தேசத்துக்காக சுயநலமில்லாத முடிவு – பென் ஸ்டோக்சை பாராட்டும் இந்தியா முன்னாள் கேப்டன்

Ben Stokes
- Advertisement -

இங்கிலாந்து நம்பிக்கை நட்சத்திர ஆல்-ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக வெளியிட்ட திடீர் அறிவிப்பு அனைத்து ரசிகர்களையும் அதிர்ச்சியடைய வைத்தது. கடந்த 2011இல் இதே ஒருநாள் கிரிக்கெட்டில் அயர்லாந்துக்கு எதிராக அறிமுகமான அவர் அடுத்த சில மாதங்களில் டி20 கிரிக்கெட்டில் அறிமுகமாகி சிறப்பாக செயல்பட்டதால் 2013 முதல் டெஸ்ட் கிரிக்கெட்டிலும் அறிமுகமாகி தனது அபாரமான பேட்டிங் மற்றும் பவுலிங் திறமையால் 3 வகையான இங்கிலாந்து அணியிலும் முதன்மை வீரராக உருவெடுத்து நிறைய வெற்றிகளுக்கு பங்காற்றினார். கடந்த 2016இல் இந்தியாவில் நடந்த டி20 உலக கோப்பையில் கடைசி ஓவரில் 4 சிக்சர்களை வாரி வழங்கி கோப்பையையும் வெஸ்ட் இண்டீசுக்கு தாரைவார்த்த அவர் அதற்காக கடும் விமர்சனங்களை சந்தித்தார்.

இருப்பினும் அதற்காக மனம் தளராமல் தொடர்ந்து விளையாடிய அவர் 2019இல் சொந்த மண்ணில் நடந்த உலகக் கோப்பையில் சிறப்பாக செயல்பட்டு குறிப்பாக நியூசிலாந்துக்கு எதிரான இறுதிப் போட்டியில் 84 ரன்கள் குவித்து ஆட்டநாயகன் விருதை வென்று முதல் முறையாக இங்கிலாந்து உலகக் கோப்பையை முத்தமிட முக்கிய பங்காற்றினார். அதனால் உலக அளவில் நம்பர் ஒன் ஆல்-ரவுண்டர் என்ற மகத்தான பெருமையைப் பெற்ற அவர் சமீபத்தில் டெஸ்ட் கேப்டனாக பொறுப்பேற்றார்.

- Advertisement -

சுயநலமில்லா ஸ்டோக்ஸ்:
அந்த நிலைமையில் சமீபத்தில் இந்தியாவுக்கு எதிராக நடந்த ஒருநாள் தொடரில் 0, 21, 27 என சுமாராக செயல்பட்ட அவர் டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளில் மட்டும் கவனம் செலுத்துவதற்காக பணிச்சுமையை கருத்தில் கொண்டு ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து விடைபெறுவதாக 31 வயதிலேயே அறிவித்து ஆச்சரியப்படுத்தியுள்ளார். 3 வகையான கிரிக்கெட்டிலும் விளையாட தமது உடல் ஒத்துழைக்கவில்லை என்பதுடன் அனைவரும் தம்மிடம் எதிர்பார்க்கும் அளவுக்கு சிறப்பாக செயல்பட முடியாமல் இதர வீரர்களின் இடத்தையும் கெடுப்பதாக உணர்ந்ததால் இந்த முடிவை எடுத்துள்ளதாக அவர் அறிவித்துள்ளது மிகப்பெரிய பாராட்டுகளை பெற்றுள்ளது.

ஏனெனில் சர்வதேச அரங்கில் நிறைய வீரர்கள் ரன்களை அடிக்காமல் சுமாரான பார்மில் தடுமாறினாலும் தொடர்ந்து விளையாடி வரும் நிலையில் எதிர்பார்க்கும் அளவுக்கு சிறப்பாக செயல்பட முடியவில்லை என்பதால் அடுத்த வீரர்களுக்கு வழி விடுவதற்காக சுயநலமற்ற முடிவை அவர் எடுத்துள்ளார். இதுபற்றி தனது டுவிட்டரில் அவர் கூறியுள்ளது பின்வருமாறு.

- Advertisement -

“3 வகையான கிரிக்கெட்டிலும் விளையாட எனது உடல் ஒத்துழைக்கவில்லை. அத்துடன் அனைவரும் என்மீது வைத்துள்ள எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஜோஸ் பட்லர் போன்ற மற்றொரு வீரரின் இடத்தை கெடுப்பதாகவும் நான் உணர்கிறேன். ஏற்கனவே 11 வருடங்கள் இந்த வகையான கிரிக்கெட்டில் இங்கிலாந்துக்காக விளையாடி நிறைய நல்ல நினைவுகளை பெற்றுள்ள நான் மற்றொரு தரமான வீரருக்கு வழிவிட இந்த முடிவை எடுத்துள்ளேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

அசாருதீன் பாராட்டு:
இருப்பினும் வழக்கம் போல டெஸ்ட் மற்றும் டி20 கிரிக்கெட்டில் முழுமையான 100% அர்ப்பணிப்புடன் நாட்டுக்காக விளையாட உள்ளதாகவும் பென் ஸ்டோக்ஸ் அறிவித்துள்ளார். இதை தொடர்ந்து ஜூலை 19ஆம் தேதியான இன்று தனது சொந்த ஊரான துர்ஹாம் நகரில் துவங்கும் தென்  ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டியுடன் தனது சொந்த ரசிகர்களுக்கு முன்னிலையில் பென் ஸ்டோக்ஸ் விடைபெற உள்ளார்.

- Advertisement -

இந்நிலையில் தேசத்துக்காக சுயநலமற்ற வகையில் பென் ஸ்டோக்ஸ் முடிவெடுத்துள்ளதாக முன்னாள் இந்திய கேப்டன் முகமது அசாருதீன் தனது ட்வீட்டரில் பாராட்டியுள்ளார். இது பற்றி அவர் தெரிவித்துள்ளது பின்வருமாறு. “அவரின் உடலைப் பற்றி ஒரு வீரராக அவரை தவிர வேறு யாரும் தெரிந்து வைத்திருக்க முடியாது. இங்கிலாந்துக்காக தம்மால் முடிந்த அனைத்தையும் கொடுத்த ஒரு மிகச்சிறந்த வீரர் நன்றாக சிந்தித்து சுயநலமில்லாமல் சிறப்பான முடிவை எடுத்துள்ளார்” என்று பதிவிட்டுள்ளார்.

இங்கிலாந்தின் உலககோப்பை நாயகனாக போற்றப்படும் பென் ஸ்டோக்ஸ் ஓய்வு அதிர்ச்சியாக அமைந்தாலும் அவரின் இந்த நேர்மையான வெளிப்படையான சுயநலமற்ற முடிவை மதித்து சச்சின் டென்டுல்கர், விராட் கோலி உட்பட பல முன்னாள் வீரர்களும் ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படிங்க : விலகிய ஸ்டோக்ஸ் – பணத்துக்காக வீரர்களை மெஷின்களாக பார்க்கும் வாரியங்கள், நவீன கிரிக்கெட்டின் அவலம்

ஒருநாள் கிரிக்கெட்டில் இங்கிலாந்துக்காக 89 இன்னிங்ஸ்சில் 2919 ரன்களை 39.45 என்ற நல்ல சராசரியில் எடுத்துள்ள அவர் 74 விக்கெட்டுகளையும் எடுத்து தனது கேரியர் உச்சத்தில் இருக்கும்போது பிரியாத மனதுடன் விடை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement