு தற்போது வயது 46ஐ கடந்தாலும் இன்னும் இவர் ஐபிஎல்-இல் இருந்து தனது ஓய்வை அறிவிக்காதது குறிப்பிடத்தக்கது.
என்னதான் சிறந்த வீரராக இருப்பினும் வயதின் காரணமாக இந்தாண்டு இவரை ஏலத்தில் யாரும் எடுக்காதது வருத்தமான தகவல் தான்.

3. பிராட்ஹோக்.

ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளரான இவர் சர்வதேச போட்டிகளில் தனது ஓய்வை அறிவித்த பின்னர் நான்காண்டுகள் கழித்து இந்திய ஐபிஎல்-இல் தொடரில் 2012ம் ஆண்டு கால்பதித்தவர்.முதலில் ராஜஸ்தான் அணிக்காக விளையாடிய இந்த சுழற்பந்து வீச்சு ஜாம்பவான் பின்னர் கொல்கத்தா அணிக்காக சிலகாலம் விளையாடினார்.மொத்தம் இவர் விளையாடிய 21 ஐபிஎல் போட்டிகளில் 23 விக்கெட்டுகளை வீழ்த்திய இவர் தன்னுடைய 44வது வயதில் ஐபிஎல்-இல் இருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்தார்.

4. ஹைடன்.

ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர பேட்ஸ்மனான மேத்யூ ஹைடன் சென்னை அணிக்காக விளையாடி பல வெற்றிகளை பெற்றுத்தந்தவர்.மங்கூஸ் பேட் என்கிற குறுகிய நீள மட்டையை பிடித்து ஆடி பல சிக்ஸர்களை பறக்கவிட்டு எதிரணியினரை துவம்சம் செய்தவர்.2008 முதல் 2010ம் ஆண்டுவரை மொத்தம் இரண்டாண்டுகள் மட்டுமே விளையாடிய இவர் 32போட்டிகளில் 1107 ரன்களை விளாசினார். இறுதியாக இவர் ஐபிஎல்-இல் இருந்து தனது ஓய்வை அறிவிக்கும் போது வயது 39. இதேபோல பல வீரர்கள் வயதானாலும் தங்களது திறமையால் ஐபிஎல் தொடரில் அசத்தியுள்ளனர். அவர்களை பற்றி மற்றொரு கட்டுரையில் காண்போம்.

- Advertisement -