வேற எந்த கேப்டனும் இப்படி செய்யமாட்டாங்க. இதனால் தான் தோனி ஸ்பெஷலானவர் – பாராட்டும் சேவாக்

Sehwag
- Advertisement -

ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த ஐபிஎல் 2022 கிரிக்கெட் தொடர் மார்ச் 26-ஆம் தேதியன்று கோலாகலமாக துவங்கியது. இந்தியாவின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான இந்த தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்த தொடருக்காக அனைத்து அணிகளைச் சேர்ந்த வீரர்களும் ரசிகர்களும் மிகுந்த ஆவலுடன் காத்திருந்த நிலையில் முதல் போட்டியில் களமிறங்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திரம் மற்றும் கேப்டன் எம்எஸ் தோனி கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக நேற்று முன்தினம் திடீரென அறிவித்தார்.

Dhoni-3

- Advertisement -

வித்யாசமான தோனி:
இதனால் அந்த அணி நிர்வாகமும் ரசிகர்களும் அதிர்ச்சிக்கும் ஆச்சரியத்திற்கும் உள்ளானார்கள். கடந்த 2008-ஆம் ஆண்டு ஐபிஎல் முதல் முறையாக தொடங்கப்பட்டபோது சென்னை அணியின் கேப்டன் பொறுப்பை ஏற்ற அவர் கடந்த வருடம் வரை அந்த அணியை சீரும் சிறப்புமாக வழிநடத்தினார் என்றே கூற வேண்டும். அதிலும் பஞ்சாப் போன்ற ஒருசில அணிகள் பிளே ஆப் சுற்றுக்குக்கூட தகுதி பெறுவதற்கு தவித்து வந்த நிலையில் தனது அபார கேப்டன்ஷிப் வாயிலாக சென்னைக்கு அடுத்தடுத்த வெற்றிகளை பெற்றுக்கொடுத்த அவர் ஒவ்வொரு வருடமும் குறைந்தது அந்த அணியை பிளே ஆப் சுற்றுக்கு அழைத்துச் சென்று வந்தார்.

மொத்தம் அவர் தலைமையில் 12 சீசன்களில் விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அதில் 11 முறை ப்ளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்று அதில் 9 முறை இறுதிப் போட்டியில் விளையாடி 4 கோப்பைகளை வென்று ஐபிஎல் வரலாற்றில் வெற்றிகரமான 2-வது அணியாக சாதனை படைத்துள்ளது. இதன் காரணமாக ஐபிஎல் வரலாற்றில் 2-வது வெற்றிகரமான கேப்டனாக சாதனை படைத்துள்ள எம்எஸ் தோனி 40 வயதைக் கடந்து விட்ட காரணத்தால் சென்னை அணியின் நலனை கருதி மற்றொரு முக்கிய வீரர் ரவீந்திர ஜடேஜாவிடம் கேப்டன் பொறுப்பை ஒப்படைத்துள்ளார். பொதுவாகவே வித்தியாசமான முடிவுகளை எடுத்து வெற்றி காணும் தோனி கடைசிவரை சென்னை அணியின் கேப்டனாக மட்டுமே விளையாடி ஐபிஎல் தொடரில் ஓய்வு பெறுவார் என அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால் இம்முறையும் வித்தியாசமான தைரியமான முடிவை எடுத்துள்ள அவர் ரவிந்திர ஜடேஜா தலைமையில் முதல் முறையாக ஒரு சாதாரண வீரராக உள்ளார்.

MS Dhoni Jadeja

ஸ்பெஷலான தோனி:
அபாரமான கேப்டன்ஷிப், அதிரடியான பினிஷிங், மின்னல்வேக விக்கெட் கீப்பிங், இளைஞர்களை வழி நடத்தும் கேப்டன் என பல பரிணாமங்களை கொண்ட தோனியிடம் நிறைய சிறப்பம்சங்கள் உள்ளது. அந்தவகையில் தோனியிடம் உள்ள ஒரு முக்கியமான சிறப்பம்சத்தை பற்றி இந்தியாவின் அதிரடி முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக் மனம் திறந்துள்ளார். இதுபற்றி அவர் பேசியது பின்வருமாறு. “வேறு ஏதாவது ஒரு ஐபிஎல் அணியாக இருந்திருந்தால் தீபக் சஹர் போன்ற ஒரு பவுலர் பவர்பிளே ஓவரின் முதல் 2 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை எடுத்து விட்டால் உடனே “இவரை கடைசிகட்ட ஓவர்களுக்காக மிச்சப்படுத்த வேண்டும்” என அந்த அணியின் கேப்டன் நினைப்பார். ஆனால் இறுதியில் ஜஸ்பிரித் பும்ரா, சஹர், ரபாடா அல்லது நோர்ட்ஜெ என யாராக இருந்தாலும் கடைசி கட்ட ஓவர்களில் அடி வாங்குவார்கள். அப்படிப்பட்ட நிலையில் சஹரின் திறமையை தோனி மிகச்சிறப்பாக பயன்படுத்தினார். அதுவும் ஒரு சில நேரங்களில் பவர்ப்ளே ஓவர்கள் முடிவதற்குள் அவரின் முழு 4 ஓவர்களையும் வீச வைத்துவிடுவார். எனவே தீபக் சஹரின் வெற்றியில் எம்எஸ் தோனியின் பங்கு உள்ளது” என கூறினார்.

- Advertisement -

அவர் கூறுவது போல கடந்த 2018-ஆம் ஆண்டு முதல் முறையாக சென்னை அணிக்காக விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்ட ராஜஸ்தானைச் சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் தீபக் சஹர் பவர்ப்ளே ஓவர்களில் சிறப்பாக பந்து வீசும் திறமை படைத்திருந்தார். அதை பார்த்த தோனி அவரை பெரும்பாலும் அந்த ஓவர்களில் பந்து வீசுவதற்கு வாய்ப்பளித்து முழுமையாக பயன்படுத்திக் கொண்டார். அதன் காரணமாக பவர்ப்ளே ஓவர்களில் நிறைய விக்கெட்டுகள் எடுத்த தீபக் சஹர் நாளடைவில் பவர் பிளே ஸ்பெஷலிஸ்ட் என தற்போது அழைக்கப்படுகிறார்.

Chahar4

சொல்லப்போனால் சென்னை அணியில் எம்எஸ் தோனியின் கீழ் விளையாடியதன் பின்புதான் இன்று இந்திய அணியில் ஒரு முக்கிய வீரராக அவர் உருவெடுத்துள்ளார். அதன் காரணமாக இந்த வருடம் 14 கோடிக்கு சென்னை அணிக்காக விளையாட ஒப்பந்தமான அவர் காயத்தால் விலகியுள்ளார். இருப்பினும் அவரின் இந்த வளர்ச்சிக்காக வித்தியாசமாக ஸ்பெஷலாக சிந்தித்த தோனியை தான் பாராட்ட வேண்டுமென சேவாக் கூறியுள்ளார்.

வீரத்தை விட விவேகம் பெரிது:
“இந்தியாவின் கேப்டனாக பொறுப்பேற்ற பின் தோனி ஒரு முடிவில் தெளிவாக இருந்தார். அதாவது 150 கிலோ மீட்டர் வேகத்தில் பந்து வீசினாலும் ரன்களை வாரி வழங்கும் பவுலர்களை அவர் விரும்பவில்லை. அதேசமயம் மெதுவாக வீசினாலும் துல்லியமாக பந்துவீசுபவர்களையே அவர் விரும்பினார். இதுதான் கடந்த 2007 முதல் இப்போதுவரை தோனியின் மன நிலைமையில் இருந்து வருகிறது” என இதுபற்றி வீரேந்திர சேவாக் மேலும் தெரிவித்தார்.

Sehwag

பொதுவாக நிறைய அணிகளும் அதன் கேப்டன்களும் 140 – 150 கிலோ மீட்டர் அசுர வேகத்தில் பந்து வீசும் பவுலர்களை எவ்வளவு கோடிகள் செலவானாலும் வாங்கிவிட வேண்டும் என நினைப்பார்கள். ஆனால் வீரத்தை விட விவேகம் மட்டுமே பெரிது என நம்புபவராக இருக்கும் தோனி குறைவான வேகத்தில் பந்து வீசினாலும் துல்லியமாக செயல்பட்டு விக்கெட்டுகளை எடுக்கும் பவுலர்களையே விரும்பினார் என பலரும் அறியாத தோனியின் ஒரு முக்கியமான கேப்டன்சிப் பண்பை சேவாக் வெளிப்படுத்தினார். அதுதான் ஆரம்பம் முதல் இப்போது வரை தோனியின் வெற்றிக்கான பல ரகசியங்களில் ஒன்றாக உள்ளது என வீரேந்திர சேவாக் கூறியுள்ளார்.

Advertisement