
இந்திய அணியின் முன்னாள் கேப்டனான ரோஹித் சர்மா டி20 மற்றும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றதை அடுத்து தற்போது ஒருநாள் போட்டிகளில் மட்டுமே இந்திய அணிக்காக விளையாடி வருகிறார். தற்போது 39 வயதான ரோஹித் சர்மா அடுத்த ஆண்டு தென்னாப்பிரிக்கா மற்றும் ஜிம்பாப்வே ஆகிய நாடுகளில் நடைபெறும் ஒருநாள் உலகக்கோப்பை தொடர் வரை தான் விளையாட வேண்டும் என்று விருப்பத்தையும் தெரிவித்து விட்டு தொடர்ந்து விளையாடி வருகிறார்.
அந்த வகையில் தற்போது ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடி வரும் அவர் இனிவரும் தொடர்களிலும் மிகச் சிறப்பாக செயல்பட்டு அடுத்த உலக கோப்பை தொடரில் விளையாட வேண்டும் என்பதே பலரது எதிர்பார்ப்பாகவும் இருந்து வருகிறது.
இவ்வேளையில் ரோகித் சர்மா ஓய்வு பெற்றதற்கு பிறகு ஒருநாள் போட்டிகளுக்கான இந்திய அணியில் துவக்க வீரராக யாருக்கு விளையாட வாய்ப்பு கிடைக்கும்? என்பது குறித்த எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. இந்நிலையில் ரோகித் சர்மாவிற்கு அடுத்து இந்திய ஒருநாள் அணியின் துவக்க வீரருக்கான வாய்ப்பு யாஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கு கிடைக்கும் என இந்திய அணியின் முன்னாள் வீரரான வீரேந்திர சேவாக் தனது கணிப்பினை வெளிப்படுத்தி உள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர் கூறுகையில் : தற்போதுள்ள இந்திய அணியில் துவக்க வீரருக்கான இடம் காலியில்லை. ஆனால் எதிர்காலத்தில் ரோகித் சர்மா ஓய்வுபெறும் பட்சத்தில் ஜெய்ஸ்வால் அந்த இடத்திற்கு வருவார் என்று நான் எதிர்பார்க்கிறேன். ஏனெனில் மூன்று வகையான போட்டிகளிலும் விளையாடும் திறமை கொண்ட அவருக்கு தற்போதைய இந்திய அணியில் இடம் கிடைக்கவில்லை.
இதையும் படிங்க : டி20 உலககோப்பை வரலாற்றிலேயே முதல் வீராங்கனையாக ஷபாலி வர்மா நிகழ்த்திய – மாபெரும் சாதனை
ஆனால் நிச்சயம் அவர் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளுக்கான இந்திய அணியில் இடம் பெறுவார் என்பதில் எனக்கு நம்பிக்கை இருக்கிறது. இதுவரை தனக்கு கிடைத்த வாய்ப்புகளில் மிகச் சிறப்பாக செயல்பட்டுள்ள அவர் இந்திய அணியின் எதிர்கால நட்சத்திர வீரராகவும் திகழ்வார் என்பதில் சந்தேகம் இல்லை என்றும் சேவாக் கூறியது குறிப்பிடத்தக்கது.