சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையே நேற்று நடந்த போட்டியில் முதலில் விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 216 ரன்களை அடித்தது. அதன் பின்னர் 217 ரன்கள் எடுத்தால் என்ற வெற்றி இலக்குடன் ஆடிய சென்னை அணி இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் 200 ரன்களை குவித்து 16 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியுற்றது. இந்த போட்டியில் தோனியின் மெதுவான பேட்டிங் தற்போது விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது.
இதுகுறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் சேவாக் பேசும்போது : மும்பை அணி போட்டியின் போது சாம் கரனை தோனி அவருக்கு முன்னதாக இறக்கினார். அப்போது அந்த போட்டி வெற்றியில் முடிந்தது. ஆனால் அதே முடிவை ராஜஸ்தான் போட்டியில் எடுத்திருக்கக் கூடாது. ஏனெனில் இந்த போட்டியின் மிடில் ஓவர்களில் ரன்கள் வரவில்லை. அதனால் டூபிளெஸ்ஸிஸ் உடன் இணைந்து தோனி அதிரடியாக ஆடி இருக்க வேண்டும். ஆனால் தோனி இறுதிவரை டார்கெட்டை அடைய முயற்சி செய்வது போல எனக்கு தெரியவில்லை.
மேலும் இறுதியில் 20 ஓவரில் தோனி அடித்த 3 சிக்சர்கள் டார்கெட்டுக்கு அருகில் கொண்டு சென்றது தான். ஆனால் அந்த 3 சிக்சர்களுமே தேவை இல்லாத ஒன்று. ஏனெனில் தோனி வீணடித்த பந்துகள் அதிகம் முன்கூட்டியே இறங்கி அதிரடியாக ஆகியிருந்தால் முடிவு மாறியிருக்கும். சாம் கரண் அவுட்டான உடனே தோனி இறங்கி அதிரடியாக ஆடியிருக்க வேண்டும். ஆனால் அவர் ஒன்றன்பின் ஒன்றாக அனைவரையும் இறக்கி விட்டு இறுதியில் பேட்டிங் செய்ய வந்தார் தோனி.
இதனால் சென்னை அணி தோற்றது. ஒருவேளை தோனி முன்கூட்டியே இறங்கி இருந்தால் மிடில் ஓவர்களில் ரன்கள் அடித்திருக்க முடியும். ஆனால் அதைவிடுத்து இறுதியாக இறங்கி கடைசி ஓவரில் 3 சிக்சர்கள் அடிப்பதால் எதுவும் மாறப்போவதில்லை. இந்த போட்டியில் பந்து வீச்சிலும் தோனியின் முடிவுகள் விசித்திரமாக இருந்தது.
ஜடேஜா, சாவ்லா என இருவரும் அதிக ரன்களை கொடுத்தாலும் அவர்களைத் தொடர்ந்து பந்துவீச வைத்தார். இது மொத்தத்தில் தோனியின் கேப்டன்சி திறனை குறைத்துள்ளது. மேலும் இந்த போட்டியை பொறுத்தவரை கேப்டன்சியில் அவருக்கு நான் 10 க்கு 4 மதிப்பெண்களை மட்டுமே தான் வழங்குவதாக அவர் கூறியது குறிப்பிடத்தக்கது.