
அமெரிக்காவில் 2025 மேஜர் லீக் டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. அத்தொடரில் ஜூன் 28ஆம் தேதி நடைபெற்ற போட்டியில் எம்ஐ நியூயார்க் அணியை சீட்டல் ஆர்காஸ் 3 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது. கடந்த வருடம் கடைசி 5 போட்டிகளில் தோற்ற சீட்டல் அணி இந்த வருடம் முதல் 5 போட்டிகளில் தோற்று தொடர்ச்சியாக 10 தோல்விகளை சந்தித்து பாதாளத்தில் திண்டாடியது.
அந்த சூழ்நிலையில் நியூயார்க் அணிக்கு எதிரான போட்டியில் கடைசி பந்தில் 6 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது பொல்லார்ட் வீசிய கடைசி பந்தில் சிக்சர் அடித்த ஹெட்மயர் 97* ரன்கள் விளாசி சீட்டல் அணிக்கு அற்புதமான வெற்றியைப் பெற்றுக் கொடுத்தார். அதைத் தொடர்ந்து ஜூன் 29ஆம் தேதி இந்திய நேரப்படி காலை 6.30 மணிக்கு டாலஸ் நகரில் 20வது போட்டி நடைபெற்றது.
அந்தப் போட்டியில் லாஸ் ஏஞ்சல்ஸ் நைட் ரைடர்ஸ் மற்றும் சீட்டல் ஓர்காஸ் அணிகள் மோதின. அதில் டாஸ் வென்ற சீட்டல் முதலில் பவுலிங் செய்வதாக அறிவித்தது. அதை அடுத்து களமிறங்கிய லாஸ் ஏஞ்சல்ஸ் 20 ஓவரில் 202/4 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ஆண்ட்ரே ரசல் 65* (39), சைப் பாதர் 41 (21), ரோவ்மன் போவெல் 43* (21) ரன்கள் அடித்து அசத்தினார்கள்.
சீட்டல் அணிக்கு அதிகபட்சமாக வக்கார் சலாம்கெல் 2 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார். அடுத்ததாக விளையாடிய சீட்டல் அணிக்கு துவக்க வீரர் ஜோஸ் ப்ரவுன் டக் அவுட்டானார். ஆனால் அடுத்ததாக வந்த அமெரிக்க வீரர் ஆரோன் ஜோன்ஸ் அதிரடியாக விளையாடினார். அவருடன் சேர்ந்து விளையாடிய ஜஹாங்கீர் 43 (31) ரன்கள் விளாசி அவுட்டானார்.
மறுபுறம் தொடர்ந்து அசத்திய ஜோன்ஸ் அரை சதத்தை அடித்து 38 பந்துகளில் 78 ரன்களை தெறிக்க விட்டு விக்கெட் இழந்தார். அடுத்ததாக வந்த ஹென்றிச் க்ளாஸென் 5 ரன்னில் அவுட்டானாலும் சிம்ரோன் ஹெட்மையர் சரவெடியாக விளையாடி தம்முடைய அணிக்கு வெற்றிப் பாதைக்கு அழைத்து வந்தார். ஆனால் எதிர்ப்புறம் கேப்டன் சிக்கந்தர் ராசா 4 (7) ரன்னில் அவுட்டாகி பின்னடைவை ஏற்படுத்தினார்.
இருப்பினும் அதற்கெல்லாம் அசராத ஹெட்மையர் அரை சதத்தை அடித்து அசத்தினார். அவருடைய ஆட்டத்தால் வெற்றியை நெருங்கிய சீட்டல் அணிக்கு கடைசி ஓவரில் 5 ரன்கள் தேவைப்பட்டது. அந்த ஓவரை வீசிய ஷேட்லே வேன் 1, 0, 1, 0 என முதல் 4 பந்துகளில் 2 ரன் மட்டுமே கொடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் 5வது பந்தில் சிக்ஸரை பறக்க விட்ட ஹெட்மையர் மொத்தம் 4 பவுண்டரி 6 சிக்ஸருடன் 64* (26) ரன்களை 246.15 ஸ்ட்ரைக் ரேட்டில் விளாசி மாஸ் ஃபினிஷிங் கொடுத்தார்.
இதையும் படிங்க: பந்துவீச்சில் மட்டுமல்ல.. பேட்டிங்கின் மீதும் கவனத்தை திருப்பிய முகமது சிராஜ் – பயிற்சியில் ஏற்பட்ட நிகழ்வு
அதனால் 19.5 ஓவரில் 206/5 ரன்களை எடுத்த சீட்டல் 2வது வெற்றியைப் பெற்று புள்ளில்பட்டியலில் 4வது இடத்திற்கு முன்னேறியது. லாஸ் ஏஞ்சல்ஸ் அணிக்கு அதிகபட்சமாக ஜேசன் ஹோல்டர் 2, டன்வீர் சங்கா 2 விக்கெட்டுகள் எடுக்கும் 6வது தோல்வியை தவிர்க்க முடியவில்லை.