நடப்பு 2025-ஆம் ஆண்டுக்கான 18-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரானது தற்போது இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் ஐந்தாவது லீக் போட்டி நேற்று அகமதாபாத் நகரில் நடைபெற்று முடிந்த வேளையில் அந்த போட்டியில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பஞ்சாப் கிங்ஸ் அணியானது 11 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியை அதன் சொந்த மண்ணில் தோற்கடித்து அசத்தலான வெற்றியை பதிவு செய்திருந்தது.
சுப்மன் கில் இன்னும் கேப்டன்சிக்கு தயாராகவில்லை : வீரேந்திர சேவாக்
அதிலும் குறிப்பாக நேற்று முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி குஜராத் அணியின் பந்துவீச்சை அடித்து நொறுக்கி துவக்கத்திலிருந்தே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்த பஞ்சாப் கிங்ஸ் அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 243 ரன்களை அடிக்க பின்னர் 244 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய குஜராத் அணியால் 232 ரன்களை மட்டுமே குவிக்க முடிந்தது.
இதன் காரணமாக பஞ்சாப் அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தலான வெற்றியை பதிவு செய்திருந்தது. இந்நிலையில் இந்த போட்டியின் போது குஜராத் அணி தோல்வியை சந்திக்க அந்த அணியின் கேப்டன் சுப்மன் கில் தான் காரணம் என்றும் அவரது மோசமான கேப்டன்சியால் தான் அந்த அணி தோல்வியை சந்தித்ததாகவும் முன்னாள் இந்திய வீரரான வீரேந்திர சேவாக் காட்டமாக சில கருத்துக்களை தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேசிய அவர் கூறுகையில் : இந்த போட்டியில் குஜராத் அணி தோல்வியை சந்திக்க முழு காரணமும் சுப்மன் கில் தான். அவரது மோசமான கேப்டன்சியால் தான் அந்த தோல்வியை சந்தித்திருக்கிறது. ஏனெனில் இந்தப் போட்டியின் போது பவர்பிளே ஓவர்களில் முகமது சிராஜை பயன்படுத்தி இருக்க வேண்டும். ஏனெனில் முகமது சிராஜ் புதுப்பந்தில் சிறப்பாக செயல்படக்கூடியவர்.
ஆனால் அவரை பாதியிலேயே நிறுத்தி விட்டு அர்ஷத் கானை கொண்டு வந்தார். அப்படி அர்ஷத் கான் வந்ததும் அந்த ஓவரில் 21 ரன்கள் சென்றது. அதேபோன்று டெத் ஓவர்களில் மிகச் சிறப்பாக பந்து வீசக்கூடிய ரபாடாவை முன்கூட்டியே கொண்டு வந்து மூன்று ஓவர்கள் வீசவைத்தும் தவறு செய்து விட்டார். ரபடா இறுதி நேரத்தில் பந்துவீச முடியாமல் போனதால் முகமது சிராஜ் அந்த இடத்தில் நிறைய ரன்களை வழங்கினார்.
இதையும் படிங்க : மும்பை வீரராக இருந்தும் ஷ்ரேயாஸ் ஐயர் இப்படி செய்தது ஆச்சரியமாக இருந்தது – அம்பத்தி ராயுடு பேட்டி
இப்படி எந்த பவுலரை எங்கு வீசவைக்க வேண்டும் என்று அவருக்கு தெரியவில்லை. இதனால் தான் சொல்கிறேன் சுப்மன் கில் இன்னும் கேப்டன்சிக்கு முழுமையாக தயாராகவில்லை மேலும் அவர் கேப்டன்சி திறனையும் இன்னும் முன்னேற்றிக் கொள்ளவில்லை என சேவாக் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.



