இந்த வருட ஐபிஎல் தொடரில் பலம்வாய்ந்த மும்பை அணியை வீழ்த்தி முதல் போட்டியிலேயே வெற்றி கணக்கை துவக்கிய சென்னை அணிக்கு அடுத்தடுத்து இரண்டு ஆட்டங்களில் (ராஜஸ்தான், டெல்லி) ஆகிய அணிகளுக்கு எதிராக மோசமான தோல்வியை சந்தித்து ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக இந்த இரண்டு போட்டியிலும் சென்னை அணியின் முக்கிய வீரரான ராயுடு விளையாட முடியாமல் போனது சென்னை அணிக்கு பெருத்த பின்னைடைவை தந்தது.
முதல் போட்டியில் தனியாளாக நின்று தனது சிறப்பான ஆட்டத்தை சென்னை அணிக்காக கொடுத்த ராயுடுவால் அடுத்த இரண்டு போட்டிகளில் ஆடமுடியாமல் போனது. இந்த விடயமே சென்னை அணிக்கு தோல்வியை தந்தது என்று ரசிகர்கள் பலரும் கூறிவரும் நிலையில் சென்னை அணி இந்த வருட ஐபிஎல் தொடரில் “பிளேஆப்” சுற்றுக்காவது முன்னேறுமா ? ஆகாதா ? என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
ஏனெனில் டூபிளெஸ்ஸிஸ் மட்டுமே தற்போது ஆறுதல் அளிக்கும் விதமாக விளையாடி வருகிறார். அவரை தவிர வேறு யாரும் அந்த அளவுக்கு சிறப்பாக விளையாடவில்லை. அதிலும் குறிப்பாக துவக்க வீரர் முரளி விஜய் மூன்று போட்டிகளிலும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறி வருகிறார். அவரைத்தவிர, கெய்க்வாட், கேதார் ஜாதவ், தோனி, ஜடேஜா என யாரும் பெரிய அளவில் திறமையை வெளிப்படுத்த வில்லை. வெளிப்படையாக சொல்லப்போனால் சென்னை அணியின் பேட்டிங் படுமோசம் என்று கூறி ரசிகர்கள் வருத்தப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் தொடர்ந்து சிஎஸ்கே வீரர்கள் வெளிப்படுத்தும் இந்த மோசமான ஆட்டம் குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் சேவாக் தனது ட்விட்டர் பக்கத்தில் கிண்டலான ஒரு விமர்சனத்தை பதிவிட்டுள்ளார். அதில் சிஎஸ்கே-வின் பேட்டிங் சரி இல்லை. அவர்கள் சரியாக ஆடுவது கிடையாது. அவர்கள் இனிமேல் மைதானத்திற்குள் பேட்டிங் செய்ய வரும்போது கொஞ்சம் குளுக்கோஸ் குடித்துவிட்டு வரவேண்டும் என்று கிண்டலாக குறிப்பிட்டுள்ளார்.
Chennai ke batsman simply not getting going. Glucose chadwaake aana padega next match se batting karne.
— Virender Sehwag (@virendersehwag) September 26, 2020
என்னதான் சிஎஸ்கே அணி மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தாலும் சிஎஸ்கே அணியின் ரசிகர்கள் எப்போதும் அணியை விட்டு கொடுத்ததில்லை. மீண்டும் சிஎஸ்கே அணி சிறப்பாக பழைய ஃபார்முக்கு திரும்பும் என்று கூறி வருவது மட்டுமின்றி சேவாக்கின் இந்தப் பதிவினால் ரசிகர்கள் அனைவரும் சேவாக்கின் இந்த பதிவிற்காக அவரையும் விமர்சித்து வருவது குறிப்பிடத்தக்கது.